தீர்மானங்கள்மாநில செயற்குழு

மதுரை – முல்லை நகர் – முன்னாள் இராணுவ குடியிருப்பு – நேதாஜி மெயின் ரோட்டில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை கைவிடுக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

Thiirmanam 2

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம்  2024 நவம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர்  எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு  உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 மற்றும் 25வது வார்டில் ஒருபகுதியான – முல்லை நகர், முன்னாள் இராணுவ குடியிருப்பு, நேதாஜி மெயின் ரோடு பகுதிகளில் சுமார் 5000 குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் முறைசாரா தொழிலாளர்களாக – பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் வசித்து வருகின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கு குடியிருக்கும் மக்களில் ஒருபகுதியினர் குடிசைமாற்று வாரியத்தில் பணம் கட்டி ரசீதும் பெற்றுள்ளனர்.

இங்கு வசித்து வரும் மக்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளது. அரசின் பாதாள சாக்கடை திட்டம் உள்பட செயல்பாட்டில் உள்ளது. இப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் வங்கி கடன் பெற்று தங்களது வீடுகளை கட்டியுள்ளனர்.

இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் – தங்களுக்கு பட்டா வழங்கிட வேண்டுமென கோரி மாவட்ட ஆட்சி தலைவர், மதுரை மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு மனுக்களும் கொடுத்துள்ளனர்.

50 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கண்ட பகுதிகளில் வசித்து வரும் நூற்றுக்கணக்கான மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை கைவிட்டு அந்த பகுதி மக்களின் குடியுரிமை – வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும். மேலும், மேற்கண்ட பகுதிகளில் மூன்று தலைமுறைகளாக  வசித்து வரும்  மக்களுக்கு பட்டா வழங்கிட தகுந்த நடவடிக்கைகள் எடுத்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

கே. பாலகிருஷ்ணன், மாநில செயலாளர்

Leave a Reply