மாநில செயற்குழு

தமிழகத்தில் அதிகரித்து வரும் குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்திடுக! சிபிஐ(எம்) தமிழக அரசுக்கு வலியுறுத்தல்!

Child Mrg

தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. 2023, 2024 ஆகிய 2 ஆண்டுகளில் நடைபெற்ற குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை பற்றிய விபரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு 1,054 குழந்தை திருமணங்களும்,  2024 ஆம் 1,640 குழந்தை திருமணங்களும் நடைபெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. குறிப்பாக ஈரோடு, திருநெல்வேலி, பெரம்பலூர், கோவை, திண்டுக்கல், நாமக்கல் ஆகிய 6  மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை திருமணம் மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும். பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே குழந்தை திருமணங்களுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றன. குழந்தை திருமணம் பெண்களின் வாழ்க்கை, மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. மேலும் அவர்களின் எதிர்கால கல்வி, வேலை வாய்ப்பு போன்ற அனைத்து வாய்ப்புகளும் இத்திருமணங்கள் மூலம் பறிக்கப்படுகிறது. குழந்தை திருமணத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படுகிற குழந்தைகள் இளம் வயதிலேயே கருவுறுவது, பிரசவத்தில் ஏற்படும் அபாயங்கள் போன்றவை அதிகரிக்கிறது. பெண் யாரை, எப்போது திருமணம் செய்ய வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுக்கிறதாகவே இத்திருமணங்கள் அமைகிறது.          சுதந்திரமாகவும், எந்த வற்புறுத்தலும் இல்லாமல் எடுக்க வேண்டிய திருமண முடிவுகள் கட்டாயப்படுத்தி எடுக்கப்படுவது பல்வேறு சமூகப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், தயாராக இல்லாத போது நடத்தப்படுகிற திருமணங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாழ்படுத்தி விடுகிறது. பெண் குழந்தைகளை பள்ளியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு இத்திருமணங்கள் நடத்தப்படுகிறது. பெண் குழந்தைகளை குடும்பங்களில் சுமையாக பார்க்கும் சூழலில் இத்திருமணங்கள் நடைபெறுகிறது.

 இத்தகைய எண்ணற்ற பாதிப்புகளால் தடை செய்யப்பட்ட குழந்தை திருமணங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்து வருவது கடும் கண்டனத்திற்குரியதாகும்.  குழந்தை திருமணங்கள் நடப்பதை கண்காணிக்க வேண்டிய மாநில குழந்தைகள் ஆணையம் தலைவர் இல்லாமல் முடங்கி உள்ளது. இதனால் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளும் கடமையினை நிறைவேற்ற தவறியுள்ளனர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, குழந்தை திருமணத்திற்கு எதிரான தற்போதைய சட்டங்களை வலுவாக நடைமுறைப்படுத்த வேண்டும். பதிவு செய்யப்படும்  வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதிபடுத்திட காவல்துறை நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்த வேண்டிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் பஞ்சாயத்து அளவிலான கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்திடவும், மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையிலான குழந்தைத் திருமணத் தடுப்பு குழுக்களை ஏற்படுத்திட வேண்டும்.  குழந்தைகள் ஆணையத்திற்கு உடனடியாக தலைவரை நியமித்து செயல்படுத்திட வேண்டும்.  குழந்தைகள் உரிமை மீறல் தொடர்பான பிரச்சனைகளில் உடனடியாக  அரசு தலையீடுவதை உத்தரவாதப்படுத்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

(கே. பாலகிருஷ்ணன்)

மாநில செயலாளர்

Leave a Reply