இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக்குழு, செப்டம்பர் 12, 2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளரான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு தனது ஆழ்ந்த துயரத்தை தெரிவித்துக் கொள்கிறது. புது டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடுமையான நுரையீரல் நோய்த்தொற்றிற்கு எதிராக போராடிய அவர் காலமானார். அவருக்கு வயது 72.
சீத்தாராம் யெச்சூரி நமது கட்சியின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராகவும், இடதுசாரி இயக்கத்தின் சிறந்த தலைவராகவும், மக்கள் அறிந்த மார்க்சிய சித்தாந்தவாதியாகவும் இருந்தார்.
அவர் தனது இளங்கலை மற்றும் முதுகலை பொருளாதாரப் பட்டங்களில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர் ஆவார். 1974ல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் இயக்கத்தில் சேர்ந்து, இந்திய மாணவர் சங்கத்தின் தலைவரானார். இரண்டு ஆண்டுகளுக்குள் மூன்று முறை ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984 முதல் 1986 வரை இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவராக இருந்து, மாணவர் சங்கத்தினை அகில இந்திய சக்தியாக உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.
சீத்தாராம் யெச்சூரி 1975 ஆம் ஆண்டில் சிபிஐ(எம்) கட்சியில் சேர்ந்தார். தனது அரசியல் செயல்பாடுகளுக்காக நெருக்கடி நிலையின் போது கைது செய்யப்பட்டார். 1985ல் நடைபெற்ற 12வது கட்சி காங்கிரசில் கட்சியின் மத்திய குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதி வரை செயல்பட்டு வந்தார். 1989ல் மத்திய செயற்குழுவிற்கும், 1992ல் நடைபெற்ற கட்சியின் 14வது காங்கிரசில் அரசியல் தலைமைக்குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2015ல் நடைபெற்ற 21வது கட்சி காங்கிரசில் சிபிஐ(எம்) கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதி மூச்சு வரை அப்பதவியில் தொடர்ந்தார்.
கட்சி மையத்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக, கட்சியின் தலைமைக் குழுவின் ஒரு பகுதியாக, கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளை வகுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். தத்துவத் துறையில் சீதாராம் தனித்துவமான பங்கை வகித்தார். சோசலிசம் எதிர்கொண்ட பின்னடைவுகளைத் தொடர்ந்து கட்சியின் கருத்தியல் நிலைப்பாடுகளை உருவாக்கிய 14வது காங்கிரசில் சில கருத்தியல் பிரச்சினைகள் குறித்த தீர்மானத்தை கட்சி ஏற்றுக்கொண்டது. இந்த தீர்மானத்தை தோழர் சீத்தாராம் காங்கிரசில் சமர்ப்பித்தார். அதன் பிறகு, 2012ல் நடைபெற்ற கட்சியின் 20வது கட்சி காங்கிரசில் ஏற்றுக்கொண்ட கருத்தியல் நிலைப்பாடுகளை புதுப்பித்த தீர்மானத்தை முன்மொழிந்த முக்கியமானவராக இருந்தார்.
மத்தியக்குழுவின் சர்வதேசத் துறையின் தலைவராக, கம்யூனிஸ்ட் மற்றும் முற்போக்கு சக்திகளின் பல்வேறு சர்வதேச மன்றங்களில் பங்கேற்று, சோசலிச நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தினார் – ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களுடன் ஒருமைப்பாட்டை வளர்த்தார்.
இருபதாண்டுகளுக்கும் மேலாக கட்சியின் வார இதழான பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் ஆசிரியராக இருந்தார். அவர் ஒரு திறன் மிக்க எழுத்தாளர். தத்துவத் துறையில் அவரது மற்றொரு முக்கிய பங்களிப்பு இந்துத்துவா பற்றிய அவரது விமர்சனம் ஆகும், அவர் எழுதிய – ‘இந்து ராஷ்ட்ரா என்றால் என்ன?’ மற்றும் ‘வகுப்புவாதம் எதிர் மதச்சார்பின்மை’ ஆகிய புத்தகங்களில் அந்த விமர்சனங்கள் வெளிப்பட்டன.
2005 முதல் 2017 வரை இரண்டு முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். சிபிஐ(எம்) குழுவின் தலைவராக பணியாற்றி சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2017ல் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்காக விருது பெற்றார். அண்மைய காலத்தில், மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் பரந்த ஒற்றுமையை உருவாக்குவதற்கு சீதாராம் யெச்சூரி தனது நேரத்தையும் ஆற்றலையும் அர்ப்பணித்தார், இது இந்தியா பிளாக் வடிவத்தை எடுத்தது. ஐக்கிய முன்னணி அரசாங்கம் மற்றும் பின்னர் யுபிஏ அரசாங்கம் ஆகிய இரண்டு காலகட்டங்களிலும், இந்த கூட்டணிகளை ஆதரித்த வாதங்களை சி.பி.ஐ(எம்) சார்பில் முன்வைப்பவராக சீத்தாராம் இருந்தார்.
அவரது இனிமையான குணம் காரணமாக, அரசியலின் அனைத்து பிரிவுகளிலும் மற்றும் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் அவருக்கு பரந்த நண்பர்கள் வட்டம் இருந்தது. அவரது அரசியல் நேர்மை மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவராலும் மதிக்கப்பட்டார்.
நமது தேசிய அரசியலில் இந்த முக்கியமான தருணத்தில் சீதாராம் யெச்சூரியின் அகால மரணம் சிபிஐ(எம்) கட்சிக்கு ஒரு பேரிடியாகும். இடதுசாரி, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஒரு பெரும் இழப்பாகும்.
அரசியல் தலைமைக்குழு, நமது அன்புக்குரிய தோழருக்கு மரியாதை செலுத்துகிறது அவரது நினைவாக செங்கொடியை கொடியை அரை கம்பத்தில் ஏற்றுகிறது. சுரண்டலற்ற சமூகத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்து, கடினமாக உழைக்கவும், ஒருங்கிணைந்து நிற்கவும் கட்சி அணிகளை அரசியல் தலைமைக்குழு அழைக்கிறது. இதுவே அவருக்கு செலுத்தக்கூடிய சிறந்த அஞ்சலியாகும்.