விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அப்பையன் நாயக்கன் பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த சாய்நாத் தனியார் பட்டாசு ஆலையில் இன்று 04.01.2025 காலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலையை துவங்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேர் காயம்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் விபத்தில் உயிரிழந்த ஆறு தொழிலாளர்களுக்கு சிபிஐ (எம்) 24 வது மாநில மாநாடு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடாக ரூபாய் 4 லட்சம் அறிவித்துள்ளது.
பட்டாசு ஆலை நிர்வாகம் முறையாக விதிமுறைகளை பின்பற்றாததால் பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகிறது. தமிழக அரசும் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இணைந்து பட்டாசு ஆலைகளில் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதை கண்காணிப்பு செய்ய வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. மேலும் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்து போன தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆலை நிர்வாகம் ரூ. 10 லட்சம், தமிழக அரசு ரூ. 20 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். காயமடைந்த தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சையும், காயத்தின் தன்மைக்கு ஏற்ப நிவாரணம் வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்ப வாரிசுகளுக்கு ESI PF மூலம் பென்சன் பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்
விபத்தில்லா பட்டாசு உற்பத்தி செய்ய தொழிற்சங்க பிரதிநிதிகளை உள்ளடக்கிய முத்தரப்பு குழு அமைத்து பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க சிபிஐ (எம்) 24வது மாநில மாநாடு கேட்டுக்கொள்கிறது.