கடிதங்கள்செய்தி அறிக்கை

சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்திட நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தனிச் சிறப்பு சட்டம் இயற்றிட வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் கடிதம்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே

பெறுநர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
தலைமைச்செயலகம்
தமிழ்நாடு அரசு
சென்னை.


பொருள் : சாதிய துவேசத்தின் காரணமாக நடைபெற்று வருகிற சாதி ஆணவப்படுகொலைகளைத் தடுத்திட நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தனிச் சிறப்புச் சட்டம் இயற்றிடக் கோருதல்..

மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்!
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”
என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் இயம்பிய சாதி மறுப்புப் பாரம்பரியம் கொண்டது தமிழ்நாடு. இத்தகைய நமது தமிழ்நாட்டில் சாதிய துவேசத்தின் காரணமாக சாதி ஆணவப்படுகொலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது கவலையளிக்கிறது. இதனை தடுத்து நிறுத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆண், பெண் இருபாலாருக்கும் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க இருக்கிற சட்டபூர்வமான உரிமை இங்கே சாதியின் பெயரால் பறிக்கப்படுகிறது.


உலகம் முழுவதும் பெண் சமூகம் எதிர்கொள்கிற சவால்களை விட, இந்திய சமூகம் சாதி என்கிற கூடுதல் சுமையை பெண்கள் மீது சுமத்தியிருக்கிறது. சாதி மறுப்புத் திருமணங்கள் இந்நாட்டின் சாதிய முறைமைக்கும் ஆணாதிக்கத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இதன் காரணமாகவே சுயதேர்வின் அடிப்படையில் வாழ்க்கை இணையைத் தேர்வு செய்துகொள்கிற இளம் தம்பதியர்கள் தமிழ்நாட்டிலும், நாடு முழுவதிலும் கொடூரமாகக் கொல்லப்படுகின்றனர்.
சாதிய அமைப்புகள் பல்வேறு வகையான தண்டனைகளை வழங்கி, அச்சத்தை உருவாக்கி சுய தேர்வு திருமணங்களை தடுத்து நிறுத்த விழைகின்றனர் ; பழக்க வழக்கம், சம்பிரதாயம், மரபு என்பவைகளால் நியாயப்படுத்துகின்றனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளான வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், தன் உடலின் மீதான உரிமை, யாருடன் வாழ வேண்டும் என்கிற உரிமை ஆகியவற்றை இச்செயல்கள் மீறுகின்றன.


‘கௌரவம்’, சாதித் தூய்மை என்ற பெயரால் நடைபெறும் கொலை மற்றும் குற்றங்களுக்கு தண்டனை வழங்கக்கூடிய சட்டம் ஏதும் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் இல்லை. இந்நிலையில் சாதி, மத அமைப்புகள் அல்லது சமூகப் பஞ்சாயத்துகள், சட்டத்துக்குப் புறம்பாக நடத்தப்படும் கொடூரக் குற்றங்கள் அவற்றில் ஈடுபடும் பஞ்சாயத்துகள் மற்றும் நபர்கள் என ஒட்டுமொத்த குற்றத்தையும் கணக்கில் கொண்டு தண்டனைகள் வழங்கக்கூடிய சட்டம் தேவையாக உள்ளது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் இது தொடர்பான பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் ரிட் மனு 26734 / 2014 மீது 23.02.2015 அன்று நீதிபதி கே. கண்ணன் அளித்துள்ள தீர்ப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


“பெற்றோர், உறவினர்கள், அதிகாரப்பூர்வமற்ற சமூகப் பஞ்சாயத்துகள் மூலம் தங்களின் உயிருக்கு அபாயம் இருப்பதாக தம்பதியர்களிடமிருந்து வருகிற புகார்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் தனிப்பிரிவு இருக்க வேண்டும். தங்களுக்கு அபாயம் உள்ளதெனக் கருதும் பட்சத்தில் வயது வந்த ஒருவரை பெற்றோரிடம் திருப்பி அனுப்ப காவல்துறை எந்த முயற்சியையும் எடுக்கக்கூடாது. உசிலம்பட்டி விமலாதேவி சாதி ஆணவப் படுகொலையைத் தொடர்ந்து விமலாதேவியின் இணையர் திலீப்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு எண் 26991 / 2014 என்ற வழக்கில் நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் 13.04.2016 அன்று வழங்கியுள்ள தீர்ப்பு’ சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்றப்படவேண்டும்” என்று அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது. அத்தகைய தனிச் சட்டம் இயற்றப்படுகிறவரை சாதி மறுப்புத் திருமண தம்பதிகளைப் பாதுகாப்புதற்கு சிறந்த வழிகாட்டுதல்களையும் உத்தரவாக வழங்கியிருக்கிறது.


சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியினரின் புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுத்திட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட வேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி, மாவட்ட ஆதி திராவிட நல அதிகாரி ஆகியோர் சிறப்புப் பிரிவின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். புகார்களை நேரிலோ, தொலைபேசியிலோ பெறுவதில் துவங்கி, தற்காலிக தங்குமிடத்தில் தங்கவைத்து பாதுகாப்பு வழங்குவது வரை இந்தச் சிறப்புப் பிரிவு பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக, 24 மணிநேரமும் செயல்படக்கூடிய ஒரு தொலைபேசி எண்ணையும் உருவாக்க வேண்டும் என்பது உள்பட சாதி மறுப்பு இணையரின் பாதுகாப்பிற்கு ஒன்பது வழிகாட்டல்களையும் வழங்கி இருக்கிறது.


மேற்கண்ட முக்கியத்துவம் வாய்ந்த வழிகாட்டல்படி சிறப்பு பிரிவுகளை அன்றைய தமிழ்நாடு அரசு ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் (வழக்கு எண் 460/2017) நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசின் அன்றைய உள்துறை செயலாளர் திரு அபூர்வ வர்மா, இ.ஆ.ப. அவர்கள், சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், மாநகரங்களிலும் ரிட் மனு 26991/2014ன் படி சிறப்பு பிரிவுகள் தற்பொழுது அமைக்கப்பட்டுவிட்டது எனவும், சிறப்பு பிரிவுகளின் அதிகாரிகள் பெயர் மற்றும் தொலைபேசி எண்களையும் தெரிவித்திருந்தார். ஆனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்காக அன்றைய அரசால் பெயரளவிற்கே இப்பிரிவுகள் அமைக்கப்பட்டன. இச்சிறப்பு பிரிவுகள் செயல்பாட்டிற்கு வரவில்லை. எனவே, தனிச்சிறப்பு சட்டம் இயற்றப்படுகிற வரை நீதிமன்ற உத்தரவின்படி இச்சிறப்பு பிரிவுகள் செயல்படுத்தப்பட வேண்டும்.


அதே போல், தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை விதி எண் 123ன் கீழ் “கௌரவம் மற்றும் மரபு என்ற பெயரில் நிர்பந்தம், கொலை மற்றும் குற்றங்கள் தடுப்பு மற்றும் தண்டனை மசோதா 2015” முன்வடிவு என்ற பெயரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் அப்போதய சட்டமன்ற குழு தலைவர் அ.சவுந்தரராசன் 29.9.2015 அன்று பேரவைச் செயலகத்தில் சமர்பித்ததையும் அன்றைய அரசு கிடப்பில் போட்டுவிட்டது.


இந்நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கண்டவைகளை பரிசீலனை செய்து சாதி ஆணவப்படுகொலைகளையும், இது தொடர்பான குற்றங்களையும் தடுப்பதற்கு சாதி ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான தனிச்சிறப்பு சட்டம் நடப்பு கூட்டத் தொடரிலேயே இயற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள
கே.பாலகிருஷ்ணன்
மாநில செயலாளர்