இலங்கையில் தமிழ் மக்கள் சமத்துமின்மைக்கும், நீண்ட காலமாக இன வெறி தாக்குதலுக்கும் ஆளாகி வந்த நிலையில் , அது உள்நாட்டு யுத்தத்திற்கும் , அமைதி இன்மைக்கும் வழி வகுத்தது . அதனால் அனைத்து பகுதி மக்களும் பாதிப்புக்கு உள்ளாகினர் .
தற்போது இலங்கைத் தமிழர்கள் உட்பட அனைத்து சிறுபான்மை மக்களின் ஆதரவு பெற்ற தேசிய மக்கள் சக்தி, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளது . இச்சுமூகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி சமத்துவத்தையும் மாகாணங்களுக்கான அதிகார பரவலையும் உறுதி செய்ய வேண்டுமென இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது .
தற்போது நடத்தப்படாமல் உள்ள இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்குமான தேர்தலை மிக விரைவாக நடத்தி , மாகாண சபைகளுக்கான உரிய அதிகாரங்களை வழங்குவதன் ஊடாக , தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசு முன் வர வேண்டும் என இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது .
இலங்கை தமிழர்கள், இஸ்லாமியர்களின் மலையகத் தமிழர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் உரிய கருத்துப் பரிமாற்றங்களை நடத்தி தீர்வுகளை உருவாக்க வேண்டும். மாகாணங்களுக்கான அதிகார பரவலாக்கத்தின் போது எந்த வித கட்டுப்பாடுகளும் விதிக்காது, கல்வி , சுகாதாரம் , விவசாயம் , வீட்டுவசதி , நிலம், காவல்துறை போன்ற அம்சங்களில் மாகாண அரசாங்கங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென இம் மாநாடு வலியுறுத்துகிறது
முன்மொழிந்தவர் – சு.வெங்கடேசன் எம்.பி
வழிமொழிந்தவர் – எம்.சின்னத்துரை எம்.எல்.ஏ.