இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் இன்று (30.07.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 1 பின்வருமாறு.
சிபிஐ(எம்) மாநில செயற்குழு இரங்கல்!
வயநாட்டில் நிலச்சரிவு: 80க்கும் மேற்பட்டோர் பலியான துயரம்!
சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு ரூ. 10 லட்சம் நிவாரண உதவி!
கேரள மாநிலம் வயநாட்டில், எதிர்பாராமல் பெய்த அதிகனமழையும், அதன் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவும் 80 உயிர்களை பறித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம் என அச்சமூட்டும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இயற்கைப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து வருகிறது. நேற்று முதல் மழை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென பெய்த அதிகனமழை வயநாடு பகுதியில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. சூரல்பாறை, வேளரிமலை, முண்டகயில், பொத்துகலு உள்ளிட்ட பகுதிகள் நிலச்சரிவால் பாதித்துள்ளன. பல பகுதிகள் அணுக முடியாத வகையில் துண்டிக்கப்பட்டுள்ளன.
மழைவெள்ள முகாம் அமைந்திருந்த பகுதியிலும் நிலச்சரிவின் பாதிப்பு ஏற்பட்டதால் ஏராளமான உயிர்கள் ஆபத்தில் சிக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்னும் மழை குறையாத நிலையில் மீட்புப் பணிகளை கேரள அரசு முழு வேகத்தில் முடுக்கி விட்டுள்ளது. இருப்பினும், இதுவரை 80 உயிர்கள் இந்த பேரிடரில் சிக்கி பலியாகியுள்ளார்கள்.
மீட்புப் பணிகளில் உடன் நிற்கிறோம் !
அரசின் அனைத்து முகமைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு மீட்புப் பணிகளை முடுக்கி விட்டிருப்பதாக கேரள முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவம், விமானப் படை மற்றும் கப்பற்படையும் மீட்புப் பணிகளுக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு நிவாரணப் பணிகளுக்கு நிதி உதவி அளித்திருப்பதையும், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை உதவிக்கு அனுப்பியிருப்பதையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வரவேற்கிறது. ஒன்றிய அரசு ஏற்பட்டுள்ள பேரிடருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் ரூபாய் 10 லட்சம் நிவாரண பணிகளுக்கு அனுப்புவது என்று தீர்மானித்துள்ளது. மேலும், துயருறும் மக்களுக்கு நிவாரண நிதி வசூலித்து அனுப்பிட வேண்டுமெனவும் கட்சியின் மாவட்டக்குழுக்களை கேட்டுக் கொள்கிறது.
கே.பாலகிருஷ்ணன் மாநில செயலாளர்