பத்திரிக்கையாளர் சந்திப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ. சண்முகம் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட அறிக்கை.

P. Schganmugam

சி.பி.ஐ(எம்) 24 வது மாநில மாநாடு, விழுப்புரத்தில், 2025 ஜனவரி 3-5 தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. அரசியல், சமூகம், பொருளாதாரம், கலாச்சார தளங்களில் கட்சி மேற்கொள்ள வேண்டிய வினைகள், எதிர்வினைகளை முடிவு செய்தோம்.

இந்த மாநாட்டில் மாநில உரிமைகளைப் பறித்து, ஆளுநர்களை வைத்து அத்து மீறிவரும் ஒன்றிய ஆட்சியின் போக்கை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில அரசுகளின் நிதி உரிமைகளையும் இம்மாநாடு விவாதித்தது. செஸ் – சர்சார்ஜ் என்ற பெயரில் வரி வசூலித்து, மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் வஞ்சகம் இழைக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென மாநாடு கோரியது. மாநில உரிமைகளை காப்பதற்கான தமிழ்நாடு அரசின் முனைப்புகளுக்கு மாநாடு தனது ஆதரவை தெரிவித்தது.

தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமையை குலைத்து, நல்லிணக்க வாழ்வை கெடுக்க முயற்சிக்கும் சங் பரிவாரங்களின் முயற்சியையும், சாதி அடிப்படையிலான திரட்டல்கள் மக்களிடையே பகைமையை அதிகரிப்பதையும், சித்தாந்த அடிப்படையில் கல்விநிலையங்களில் நடக்கும் ஊடுருவல்களையும் தடுத்து நிறுத்த வேண்டுமென மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் மக்கள் நலத் திட்டங்களை வரவேற்கும் அதே சமயத்தில், நவ-தாராளமய கொள்கைகளை ஒட்டியும், ஒன்றிய அரசின் பொருளாதாரப் பார்வையை ஒட்டியும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டுமென மாநாடு கோரியுள்ளது.

தேசிய கல்விக்கொள்கையின் பெயரால், அதிகாரக் குவிப்பு, கல்வியில் ஆர்.எஸ்.எஸ் சிந்தனை புகுத்தல், வணிகமயம் ஆகிய அபாயங்களை உறுதியாக எதிர்த்திடவும், தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை வற்புறுத்தும் ஒன்றிய ஆட்சியின் நிர்ப்பந்தங்களுக்கு தமிழ்நாடு அரசு இணங்கிடக் கூடாது, தேசிய கல்விக் கொள்கையை முற்றாக புறந்தள்ளி, மாநில கல்விக் கொள்கைக்காக அமைக்கப்பட்ட குழு வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாநாடு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியை உருவாக்கவும், கூட்டுறவு தேர்தல்களை விரைந்து நடத்திடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், பள்ளி கல்லூரி ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் – ஓய்வூதியர்கள் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும், பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் மாநாடு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழிற்சங்க விரோத அணுகுமுறையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்துவதுடன், தொழிலாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை அங்கீகரித்து அமலாக்க வேண்டுமென்றும் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டமாக்கப்பட வேண்டும். பாசன மேம்பாடு, விவசாய கடன் ரத்து ஆகியவற்றை மேற்கொள்வதுடன், நிலம் கையகப்படுத்தலிலும், பயிர் காப்பீட்டிலும் விவசாயிகளின் உரிமைகளுக்கு இழைக்கப்படும் அநீதியை கண்டித்தும், ஒன்றிய மாநில அரசுகள் விவசாயிகள் நலன் காக்க வேண்டுமென்றும் மாநாடு வலியுறுத்தியுள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை நாட்கள் 200 ஆக உயர்த்தப்படுவதுடன், குறைந்தபட்ச நாள் கூலி ரூ.600 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்த திட்டத்திற்காக ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் போதுமான நிதி ஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் மாநாடு வலியுறுத்தி உள்ளது.

பெண்கள், குழந்தைகள், பட்டியல் சாதி, பழங்குடியினர், சிறுபான்மையினர் மீது, அதிகரித்துவரும்  தாக்குதல்களை தடுத்து நிறுத்திடவும் – சட்ட உரிமைகளை உறுதி செய்திடவும் மாநாடு வலியுறுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகள் பற்றியும் விவாதித்த மாநாட்டில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள், இட ஒதுக்கீடு, நிதி ஒதுக்கீடு குறித்த கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டது.

நிலம், குடிமனை, மனைபட்டா, நகர்வாழும் உரிமை ஆகியவற்றுக்கான மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் மாநாடு வலியுறுத்தியது.

நவீன தாராள மய பொருளாதார பாதைக்கும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்கிற வல்லமை இடது மாற்றுக்கு மட்டுமே என்பதை உறுதிபட தெரிவித்துள்ள மாநாடு இது குறித்த விவாதங்கள் அறிவார்ந்த பகுதியினர் மத்தியில் நடந்தேற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பட்டியல் பின்வருமாறு:

மாநில உரிமைகள் பாதுகாப்பு

1.            ஜி.எஸ்.டி வரிப் பகிர்வில், மாநிலங்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், மாநில உரிமைகளைப் பாதுகாத்திடவும் வலியுறுத்தி !

மொழியுரிமைக்காக

2.            இந்தி, சமஸ்கிருத திணிப்புக்கு எதிராக – அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் – தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஒன்றிய ஆட்சிமொழிகளாக்கிட வலியுறுத்தி ! ஒன்றிய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் மாநில மொழிகளே தொடர்பு மொழியாக உறுதி செய்திட வலியுறுத்தி, மொழிவழிச் சிறுபான்மையினர் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் அவரவர் தாய்மொழியிலேயே உயர்கல்வி வரை பயின்றிட, நீதிமன்ற மொழியாக தமிழே அமைந்திட !

அடிப்படை வாழ்வுரிமை பிரச்சனைகள்

3.            ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல், சமயல் எரிவாயு விலைகளைக் குறைக்கவும், வரிச்சுமைகள் மூலம் வருமானம் திரட்டுவதை நிறுத்தவும் வலியுறுத்தி !

4.            சுகாதாரம் மற்றும் மருத்துவம் சார்ந்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டிய செயல்முறைகளை வலியுறுத்தி

5.            மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் நோக்கங்களை செம்மையாக செயல்படுத்திட, 200 நாள் வேலை – குறைந்த பட்ச கூலியாக ரூ 600 வலியுறுத்தி

ஜனநாயகம் காத்திட

6.            அறவழிப் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டித்து !

7.            ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டு படுகொலைகளுக்கு காரணமான குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி !

8.            கோவை ஈஷா மையத்தின் மீதான புகார்கள் குறித்து சட்ட பூர்வமான நடவடிக்கைகளை விரைவுபடுத்திடக் கோரி

9.            போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் கோரி

10.          வறுமையில் வாழும் மக்களின் உயிரைக் குடிக்கும் நுண் நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் கோரி

11.          கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்களை ஜனநாயக முறைப்படி உடனடியாக நடத்திட வலியுறுத்தி

மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி

12.          சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமை, வழிபாட்டு உரிமையை பாதுகாக்க

சமூக நீதி, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக

13.          பட்டியல் சாதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோரி

14.          பழங்குடியினர் நிலவுரிமையை உறுதி செய்யும் வகையில் வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, இனச் சான்றிதழ் பிரச்சனைக்கு தீர்வு கண்டிடவும், மலைக் கிராமங்களுக்கு சாலை, மின்சார வசதி வழங்கிடவும், உண்டு உறைவிடப் பள்ளிகள், விடுதிகள், தரமான வீடுகள் கட்டித்தர வலியுறுத்தியும் !

15.          மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காக, ஒவ்வொரு அரசுத்துறையும்  குறைந்தபட்ச 5 சதவிகிதம் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ள வலியுறுத்தி! மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீடை முழுமையாக அமலாக்க வலியுறுத்தி!

16.          கடலோர மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க கோரி

நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக

17.          எல்ஐசி மற்றும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீதான தாக்குதல்களை கைவிட கோரி, அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்தும் முடிவை கைவிடக் கோரி, முகவர்கள் நலனை பாதுகாக்க வலியுறுத்தி

18.          காலாவாதியான சுங்க சாவடிகளை மூடக் கேரியும், சுங்க சாவடி முறைகேடுகளை தடுத்து நிறுத்த கோரியும்

தொழில் நலன்

19.          நலிவடைந்து வரும் எவர்சில்வர் தொழிலை பாதுகாத்து மானியத்துடன் தொழிற்கல்வி வழங்க கோரி

20.          அச்சிடப்பட்ட நூல்களுக்கு ஆங்கிலேயர் காலத்தில் இருந்து வழங்கப்பட்டு வந்த தபால் கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து மீண்டும் அச்சலுகை வழங்கிட கோரி

21.          சிறு குறு நடுத்தர தொழில் துறையை பாதுகாத்திடக்கோரி, மின் கட்டண உயர்வை கைவிடவும், ஒன்றிய அரசு விதிக்கும் கடுமையான கடன் நிபந்தனைகளை தளர்த்திடவும், ஜிஎஸ்டி வரி வசூல் என்ற பெயரில் செய்யப்படும் கெடுபிடிகளை நிறுத்தவும்

தொழிலாளர், அரசு ஊழியர் – ஆசிரியர் நலன் காக்க

22.          தமிழ்நாடு சுகாதாரத் துறையில் “மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தில் பணியாற்றுபவர்களை நிரந்தரம் செய்யக் கோரி

23.          அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சத்துணவு ஊழியர்கள் அங்கன்வாடி ஊழியர்கள் நலன்களையும், அவர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றிடக்கோரி

24.          அமைப்புசாரா தொழிலாளர்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திட கோரி

25.          தமிழக அரசின் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிடக்கோரி

26.          பட்டாசு ஆலை விபத்துகளை தடுத்து நிறுத்த கோரி

பாலின நீதிக்காக, பாலின வன்முறைகளுக்கு எதிராக

27.          பணித்தளங்களில் பெண்களுக்கான அடிப்படை உரிமைகள், பாதுகாப்பை உறுதி செய்திடக்கோரி, உள்விசாரணை குழு செயல்பாடுகளை முறைப்படுத்திட கோரி

28.          பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்தவும், தமிழ்நாடு குழந்தைகள் நல ஆணையத்திற்கு தலைவரை நியமித்திடவும் கோரி

விவசாயிகள் நலன் காத்திட, ஊரக மேம்பாட்டுக்காக

29.          தனியார் வனப்பாதுகாப்புச் சட்டத்திலிருந்து குமரி மாவட்டத்திற்கு விலக்களிக்க வலியுறுத்தி !

வேலையின்மையை எதிர்கொள்ள, சமூகப் பாதுகாப்பான வேலைக்காக

30.          பட்டியல் சாதி, பழங்குடியினருக்கு தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கிட சிறப்புச்சட்டம்

31.          வேலையின்மையை கட்டுப்படுத்தவும் கௌரவமான வேலைவாய்ப்புகளை உருவாக்க கோரியும்

நிலம், பட்டா கோரிக்கைகளை வலியுறுத்தி

32.          குடிமனை மனைபட்டா வழங்கிட சிறப்பு திட்டம் வலியுறுத்தி

33.          நீர்ப்பிடிப்பு என்ற பெயரில், பல தலைமுறைகளாக வாழ்ந்துவரும் எளிய மக்களை நிலத்தை விட்டு அகற்றாதே, குடிமனைப் பட்டா வழங்கிடுக ! எளிய மக்களின் நகர் வாழ் உரிமைகளை உறுதிசெய்யக் கேட்டும், கட்டாய வெளியேற்றத்தை நிறுத்தி, வாழும் பகுதியிலேயே மாற்று வாழ்விடங்களை உருவாக்கி வழங்கிடக் கோரியும்,

34.          பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்தோருக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க கோரி

35.          நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் 55 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள நிலப் பிரச்சினைக்கு தீர்வு காண கோரியும், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இல்லங்களுக்கு மின் இணைப்பு வழங்கிடவும்

36.          கோயில் மடம் அறக்கட்டளை வஃபுபோர்டு இடங்களில் பல தலைமுறைகளாக குடியிருப்போர் உரிமைகளை உறுதிப்படுத்திடவும், குத்தகை விவசாயிகள் இனாம் நில விவசாயிகள் நில உரிமை பாதுகாத்திடவும்

பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க

37.          மின்துறை பொதுத்துறையாக நீடிக்க வலியுறுத்தியும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதை கைவிடக் கோரியும்

38.          போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தவும், காண்ட்ராக்ட் தொழிலாளர் முறையை நிறுத்தி நிரந்தர பணியிடங்களை நிரப்பவும், ஊழியர்களின் – ஓய்வு ஓய்வு பெற்றோரின் கோரிக்கைகளை நிறைவேற்றிடவும்

39.          தமிழ்நாடு கூட்டுறவு வங்கியினை உருவாக்கிடக் கோரி

கல்வி உரிமைக்காக

40.          தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும், தமிழ்நாட்டில் அதன் அம்சங்களை வெவ்வேறு பெயர்களில் அமலாக்குவதற்கு எதிராகவும், நீட் தேர்வு விலக்கு தர வலியுறுத்தி, கல்வியை சீரழிக்கும் சங்பரிவார தலையீடுகளை தடுத்திடக் கோரி – பள்ளி கல்வி மேம்பாட்டுக்கான அரசின் நல்ல திட்டங்களை வரவேற்றும், 11 ஆண்டுகளாக நடந்தேராத தொடக்கப்பள்ளி ஆசிரியர் நியமனங்களை தொடங்கிடக் கோரியும், தொகுப்பூதிய அடிப்படையிலான பணி நியமனங்களை நிறுத்த வலியுறுத்தியும்!

41.          நூலகங்களுக்கு புதிய நூல்கள் வாங்குவதை உறுதி செய்யுமாறும், அதற்கான வழிகாட்டுதல் நடைமுறைகளை வெளியிடக்கோரியும்

சுற்றுச்சூழல்

42.          தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை பராமரித்திடவும், பசுமை – தூய்மை – வாழ்விடச் சூழலை உறுதி செய்ய வலியுறுத்தியும்!

43.          பல்லுயிர் பாரம்பரிய தளமாக விளங்குகிற அரிதாகப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வழங்கிய உத்தரவை முழுமையாக ரத்து செய்திடக் கோரி

விவசாயம் காக்க

44.          விவசாயிகளை பாதிக்கும் – குறைந்தபட்ச ஆதார விலை, பாசன கட்டமைப்பு மேம்பாடு – பயிர் காப்பீட்டு திட்ட அமலாக்கம் – விவசாய நிலங்கள் நீர் நிலைகள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை தடுத்தல் உள்ளிட்ட –  பிரச்சினைகளுக்கு ஒன்றிய மாநில அரசுகள் உரிய தீர்வுகளை காணக் கோரி

வளர்ச்சித்திட்டங்கள்

45.          கடலூர் – பாண்டிச்சேரி – சென்னை இருப்புப் பாதை திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதியை ஒதுக்கி விரைந்து செயல்படுத்த கோரி

இலங்கை தமிழர் நலன்

46.          இலங்கைத் தமிழர்கள் இஸ்லாமியர்கள் மலையகத்தமிழர்கள் சமத்துவத்துடன் வாழவும் மாகாணங்களுக்கான அதிகார பரவலை உறுதி செய்திடவும்

Leave a Reply