இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் இன்று (30.07.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 2 பின்வருமாறு.
வாழ்வாதாரம் மற்றும் தொழிலாளர் கோரிக்கைகளை முன்வைத்து போராடுவோரை கைது செய்வது நியாயமல்ல!
தமிழ்நாட்டில் அண்மைக் காலங்களில் ஜனநாயகப் போராட்டங்கள், ஊர்வலங்கள் தடுக்கப்படுகின்றன. காவல்துறை பேராட்டம் நடத்துவோரை பெரும் குற்றவாளிகளாக கருதி கைது செய்வதும், அராஜக அத்துமீறல் நடவடிக்கைகளை செய்வதும், கடந்த அதிமுக ஆட்சியில் நடந்தது. அதை மக்கள் புறக்கணித்தனர். இந்நிலையில், காவல்துறை அணுகுமுறை அவ்வப்போது, ஜனநாயக விரோதமாக தலையெடுப்பது நல்லதல்ல. திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்தவற்றை அமலாக்கக் கோரி அணிதிரள்வோரை அடக்கி ஒடுக்க காவல்துறை முயல்வது நியாயமற்றது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் பணி செய்யும் ஊழியர்கள், சென்னையில் பேரணி நடத்தி அரசிடம் முறையீடு செய்ய 29.07.2024 அன்று அவரவர் ஊரில் இருந்து புறப்பட்ட 15 ஆயிரம் பெண் ஊழியர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி உள்ளது. கும்பகோணம், தர்மபுரி, விழுப்புரம் ஆகிய நகர்களில் ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தி உள்ளனர். தேனி, திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை காவல்துறை 30.07.2024 அன்று மறைமலை நகர், பரனூர் ஆகிய பகுதிகளில் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.
பெண் ஊழியர்களை போதுமான பெண் காவலர்களை கொண்டு பேசாமல், ஆண் காவலர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்து அராஜகமாக செயல்பட்டு உள்ளனர். அதிகாலையில் குற்றவாளிகளைப் போல் பெண் ஊழியர்களை தடுத்து நிறுத்தியதும், அவர்களின் இயற்கைத் தேவை குறித்து கவலை கொள்ளாமலும், மனித உரிமையை அவமதித்து, கைது செய்தது கண்டிக்கத்தக்கது. காவல் துறையினரின் மேற்படி அத்துமீறலையும், மனித உரிமை மீறலையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கண்டிக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆசிரியர் போராட்டங்களும், அமைப்பு சாரா தொழிலாளர் போராட்டங்களும் காவல்துறையால் ஜனநாயக விரோதமாக ஒடுக்கப்பட்டு பங்கேற்ற ஊழியர்கள் கைது செய்யப்படுகின்றனர். இப்போது மக்களை தேடி மருத்துவ ஊழியர்களும் கைது செய்து தடுக்கப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் பேரணி நடத்துவது, ஒன்று கூடுவது, அமைச்சர்களை சந்தித்து பேசுவது குற்றமாக கருதி முன் எச்சரிக்கை என்ற பெயரில் கைது செய்யும் போக்கை மாநில அரசு மேற்கொள்ளக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
கே.பாலகிருஷ்ணன் மாநில செயலாளர்