செய்தி அறிக்கைநிகழ்வுகள்மாநில செயற்குழு

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

Cpim 1

இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 159 இடங்களை கைப்பற்றியும், 68.63 லட்சம் வாக்குகளை பெற்றும் சாதனை படைத்துள்ள தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

பெரும்பான்மை சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மலையக தமிழர்கள், இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதிகள் என இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் கணிசமான இடங்களை இந்த கூட்டணி கைப்பற்றியுள்ளது. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுன கட்சித் தலைவர் அனுரகுமார திசநாயகா வெற்றிப் பெற்ற நிலையில் தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி மகத்தான வெற்றிப் பெற்றுள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அனைத்துப் பகுதி மக்களும் அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையுமே விரும்புகின்றனர் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

அனைத்துப்பகுதி மக்களும் சமமாக நடத்தப்படுவார்கள், தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் அவர்களிடம் திரும்பவும் ஒப்படைக்கப்படும் என்று திசநாயகா அளித்த வாக்குறுதி தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது.

கார்ப்பரேட் முதலாளிகளால் சூறையாடப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்தை இடதுசாரி பாதையில் மீட்சிப் பெற செய்யவும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதிக்கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இலங்கை கடற்படையினாரால் தாக்கப்படும் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணவும் இந்திய, இலங்கை அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும்.

இலங்கையில் மறுமலர்ச்சி யுகம் துவங்கிவிட்டது என்ற திசநாயகாவின் நம்பிக்கை இலங்கையில் வாழும் அனைத்து மக்களின் நம்பிக்கையாக மாற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம்.

கே. பாலகிருஷ்ணன், மாநில செயலாளர்