தென்கொரிய நாட்டை சார்ந்த மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனத்தில், கடந்த 2024 ஜூன் 16 ம் தேதி 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர் கலந்து கொண்ட பேரவையில், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் தொழிற்சங்கம் அமைப்பது என்றும் அதை சி. ஐ. டி. யு உடன் இணைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றிய அடிப்படையில், ஜூன் 26 அன்று தொழிலாளர் துறை இணை ஆணையர் மற்றும் தொழிற்சங்க பதிவாளர் வசம் விண்ணப்பம் செய்யப்பட்டது.
மூன்று மாதங்களில் சாதாரணமாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கும் நடைமுறை உள்ளது. ஆனால், தொழிலாளர் துறை தாமதம் செய்ததும், நிர்வாகம் தொழிற்சங்கத்திற்கு எதிராக தொழிலாளர் குழு அமைத்து மிரட்டி கையெழுத்து கேட்ட நிலையில் செப்டம்பர் 8 அன்று வேலை நிறுத்தம் துவங்கியது.
38 நாள்கள் தொழிலாளர்கள் உறுதியாக நின்று பல்வேறு வழக்கு, அடக்குமுறை, கைது, பந்தல் பிரிப்பு, உட்கார்ந்து போராட இடம் அனுமதிக்காதது போன்ற பல்வேறு சவால்களை எதிர் கொண்டனர். இருந்த போதும் பல்வேறு தரப்பு ஆதரவு அரசியல் கட்சிகளின் ஆதரவு போராடிய தொழிலாளர்களை ஊக்கப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து அக்டோபர் 15 அன்று வழங்கப்பட்ட ஏற்புடைய அறிவுரைப்படி, தொழிற்சங்க பதிவு நீதிமன்றம் அளிக்கும் வழிகாட்டுதல் அடிப்படையில் தீர்வு காணப்படும் என வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது.
உயர்நீதிமன்றம் கடந்த டிசம்பர் முதல் வாரத்தில், 6 வாரங்களில் சங்கப் பதிவு குறித்து தொழிலாளர் துறை முடிவு செய்ய வேண்டும் என வழங்கிய தீர்ப்பின் படி 27.01.2025 அன்று தொழிற்சங்க பதிவாளர், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் பதிவு சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளது.
தொழிற்சங்க வரலாற்றில் பதிவு தாமதமாகி, உறுதியான போராட்டத்தின் மூலம் வெற்றிப்பெற்று இருப்பது பெரும் பாராட்டுக்குரியது.
அத்தகைய போராட்டத்தை நடத்திய தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது.