வகுப்புவாத அரசியலை முன்னிறுத்தி மக்களை பிளவுபடுத்துவதுடன் சிறுபான்மையினர் மீதான வெறுப்பு அரசியலை முன்னெடுத்து எதேச்சதிகார நடவடிக்கைகளில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபடுவது, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வுகள், வேலையின்மை, இடம் பெயர்தல் அதிகரிப்பு, மாநில அரசுகளுக்கு நியாயமாக ஒதுக்கீடு செய்ய வேண்டிய 100 நாள் வேலைத் திட்ட ஒதுக்கீடு மற்றும் கல்வி, இயற்கை பேரிடர் உள்ளிட்ட தேவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் உள்ள பாரபட்சமான போக்குகள், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலமான தமிழ்நாடு மற்றும் கேரளாவை மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாக்கும் பாஜகவின் கூட்டாட்சி விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி வழங்கவும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாகவும், தினக்கூலியை 600 ரூபாயாக உயர்த்த வேண்டுமென ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி கிளர்ச்சி பிரச்சாரம் நடைபெறவுள்ளது.
மேலும், அரசுப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவும், ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதை கைவிட்டு நிரந்தர பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிர்வாக நடவடிக்கைகளில் லஞ்சம் அதிகரித்து இருப்பதை தடுத்திடும் உறுதியான நடவடிக்கைளை அரசு மேற்கொள்ள வேண்டும். பட்டியல் சாதி மக்கள் மீதும், பெண்கள், குழந்தைகள் மீதும் பாலியல் வன்கொடுமைகள், பள்ளிகளிலும் சாதி ரீதியான வன்மம் கொண்ட தாக்குதல்களும் அதிகரித்துள்ளன; இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு கிடைக்க வேண்டிய சட்டபடியான தீர்வுகள் தாமதமாக கூடாது. தாது மணல் மற்றும் இயற்கை வள ஆதாரங்கள் மீதும் நடத்தப்படும் கொள்ளை தடுக்கப்பட வேண்டும். முன்னாள் ஐ.ஏ.எஸ் உ. சகாயம் அளித்த ஆய்வு அறிக்கையை அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பஞ்சமி நிலங்களை மீட்டு ஏழை எளிய பட்டியலின மக்களுக்கு வழங்கிடவும், குடிமனை பட்டா கோரி விண்ணப்பித்துள்ள மக்கள் அனைவருக்கும் பட்டா வழங்கிடவும் தமிழக அரசை வலியுறுத்தியும்,
தமிழ்நாடு முழுவதும் 2025 ஜூன் மாதம் 11ந் தேதி முதல் 20ந் தேதி வரை 10 நாட்கள் நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் நடைபயணம், இருசக்கர வாகன பிரச்சாரம் மேற்கொள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு தீர்மானித்துள்ளது. இந்த முடிவை அமலாக்குவதில் கட்சி அணிகளும், ஆதரவாளர்களும் முழுமையாக ஈடுபட்டு கிளர்ச்சி பிரச்சாரத்தை வெற்றிப் பெற செய்திட வேண்டுமென மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.