பதினாறாவது நிதி ஆணையம் தமிழ்நாட்டிற்கு வருகை தந்ததையொட்டி இன்று 18.11.2024 நடைபெற்ற அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் ஆர். சச்சிதானந்தம் , கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர் எம். சின்னதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் கீழே தந்துள்ளோம்.
அறிமுகம்
தற்சமயம், இந்திய ஒன்றிய அரசால் 16 ஆவது நிதி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பணியின் பகுதியாக நிதி ஆணையம் மாநில அரசுகளிடமும் அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்பு நடத்திவருகிறது. இந்த பின்புலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கீழ்வரும் கருத்துக்களை முன்வைக்கிறது.
1. இந்திய அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு வளர்ச்சி சார்ந்த அதிகமான பொறுப்புகள் இருப்பதையும் அதற்கான வளங்களை திரட்டுவதில் மாநிலங்களுக்கு உள்ள வாய்ப்புகள் குறைவு என்பதையும் கணக்கில் கொண்டு, மொத்தமாக மத்திய அரசு கையில் வந்து சேரும் வரி வருமானத்தில் ஒருபகுதியை மத்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என்று பணித்துள்ளது. இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று, மத்திய அரசுக்கு வந்துசேருகின்ற மொத்த வரிப்பணத்தை ஒருபுறம் மத்திய அரசுக்கும் மறுபுறம் அனைத்து மாநில அரசுகளுக்கும் பகிர்வு செய்யும் பணி. மற்றொன்று, மாநிலங்களுக்கு என்று இவ்வாறு தரப்படும் வரி வருமானத்தை கோட்பாடுகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கும் பணி. இவ்விரண்டு பணிகளையும் மேற்கொண்டு பரிந்துரைகளை உருவாக்கி மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கும் அமைப்பாக நிதி ஆணையம் என்ற சட்டபூர்வமான ஏற்பாட்டையும் அரசியல் சாசனம் தந்துள்ளது. மேலும் மாநிலங்களின் வருவாய் கணக்கில் பற்றாக்குறையை ஈடுகட்ட மானியம் வழங்குதல் என்பதும் நிதி ஆணையத்தின் பணிபட்டியலில் உள்ளது. இந்த நிதி ஆணையம் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்படும். அதன் பணி முடிந்தவுடன் அது கலைக்கப்பட்டுவிடும். மீண்டும் ஐந்தாண்டுகள் முடியும் தருணத்தில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான பரிந்துரைகளை உருவாக்க புதிதாக நிதி ஆணையம் அமைக்கப்படும். நாடு விடுதலை பெற்றதிலிருந்து இதுவரை இவ்வாறு பதினைந்து நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்டு அந்தந்த காலத்திற்கான பரிந்துரைகளை அளித்துள்ளன. தற்பொழுது 16 ஆவது நிதி ஆணையம் ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. நிதி ஆணையம் அமைப்பதில் மாநில அரசுகளுக்கு பங்கு இல்லை என்ற ஜனநாயக ஊனத்தை இங்கு சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
நிதியையும் அதிகாரங்களையும் குவிக்கும் அணுகுமுறை
2. விடுதலைக்குப்பின் அமைக்கப்பட்ட அடுத்தடுத்த நிதி ஆணையங்கள் ஒரு கட்டம் வரை அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ள, மேலே குறிப்பிடப்பட்ட, பணிகளை மட்டுமே செய்யுமாறு பணிக்கப்பட்டன. ஆனால் நமது நாட்டில் தாராளமய கொள்கைகளின் தீவிர அமலாக்கம் 1990களில் துவங்கியபின், 11 ஆவது நிதி ஆணையத்தில் துவங்கி, மாநில அரசுகளின் வரவு செலவு பற்றாக்குறை தொடர்பான சிக்கன நெறிமுறைகளையும் அவற்றின் அமலாக்கத்தையும் நிதி ஆணையத்தின் பணிபட்டியலில் மத்திய அரசு இணைத்து வருகிறது. படிப்படியாக, அடுத்தடுத்து அமைக்கப்பட்ட நிதி ஆணையங்களுக்கு அளிக்கப்பட்ட பணிபட்டியல்கள் மாநிலங்களின் அதிகாரங்களில் தலையிடும் வகையிலும் மத்திய அரசின் நிலைபாடுகளை மாநில அரசுகளின் மீது திணிக்கும் வகையிலும் அமைந்து வருகின்றன. பதினைந்தாவது நிதி ஆணையத்திற்கு தரப்பட்டுள்ள பணிபட்டியல் இந்த பாதையில் மேலும் தீவிரமாக பயணித்துள்ளது.
15ஆம் நிதி ஆணையம்
3. கடந்த காலங்களில் நிதி ஆணையங்கள் மாநிலங்களுக்கு உதவிட வருவாய் பற்றாக்குறை மானியங்கள் எந்த அடிப்படையில் அளித்திட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளன. இது இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 280 (2) (b) அடிப்படையிலான நடவடிக்கை. ஆனால் பதினைந்தாவது நிதி ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட பணி பட்டியல் கூடுதலாக பல அம்சங்களை புகுத்தி மாநிலங்களுக்கு கடும் நெருக்கடி தரும் தன்மையில் இருந்தது என்பதை இங்கு நினைவு படுத்துவது தவறல்ல. எனினும் அதனை கடந்து நாம் இப்பொழுது 16 ஆம் நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை எதிர்நோக்கி நிற்கிறோம்.
மாநிலங்கள் எதிர்கொள்ளும் தீவிர நெருக்கடி
4. மேலும் மேலும் அதிகமான நலத்திட்டங்களை அமல்படுத்த வேண்டியுள்ளதால் மாநில அரசுகளின் செலவு அதிகரித்துக் கொண்டே போகிறது. மாநில அரசு மக்களுடன் நெருக்கமாக இருப்பதாலும் மக்கள் நல நடவடிக்கைகள் நேரடியாக மக்களுக்கு பயனளிப்பதாலும் இத்தகைய நலத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய அவசியமும் மாநில அரசுகளுக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி தேவை. நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் இந்த அம்சத்தை கணக்கில் கொள்ளவேண்டும்.
5. சிறப்பான செயல்பாடுகளுக்கு ஊக்கமளிகக்கும் வகையில் ஆணையத்தின் பரிந்துரைகள் இருக்கவேண்டும் என்ற கருத்து வலுவாக முன்வைக்கப்படுகிறது. ஆனால், இதில் இன்னொரு பிரச்சினையும் எழுகிறது. தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்கள் கடந்த காலங்களில் பல விஷயங்களில் சிறப்புற செயல்பட்டு சாதித்தவைகளுக்கு ஊக்கமளித்தல் உண்டா என்ற கேள்வி எழுகிறது. தற்போதைய நடவடிக்கைகளை மட்டும் கணக்கில் கொண்டு கடந்த கால சாதனைகளை ஊக்கமளித்தல் கணக்கில் விட்டுவிடுவதும் பிரச்சினையாகும். எனவே இந்த ஊக்கமளித்தல் என்பதே – அதுவும் மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிதி ஆணையம் ஊக்கமளித்தலின் வரையறைகளை நிர்ணயிப்பது என்பதே – பொருத்தமற்றது, மாநில உரிமைகளை புறந்தள்ளும் அணுகுமுறை என்று கருதிட வாய்ப்பு உள்ளது.
6. ஒன்றிய அரசு பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கேற்ப தமிழ்நாடு அரசும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துகிற கொள்கைகளை மிகச்சிறப்பாக அமலாக்கி முன்னேற்றம் கண்டுள்ளது. இவ்வாறு நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான மக்கள் தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழ்நாடு போன்ற மாநிலங்களை பாராட்டி ஊக்குவிப்பதற்கு பதிலாக மக்கள் தொகையை காரணம் காட்டி நிதியை குறைக்கிற அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த அணுகுமுறையை கைவிட்டு மக்கள் தொகை கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஊக்குவித்தல் நிதி கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
7. தமிழ்நாடு அதிக அளவில் வேகமான நகர்மயமாதலை எதிர்நோக்குகிற மாநிலமாக அமைந்துள்ளது. ஒரு குறுகிய காலத்தில் பெரும்பான்மையான மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதற்கு ஏற்றவாறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டிய கடமையும் அதனையொட்டி கூடுதல் செலவினத்தை மேற்கொள்கிற கட்டாயத்திலும் தமிழ்நாடு இருக்கிறது. நகர்ப்புற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு ஏற்றவாறு கூடுதல் செலவினத்தை மேற்கொள்வதற்கு கூடுதல் நிதிப் பகிர்வு மாநிலத்திற்கு தேவைப்படுகிறது என்பதையும் நிதி கமிஷனின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். குறிப்பாக, தமிழகத்தில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கும்படி ஒன்றிய அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இழுத்தடிப்பு நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்த நிதிச்சுமை அனைத்தையும் தமிழ்நாடு அரசே பொறுப்பேற்க வேண்டியுள்ளதால் கடும் சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. எனவே, மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டப் பணிகளுக்கு ஒன்றிய அரசு காலத்தே உரிய நிதியினை தமிழகத்திற்கு அளித்திட வேண்டும்.
அதேபோன்று, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், அதில் குறிப்பாக வட மாநிலங்களிலிருந்தும் அதிகமான தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வருகிற சூழல் உள்ளது. அதிகமான இடப்பெயர்வு சவாலை எதிர்கொள்கிற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இதற்கேற்ப கட்டமைப்பு விரிவாக்கப் பணிகள் கூடுதல் நிதிச் சுமையாக மாநில அரசுக்கு இருந்து வருகிறது. வெளி மாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை கூடுதலாகி வருகிற இந்த நிலையை நிதி கமிஷன் கருத்தில் கொண்டு கூடுதல் நிதிப் பகிர்வினை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்திடல் வேண்டும்.
ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு நெருக்கடி கூடுகிறது
8. ஜிஎஸ்டி சட்டமும் அதன் அமலாக்கமும் மாநிலங்களின் உரிமைகளையும் பறித்துள்ளன, வருமானத்தையும் பாதித்துள்ளன. மத்திய அரசுக்கு சாதகமாகவும் ஒட்டுமொத்தமாக மாநிலங்களுக்கு பாதகமாகவும் ஜிஎஸ்டியின் அமலாக்கம் உள்ளது. ஐந்தாண்டுகளுக்குப் பின் நட்ட ஈடும் கிடையாது. மாநிலங்களின் சொந்த வரி வருமானத்தில் 44 சதமானம் ஜிஎஸ்டிக்குள் வந்துவிட்டது. மத்திய அரசை பொறுத்தவரையில் இந்த சதவிகிதம் 23 சதவிகிதம் தான். செஸ் மற்றும் சர்சார்ஜ் மூலம் மத்திய அரசு பெரும் வருமானம் அதன் மொத்த வரிவருமானத்தில் 2011-12 இல் 6 சதவிகிதமாக இருந்தது. 2018-19 இல் 12 சதவிகிதமாக அதிகரித்தது. தற்சமயம் இந்த சதவிகிதம் 20சதவிகிதத்தையும் தாண்டி விட்டது. இவை மாநிலங்களுடனான வரி பகிர்மானத்திற்குள் வருவதில்லை. ஜி எஸ் டி அமைப்பில் செஸ் மற்றும் சரசார்ஜ் நீக்கப்பட்டது மத்திய அரசின் வருமானத்தை பாதித்ததாக தெரியவில்லை.
9. உண்மையில், ஒட்டுமொத்தமாக மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே நிலவும் அசமத்துவமான வருமான நிலைமையை சரிசெய்வதே நிதி ஆணையத்தின் அரசியல் சாசன அடிப்படையிலான பணி. இதைத்தான் மேற்கூறியவற்றை கணக்கில் கொண்டு பதினாறாவது நிதி ஆணையம் செய்ய வேண்டும்.
10. மொத்த வரி வசூல் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவிகிதமாக கணக்கிடுகையில் அதிகரித்துள்ள போதிலும், மாநிலங்களுடன் இந்த வரி வருவாயை பகிர்வது என்ற விசயத்தில் எவ்வித வரவேற்கத்தக்க மாற்றமும் இல்லை. மேலும், மத்திய அரசு செஸ், சர்சார்ஜ் மற்றும் டோல் கட்டணம் என்று வேறு பல வடிவங்களிலும் வருவாயைத் திரட்டுகிறது. எனினும் இவை எதுவும் மாநிலங்களுடன் பகிரப்படுவது இல்லை. இந்த வகையில் வசூலிக்கப்படும் வருவாய் அனைத்தையும் மத்திய அரசே வைத்துக் கொள்கிறது. இவ்வாறு மத்திய அரசு அதிக வருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்காமல் தனது கருவூலத்திலேயே வைத்துக் கொள்ளுகிறது. செஸ், சர்சார்ஜ் மற்றும் சுங்க கட்டணம் மூலம் மத்திய அரசு திரட்டும் வருவாயை இதே விகிதத்தில் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
11. நிதி ஆணைய பரிந்துரைகள் மாநில அரசுகள் கடன் வாங்குவதற்கு விரோதமான வகையில் புதிய நிபந்தனைகளை புகுத்தக் கூடாது. அனைத்து மாநிலங்களும் கசbஅ சட்டத்தை நிறைவேற்றியுள்ள பின்னணியில் இது முற்றிலும் அனாவசியமான நடவடிக்கையாகும். மாநிலங்களின் கடன் வாங்கும் வாய்ப்புகளை சுருக்குவதாக அமைகின்றது. “கூட்டுறவு அடிப்படையிலான சமஷ்டி” (cooperative federalism) என்ற கோட்பாட்டிற்கு இது எதிரானது.
12. நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் 2011 மக்கள் தொகை அடிப்படையில் அமைந்திட வேண்டும் என்ற 15 ஆம் நிதி ஆணைய நெறிமுறை, தேசீயக் கொள்கைகளுக்கு மதிப்பளித்து மக்கள் தொகை வளர்ச்சியை வேகமாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ள தமிழ்நாட்டிற்கும் இதர தென் மாநிலங்களுக்கும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. வரிவருமானத்தை 2011 மக்கள் தொகை கணக்கு அடிப்படையில் பகிர்ந்தளித்தால் தமிழ்நாடு கடும் இழப்பை சந்திக்க நேரிடும். இது தமிழ்நாடு உள்ளிட்ட, மக்கள் தொகை வளர்ச்சியை நாட்டின் நலன் கருதி குறைத்துள்ள மாநிலங்களுக்கு நியாயம் வழங்குவதாக இருக்காது. மாநிலங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதற்கு முன்பாக மத்திய அரசுக்கு சாதகமாகவும் ஒட்டுமொத்த மாநிலங்களுக்கு பாதகமானதாகவும் வரிவருமானப்பகிர்வு உள்ளதை முதலில் சரி செய்ய வேண்டும்.
13. பதினான்காவது நிதி ஆணையம் ஏதோ பகிர்வுக்குட்பட்ட வரி வருமானத் தில் மாநிலங்களின் மொத்த பகிர்வை 32 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதத்திற்கு உயர்த்தி வாரி வழங்கி விட்டது போலவும் இதனை சரி செய்யவேண்டும் என்ற பாணியிலும் 15 ஆவது நிதி ஆணையம் தொடர்பான விவாதங்களில் கூறப்பட்டது. இது தவறு. பதினான்காவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்ற அதே சமயத்தில் மாநிலங்களுக்கு அளித்துவந்த நிதி மானியங்களையும் உதவிகளையும் மத்திய அரசு குறைத்துக்கொண்டுவிட்டது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசிடம் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் மொத்தமாக தரப்படும் வளங்களின் அளவு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பின் சதவிகிதமாக கணக்கிடுகையில் 31 சதவிகிதம் தான். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மொத்த வரிவருவாயில் (gross tax revenue)) அனைத்து மாநிலங்களுக்கும் சேர்ந்து கிடைத்த பங்கு மிகக் குறைவாகவே அதிகரித்தது. 2011-12 இல் 28.2சதவிகிதம் கிடைத்தது. 2020- 21 இல் இது 29.4சதவிகிதம் ஆக இருந்தது. இது ஏற்புடையது அல்ல.
14. மொத்த வரிவசூலில் மாநிலங்களின் மொத்த பங்கு குறைந்தபட்சம் 50 சதவிகிதம் ஆக உயர்த்தப்படவேண்டும். மாநிலங்களுக்கு அதிகமான பங்கு தர வேண்டியுள்ள நிலையில் இதனால் துண்டு விழும் தொகையை மத்திய அரசு வேறு வகைகளில் திரட்டிட வழிகாண வேண்டும். திட்ட கமிஷன் கலைக்கப்பட்டு விட்ட நிலையில், திட்டமிட்ட செலவினங்களுக்கு நிதி ஒதுக்கிட வேண்டிய நிலையில்லாததால் மாநிலங்களுடன் இவ்வாறு நிதியை பகிர்ந்து கொள்வதில் மத்திய அரசுக்கு பெரும் சிரமம் இருக்காது.
15. ஈட்டப்படும் வருவாயின் அடிப்படையில் அல்லாமல் செலவின அடிப்படையில் தனது வரிவருவாயை மத்திய அரசு அதிகரித்துக் கொண்டே செல்லும் போக்கு நிலவுகிறது. செலவின அடிப்படையில் வரி விதிக்கப்படுவதால், ஏழைகள் தங்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை கூட நுகர முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். மேலும் அவர்களுக்கு கிடைக்கும் குறைந்த வருமானமும் கூட இத்தகைய வரிகளால் பறிக்கப்படுகின்றன.
16. வருமான வரி, கம்பெனி வரி போன்ற நேரடியாக வரி செலுத்தும் திறனின் அடிப்படையிலான வரிகள் விதிக்கப்படும் அதிகாரம் ஒன்றிய அரசிடம் தான் உள்ளது. இத்தகைய வரிகளே, அரசின் வரிவருவாயில் அதிகமானதாக இருக்க வேண்டும். ஜிஎஸ்டி போன்ற மறைமுக வரிகள் வருமானம் சாராத வரிகள். இவை ஏழை மக்களை கூடுதலாக தாக்குகின்றன. இத்தகைய வரிகளின் பங்கு குறைக்கப்பட வேண்டும். இக்கொள்கைகளுக்கு நேர்மாறாக ஒன்றிய அரசு தொடர்ந்து இந்நாட்டு, பன்னாட்டு பெரும் கம்பனிகளுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. மறுபக்கம் உழைக்கும் மக்கள் மீது மறைமுக வரிகளை சுமத்துகிறது. நேர்முக வரிகளில் ஒன்றிய அரசு சலுகைகள் தருவதால் ஏற்படும் வரி வருமான இழப்பு மாநிலங்களுக்கு வரவேண்டிய வரி வருமானத்தையும் குறைக்கிறது. ஆனால் நேர்முக வரிவிதிப்பில் மாநிலங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்த நிலமைகள் பற்றியும் நாம் விவாதிக்க வேண்டும்.
17. கடந்த காலங்களில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை அமைத்திட மாநில அரசுகள் ஏராளமான நிலம் அளித்துள்ளன. மற்றும் இதர பல வசதிகளும் செய்துகொடுத்துள்ளன. இப்பொழுது பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றும் அந்நிறுவனங்களின் சொத்துக்களில் ஒரு பகுதியை தனியார் பயன்பாட்டிற்கு குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு கொடுத்தும் ஒன்றிய அரசு நிதி திரட்டுகிறது. ஆனால், இதில் எந்த பங்கும் மாநிலங்களுடன் பகிர்வதில்லை. கனிம வளங்களின் பயன்பாட்டிலும் மாநில உரிமைகள் புறந்தள்ளப்படுகின்றன. இதுவும் நிதி ஆணையத்தின் பரிசீலனைக்கு வரவேண்டும்.
18. மத்திய அரசு நேர்முக வரிகளை திறமையோடும் சிறிதும் கசிவில்லாமலும் கம்பெனிகள் மற்றும் செல்வந்தர்களிடம் இருந்து வசூலித்திட சிறந்த வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும். இத்தகைய வரி ஏய்ப்போர் மீது விதிக்கப்படும் அபராதமும் தண்டனையும் கூட கடுமையானதாகவும் காலதாமதமற்றதாகவும் இருக்க வேண்டும்.
19. அதிக வருவாயைப் பெற்றுத் தரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு குறைந்த பங்கும், குறைந்த வருவாயைப் பெற்றுத் தரும் மாநிலங்களுக்கு அதிக பங்கும் வழங்கப்படுகிறது. இந்திய ஒன்றியத்தில் குறைந்த வளர்ச்சி நிலையில் உள்ள மாநிலங்களுக்கு வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் உதவுவது என்ற கருத்து கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளக் கூடியது என்ற போதிலும், மத்திய அரசுக்கும் நாட்டுக்கும் அதிக வருவாயை ஈட்டித் தரும் மாநிலங்களுக்கு ஊறுவிளைவிக்காமல் நலிந்த மாநிலங்களுக்கு உதவி செய்ய வேறு வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.
20. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய தொகைகள் கணிசமாக உள்ளன. பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகை, சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கான ஒன்றிய அரசு பங்கு நிதி ஒதுக்கப்படாதது உள்ளிட்டு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் பாக்கி உள்ளன. தமிழ்நாடு வார்தா புயல், ஓக்கி புயல், மிக்ஜாம் புயல், கடும் வறட்சி, பெரு வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பொழுது மத்திய அரசு அளித்துள்ள நிவாரணத் தொகைகள் மிகவும் சொற்பமே. தமிழ்நாடு மீண்டும், மீண்டும் இயற்கை சீற்றங்களாலும் காலநிலை மாற்றங்களாலும் பாதிக்கப்படுகிறது. 16ஆம் நிதி ஆணையம் இயற்கை சீற்றங்களாலும் பேரழிவு நிகழ்வுகளாலும் பாதிக்கப்படும் பொழுது நியாயமான நிவாரணத்தொகையை மத்திய அரசு அளித்திடும் வகையில் பொருத்தமான பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும். ஒன்றிய அரசின் கடந்தகால செயல்பாடுகள் இப்பிரச்சினையில் நம்பிக்கை அளிப்பவையாக இல்லை.
21. கோட்பாடு ரீதியாக, நிதி மற்றும் அதிகாரப்பங்கீட்டில் மையப்படுத்தும் தன்மை நிராகரிக்கப்பட்டு, அதிகாரங்களும் நிதி பகிர்வும் பரவலாக்கப்படவேண்டும். உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த நிதி ஆணையம் பரிந்துரைப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் இந்த நிதிகள் மாநில அரசுகள் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்பதும் கணக்கில் கொள்ளப்படவேண்டும். மேலும் இதற்கான நிதிகள் பிரதானமாக மத்திய அரசின் வருமானத்தில் இருந்து அளிக்கப்படவேண்டும்.
இப்படிக்கு,
கே. பாலகிருஷ்ணன், மாநில செயலாளர்