தமிழ்நாட்டில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றுள்ள சட்டவிரோத தாது மணல் கொள்ளை பற்றி 9 ஆண்டுகளுக்கு மேல் விரிவாக விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. தாதுமணல் பிரச்சனையில் நடந்துள்ள முறைகேடுகள், நாட்டுக்கு ஏற்பட்ட இழப்புகள், தாது மணல் சுரங்கங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி, ராயல்டி தீர்மானித்தது போன்றவைகளில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளதால் இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானே முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
இவ்வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற வழக்கறிஞர் திரு சுரேஷ் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் திரு ககன்சிங்பேடி ஐ.ஏ.எஸ்., திரு சத்ய பிரதா சாஹூ ஐ.ஏ.எஸ். ஆகியோர் தலைமையில் தனித்தனியாக நடைபெற்ற விசாரணைக்குழு அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள அனைத்து முறைகேடுகளையும் முழுமையாக நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. “சுரங்க குத்தகை மற்றும் ஒப்புதல் உரிமம் வழங்குவது, போக்குவரத்து அனுமதி, சுரங்க குத்தகையில் மோனோசைட் தனிமத்தை சட்டவிரோதமாக சேர்ப்பது, கண்காணிப்பு இல்லாதது உட்பட மேலிருந்து கீழ்மட்டம் வரை நிர்வாக கட்டமைப்பு மூலம் அரசியல், நிர்வாக, தனியார் சுரங்க குத்தகைதாரர்களிடையே நிலவிய கூட்டு சதி, ஊழல் மற்றும் உடந்தைப் போக்கு அனைத்தும் வெளிப்படையாகவே தெரிகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இம்முறைகேட்டில் சம்பந்தப்பட்டுள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள், சுரங்க நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டுமென தனது உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தனியார் குடோன்களில் வைக்கப்பட்டுள்ள 1.50 கோடி மெட்ரிக் டன் தாது மணலை இந்திய கனிம நிறுவனமான ஐ.ஆர்.இ.எல். இடம் ஒப்படைக்கப்பட வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. அரசுக்கு ஏற்பட்டுள்ள ராயல்டி இழப்பு குறித்தும் முழுமையாக விசாரிப்பதோடு ஏற்கனவே நீதிமன்ற வழக்கறிஞர் மதிப்பிட்டுள்ள ராயல்டி இழப்பு ரூ. 5832 கோடியை தமிழக அரசு சுரங்க நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவினை தொடர்ந்து தமிழக அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. சிபிஐ 7 நிறுவனங்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. இந்நிலையில் முற்றிலும் எதிர்பாராத விதமாக தாதுமணல் வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் முதல் வழக்கு விசாரணையிலேயே “இப்போது உள்ள நிலை தொடர வேண்டும்” என கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டு அனைத்து மேல்நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுள்ளன. அரிய கனிமங்களைச் சுரண்டும் கொள்ளை தொடரும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். இந்த வழக்கு தொடர்பான விபரங்களை அறிந்த திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களைக் கொண்ட குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிலைநாட்ட உச்சநீதிமன்றத்தில் வாதாட வேண்டும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள், அரசியல் செல்வாக்கு செலுத்துவோர், அரசு அதிகாரிகள் ஆகியோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நாட்டின் அரிய தனிமங்களை தனிநபர் லாபத்திற்காக காவு கொடுக்கும் இந்த கொள்ளையை ஒருபோதும் அனுமதிக்க கூடாது என குரலெழுப்புமாறு அனைத்து ஜனநாயக சக்திகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அறைகூவி அழைக்கிறது.