பள்ளி மாணவர்களிடையே சமத்துவ உணர்வை வளர்ப்பதற்காக நீதிபதி சந்துரு ஆணையம் வழங்கியுள்ள பரிந்துரைகளை படிக்காமலேயே எதிர்க்கும் பாஜகவின் வன்ம அறிக்கைக்கு சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் சில பள்ளிகளில் நடைபெற்ற விரும்பத்தகாத தீண்டாமை வன் குற்றங்களைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு ஆணையத்தை தமிழ்நாடு அரசு நியமித்தது. பல்வேறு தரப்பினரிடமும் கருத்துக்களைப் பெற்ற அந்த ஆணையம் அனைத்து கருத்துக்களையும் ஆழமாக ஆய்ந்து விரிவான அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரிடம் வழங்கியுள்ளது. அந்த அறிக்கையின் சில தலைப்புகள் ஊடகங்களில் செய்தியாகின. அச்செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு அறிக்கையின் உள்ளடக்கம் என்னவென்று தெரியாமலேயே அறிக்கையை நிராகரிப்பதாக பாஜக தீர்மானம் நிறைவேற்றியது பொதுவெளியில் கடுமையான விமர்சனத்திற்கும், கேலிக்கும் ஆளாகியுள்ளது. இளம் மாணவ நெஞ்சங்களில் சாதியப் பாகுபாடு எனும் சாக்கடையை ஏன் கலக்க வேண்டும்? அதற்கு ஆதரவாக நிற்கும் பாஜகவின் நோக்கம் என்ன? என்ற கேள்விகள் எழுந்தன. இப்படி தங்களின் நிலைப்பாடு பொதுவெளியில் அம்பலப்படுவதால் ஆத்திரம் கொண்டு பாஜக மீண்டும் ஒரு அபத்தமான அறிக்கையை நீதிபதி சந்துருவை குறிவைத்து வெளியிட்டுள்ளது.
நீதிபதி சந்துரு தனது நேர்மையான செயல்பாடுகளால் தமிழ்நாட்டு மக்களிடம் நன் மதிப்பை பெற்றவர் என்பதால் பாஜக அவரை நோக்கி பாய்ந்து பிடுங்குகிறது. சந்துரு கேட்ட கேள்விகள் நேரடியானவை. ஒன்பது மாதங்களாக தயாரிக்கப்பட்ட அறிக்கையையும், பரிந்துரைகளையும் உள்வாங்காமல் முற்றாக நிராகரிக்க வேண்டுமென பாஜக செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது ஏன்?, வாழ்க்கை நன்நெறிகளை மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதை கண்டு பாஜக ஏன் பதறுகிறது?
நாட்டிலேயே அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் கேரளாவும், தமிழ்நாடும் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், பாஜக பல ஆண்டுகளாக ஆளும் மத்திய பிரதேச மாநிலம் 42 நூலகங்களை மட்டுமே கொண்டு மிக மிக பின் தங்கியுள்ளது என்ற உண்மையை பாசிச சக்திகளால் மறைக்கத்தான் முடியுமா?
“தீண்டாமை ஒரு பெருங்குற்றம் – ஒழிக்கப்பட வேண்டும்” என்ற உணர்வுடன் தான் தமிழ்நாட்டின் பாடநூல்கள் வெளி வருகின்றன. அதை மாணவர்கள் மனதிலும் வலுவாக ஊன்றச் செய்வதன் மூலமே சாதிய சிந்தனையை பின்தள்ளி சமத்துவ இலக்கை நோக்கி முன்னேற முடியும். ஆனால், மாணவப் பருவத்திலேயே சாதியாக அவர்களை பிளவுபடுத்தி சாதிய உணர்வை கெட்டிப்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயத்திற்கு ஏங்கும் பாஜகவிற்கு இந்த சமத்துவத்திற்கு நடவடிக்கை எட்டிக்காயாக கசக்கிறது.
மாணவர்களை ஜனநாயக, அரசியல் விழிப்போடு உருவாக்க உதவிடும் மாணவர் பேரவை தேர்தல்களை பற்றி திரித்துக் கூறும் பாஜகவிற்கு அவர்களின் வரலாற்றை நினைவூட்ட வேண்டியுள்ளது. நாட்டின் புகழ்பெற்ற புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தேர்தல்கள் நடக்கின்றன. முக்கியமான பல அரசியல் தலைவர்கள் அங்கிருந்து நமது நாட்டிற்கு கிடைத்துள்ளார்கள். ஆனால் அந்த பல்கலைக்கழக வளாகத்தில் ஆபத்தான ஆயுதங்களோடு அத்துமீறி புகுந்து அங்கிருந்த மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது பாஜகவை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் மாணவர் (ஏ.பி.வி.பி) அமைப்பு தானே?.
கர்நாடக மாநிலத்தில் சக மாணவிகளின் உடைகளுக்கு எதிராக வெறிக் கூச்சல் போட்டது பாஜகவின் பரிவாரங்கள் தானே?. சமத்துவ உணர்வும், சிந்தனையும் மாணவர்களிடையே பரவினால் பாஜகவின் அரசியலுக்கான வழி அடைபட்டு விடும் என்ற பதட்டம் தானே காரணம்?.
ஆர்.எஸ்.எஸ் வழிநடத்தும் பல்வேறு கல்வி நிலையங்களில் உள்ள சாதிக் கயிறுகளையும், விஷம பிரச்சாரங்களையும் தடுக்கும் வகையில் அரசின் தலையீடுகள் இருப்பதால் இது தங்களின் அரசியல் நோக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதி பாஜக பதறுகிறது. தமிழ்நாடு அரசு, நீதியரசர் சந்துரு தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரையை விவாதத்திற்கு உட்படுத்தி, அதன் முற்போக்கான பரிந்துரைகளை அமலாக்க வேண்டும் என்று சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. மாணவர்களிடையே சாதி வேற்றுமை நீக்கி சமத்துவத்தை பரப்புவதுதான் கல்வி நிலையங்களின் நோக்கம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களின் படி ஆசிரியர்கள் செயல்படுவதற்கு தேவையான பயிற்சியையும், மாணவர்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகளையும் திட்டமிட்ட முறையில் அரசு முன்னெடுக்க வேண்டும்.
பல்வேறு ஜனநாயக அமைப்புகள் மாணவர்கள் மத்தியில் ஆய்வும், கலந்துரையாடல்களும் நடத்தி பல்வேறு பரிந்துரைகளை உருவாக்கி அரசிடம் வழங்கியுள்ள நிலையில், அதனையும் உள்வாங்கி மாணவர் சமுதாயத்தின் நலன் கருதி விரைந்து செயல்பட வேண்டும் என்று சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
(கே. பாலகிருஷ்ணன்) மாநில செயலாளர்