சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ (எம்.எல்) ஆகிய இடதுசாரி கட்சிகளின் கூட்டறிக்கை
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு!
ஏழை, நடுத்தர மக்கள் மீது தாக்குதல்!
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை மழை!
நாசகர பட்ஜெட்டை கண்டித்து இடதுசாரி கட்சிகளின் சார்பில் ஆகஸ்ட் 1 அன்று தமிழ்நாடு முழுவதும் மறியல் போர்
நாடாளுமன்றத்தில் மோடி அரசு சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கையில் தனது ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கட்சிகளை மட்டும் திருப்திப்படுத்தி, தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சித்துள்ளது. தமிழகத்திற்கு வரவேண்டிய புயல், மழை வெள்ள நிவாரணம், மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கான எந்த நிதியும் ஒதுக்காமல் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட இடம்பெறச்செய்யாமல் தமிழக மக்களை ஒன்றிய அரசு ஏமாற்றியுள்ளது. அதிகமான வரி வருவாய் அளிக்கும் தமிழ்நாட்டை புறக்கணிப்பதன் மூலம் இந்த நிதிநிலை அறிக்கை கூட்டாட்சி கோட்பாட்டுக்கு துரோகம் இழைக்கிறது.
உணவு மானியத்தை சுருக்கி, உர மானியத்தை வெட்டி, விவசாயிகள் மற்றும் வறுமையில் வாடும் கோடானு கோடி மக்களின் வயிற்றிலடித்துள்ளது. உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், பெருகி வரும் வேலையின்மை உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளை புறக்கணித்துள்ளது. மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை வெட்டிக்குறைத்துள்ளது.
இந்திய நாட்டில் ஏழை, பணக்காரர் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ள நிலையில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு செல்வ வரி விதிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை புறந்தள்ளி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வாரி வழங்கி ஏழை, நடுத்தர மக்களை ஏமாற்றியுள்ளது. நெருக்கடியில் திகழும் சிறு-குறு தொழில்களை பாதுகாக்க நிவாரணம் ஏதும் இல்லை. கார்ப்பரேட் வகுப்புவாத கொள்கைகளை மூர்க்கத்தனமாக அமலாக்கிடும் இந்த நிதி நிலை அறிக்கையை எதிர்த்து, அனைத்துத் தரப்பு மக்களும் கண்டனக் குரல் எழுப்பிட வேண்டுகிறோம்.
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விராத பட்ஜெட்டையும், தமிழக விரோதப்போக்கையும் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில் 2024 ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறும். இந்த தேசபக்த போராட்டத்திற்கு ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளும், அனைத்து தரப்பு பொதுமக்களும் பேராதரவு நல்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
கே. பாலகிருஷ்ணன், மாநில செயலாளர், சிபிஐ(எம்)
இரா. முத்தரசன், மாநில செயலாளர், சிபிஐ
பழ. ஆசைத்தம்பி, மாநில செயலாளர், சிபிஐ(எம்.எல்) லிபரேசன்