ஒன்றிய பாஜக அரசு மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்த பின், தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத கொள்கைகளை அமலாக்கி வருகிறது. ஏற்கனவே, விவசாய சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற கோரி ஓராண்டுக்கும் மேல் விவசாயிகள் நடத்திய போராட்டத்தினால் ‘திருத்தங்களை வாபஸ் பெறுகிறேன்’ என பிரதமர் மோடியே அறிவிக்க வைத்தது. ஆனால், தொழிலாளர் சட்டங்களை, கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக, தொழிலாளர்கள் பாதிக்கப்படும் வகையில் திருத்தி அமலாக்க பல வகையில் முயற்சிக்கிறது. இந்த சட்ட தொகுப்புகளுக்கு எதிராக, வலுவான போராட்டங்களை, வேலை நிறுத்தங்களை தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் நடத்தி வருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பாராட்டுகிறது. அந்த அடிப்படையில் எதிர்வரும் மே 20 அன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு ஆதரிக்கிறது.
அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை, தொழிலாளர் வாரியங்கள் மூலம் தீவிரமாக மேற்கொள்வது, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 9000 என அறிவிப்பது, குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு ரூ. 26,000/- அமலாக்குவது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, 100 நாள் வேலைக்கான கூலி நிலுவையை வழங்குவது, கூலியை உயர்த்துவது போன்ற மிக நியாயமான கோரிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு அமலாக்க வேண்டும் என அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் முன்வைத்து நடைபெறும் பொது வேலை நிறுத்தம் மிகவும் அவசியமானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு குறிப்பிட விரும்புகிறது. இந்த வேலை நிறுத்தத்தை பல்வேறு விவசாய, விவசாய தொழிலாளர், மாணவர், வாலிபர், மாதர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஆதரித்து மறியல் செய்வது என்று அறைகூவல் விடுத்துள்ளனர். எனவே, அனைத்து தரப்பு பொது மக்களும் மேற்படி மே 20 ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் பங்கேற்று வெற்றி செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.