மார்ச் 8 உலக மகளிர் தினம் ஐ.நா சபையால் “பெண்களையும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கான உத்வேகம்” அளிக்கிற நாள் என்ற முழக்கம் தரப்பட்டுள்ளது. சோசலிசத்தை நோக்கிய பயணமே இந்த இலக்கை உறுதி செய்வதாக இருக்குமென்ற தெளிவோடு பயணிக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்) உலக மகளிர் தின வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறது.
போராட்ட பாரம்பரியமிக்க உலக மகளிர் தினத்தின் உயிர்ப்பை தக்க வைக்க வேண்டிய கடமை நம் முன்னால் உள்ளது. வெறும் வணிக நாளாக, பெண்களின் பயன்பாட்டுக்கான பொருள்களின் சந்தை நாளாக மார்ச் 8 ஐ மாற்றுவதற்கு முதலாளித்துவ உலகம் முயற்சி செய்து வரும் வேளையில் பாலின சமத்துவம் நோக்கிய பயணம் குறித்த வரலாறு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட வேண்டிய கடப்பாடு இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு சக்திகளுக்கு இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டுகிறது.
உலகம் முழுவதும் – குறிப்பாக இந்தியாவிலும் வலதுசாரி கருத்தியல் பாலின ஒடுக்குமுறையை அதிகரிக்க செய்துள்ளது. 2022 இல் இந்தியா முழுமையும் 4,45, 526 தாக்குதல்கள் பெண்களின் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு மணி நேரத்திற்கு 51 முதல் தகவல் அறிக்கை பெண்கள் மீதான தாக்குதல்களுக்காக பதிவாகியுள்ளது. இந்தியாவிலேயே அதிகமான பாலின வன்முறைகள் நடந்துள்ள மாநிலமாக உத்தரப்பிரதேசம் இருப்பது இந்துத்துவா கருத்தியல் எவ்வாறு பெண்களுக்கு அச்சுறுத்தலாக மாறுகிறது என்பதற்கு சாட்சியமாகும். இந்தியாவில் சராசரியாக 1 லட்சம் பெண்களுக்கு 66.4 பெண்கள் பாலின வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த சராசரி தலைநகர் டெல்லியில் 144.4 ஆக இருப்பது நம்மை தலைகுனிய வைக்கும் தகவல் ஆகும். பாலின வன்முறைகளில் 7 சதவீதம் பாலியல் வல்லுறவாக இருக்கிறது என்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது. கும்பல் பாலியல் வல்லுறவு குற்றங்கள் அதிகரித்துள்ளன. கருமுட்டை விற்பனை, கருப்பை வாடகை உள்ளிட்டு பெண்களின் அங்கங்கள், முதலாளித்துவ சமூக அமைப்பில் வணிகப் பொருளாகி வருகின்றன. பாஜக ஆட்சியின் 10 ஆண்டுகள் மனுவாத சிந்தனைகள் மேலோங்குகிற காலமாக இருந்துள்ளது. இது ஆணாதிக்க சமூகத்தை வலுப்படுத்துவதாகவும், பெண்களின் உரிமைகளுக்கு பெரும் சவால்களை விடுக்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.
ஒன்றிய அரசு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி விட்டதாக பாஜக பீற்றிக் கொள்வது மக்களை ஏமாற்றுவது ஆகும். 10 ஆண்டு ஆட்சி காலத்தில் கடைசி ஆண்டு வரை ஒரு துரும்பை கூட நகர்த்தாமல், தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி வரையறை ஆகிய நிபந்தனைகளை இணைத்து மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது. சட்டம் இல்லாமல் காலம் தள்ளியது போதாது என்று இப்போது சட்ட பூர்வமாகவே காலம் தள்ள பாஜக அரசு முனைந்திருப்பது அப்பட்டமான ஏமாற்று வித்தையே ஆகும்.
பெண்களின் வேலை வாய்ப்புகளும் பெரும் அபாயத்திற்கு ஆளாகி உள்ளன. வளர்ந்து வரும் பசுமை சக்தி வேலை வாய்ப்புகளில் பெண்களின் சதவீதம் வெறும் 11 சதவீதம் எனில் புதிய இந்தியாவில் பெண்களுக்கான இடம் பழமையான சிந்தனைகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதுதான். உயர் கல்வி செல்லும் பெண்களின் சதவீதம் குறைகிறது. கிராமப் புறங்களில் 100 நாள் வேலைத் திட்டம் சிதைக்கப்படுகிறது.
கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு “பெண்களை அதிகாரப் படுத்தல்” என்ற வகையில் எடுத்து வரும் முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. தமிழகத்திலும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ 1000 மாதாந்திர உதவித் தொகை, கட்டணம் இல்லா நகரப் பேருந்து பயணம் ஆகியன அடித்தள பெண்களின் பொருளாதார பங்கேற்பிற்கு வலு சேர்த்துள்ளது.
சாதி ஆணவக் கொலைகள் பெண்களின் திருமணத் தெரிவு உரிமையை கேள்விக்கு ஆளாக்கும் கொடூர ஆயுதமாகும். சாதித் தூய்மையை பாதுகாக்கும் “கடமையை” பெண்கள் மீது சுமத்தி அதைப் “பாதுகாக்க” தவறினால் தண்டனை வழங்கும் மனுவாத சிந்தனையின் விளைவாகும். சாதி மறுப்பு திருமண தம்பதியருக்கு பாதுகாப்பு இல்லங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது.
ஆகவே பாலின சமத்துவம் நோக்கிய பயணம் அரசியல், பொருளாதார, சமூக தளங்களில் ஒரு சேர முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. இத்தகைய தடைகளை மீறி சமூகத்தில் பல்வேறு தளங்களில் சாதனை புரிந்து வரும் பெண்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உலக மகளிர் தினத்தில் மனமாரப் பாராட்டுகிறது.
மேலும், மனுவாத கருத்தியலையும், வாழ்வாதாரத்தை பாதிக்கிற பொருளாதார கொள்கைகளையும் தீவிரமாகப் பின்பற்றி வரும் மோடி அரசை 2024 மக்களவைத் தேர்தலில் ஆட்சியிலிருந்து அகற்றுவதே உலக மகளிர் தினத்தன்று எடுக்க வேண்டிய உறுதிமொழியாகும்.
பாலின ஒடுக்குமுறை, சாதி பாகுபாடு, மதவெறி முயற்சிகளை முறியடித்து முன்னேற உறுதி ஏற்கிற நாளாக உலக மகளிர் தினத்தை அனுசரிப்போம், இதற்கான களங்களில் வலிமையாக வினையாற்றுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது. உலக மகளிர் தின வாழ்த்துக்களை உரித்தாக்கி கொள்கிறது.
(கே.பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்