தீர்மானங்கள்

குடிமனை- மனைபட்டா வழங்கிட சிறப்புத் திட்டத்தை செயல்படுத்திடுக!

Cpim 11

தீர்மானம் – 12

தமிழ்நாட்டில் குடிமனை, குடிமனை பட்டா கேட்டு, காத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 40 லட்சத்தை தாண்டி உள்ளது. 2006 ஆம் ஆண்டு நமது விவசாய அரங்கம் சார்பில் நாம் நடத்திய வட்டாட்சியர் அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தின் விளைவாக அன்றைய திமுக அரசு, வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி 5 லட்சம் மனை பட்டாக்களை வழங்கியது.

கடந்த ஆட்சிக் காலத்தில் சில லட்சம் மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டதாகவும், தற்போதைய ஆட்சியில் இதுவரை 6 லட்சம் மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு மனைப் பட்டா வழங்கிட தற்போது சில அரசாணைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தாலும் மனை பட்டா கேட்டு காத்திருப்பவர்களுக்கு பட்டா அளித்திட இது போதுமானது அல்ல. நீதிமன்ற உத்தரவுகளைக் காரணம் காட்டி நீர்நிலைபுறம்போக்கு இடங்களில் குடியிருப்பவர்களின் வீடுகளை,மறுகுடியமர்த்துவதற்கான மாற்று ஏற்பாடுகளைக் கூட செய்யாமல் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை பல்வேறு மாவட்டங்களில் வருவாய்த்துறையினர் மேற்கொள்கின்றனர்.

அரசின் இந்த நடவடிக்கையால் வீடற்றவர்களாக நிர்க்கதியாக்கப்படும் நிலை உள்ளது. குடியிருக்க மாற்றுஇடம், மறு வாழ்விற்கான உரிய நிவாரணம் வழங்காமல், நீர்நிலை புறம்போக்கு உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை கோருகிறது. பல லட்சம் பேர் வீட்டு மனை பட்டா கேட்டு காத்திருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றி செயல்படுத்தப்பட்டது போல வீட்டு மனைப் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது தமிழ்நாடு மாநில மாநாடு மாநில அரசை கோருகிறது.

முன்மொழிந்தவர் எம்.ஜெயசீலன்

வழிமொழிந்தவர் கலையரசி (பெரம்பலூர்)

Leave a Reply