இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் 2024 நவம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று காலை பணியிலிருந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவர் பாலாஜியை நோயாளியின் உறவினர் ஒருவர் சராமாரியாக கத்தியால் குத்தி கொலைவெறியோடு தாக்கியுள்ளார். இத்தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
கத்தி குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜிக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிப்பதை உத்தரவாதம் செய்திட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
மேலும், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த ஊழியர்கள் போதிய அளவில் இருப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். இதற்கு உகந்த முறையில் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரந்தர பணியாளர்களைக் கொண்டு உடனடியாக நியமிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
கே. பாலகிருஷ்ணன், மாநில செயலாளர்.