இந்தியப் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்திய குழுயின் கூட்டம் செப்டம்பர் 13 முதல் 15, 2025 வரை புதுதில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
மத்தியில், பாஜக தலைமையிலான கூட்டணி அரசாங்கம் பின்பற்றும் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகின்றன. விலையேற்றம், ஊதியங்களின் மந்த நிலை, கூர்மையாகும் சமத்துவமின்மை ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அமெரிக்க இறக்குமதிக் கட்டணங்கள் விதிப்பைத் தொடர்ந்து, வேலையின்மை குறிப்பாக அதிகரித்துள்ளது.
ஜூலை 9-ஆம் தேதியன்று பொதுவேலைநிறுத்தம் மிகப் பெரிய வெற்றி பெற வழிவகுத்த, தொழிலாளர் வர்க்கத்திற்கு மத்திய குழு தனது வாழ்த்துகளை தெரிவிக்கிறது. இந்த பொது வேலைநிறுத்தத்துடன் ஒத்துழைப்பு தந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட சமூகத்தின் பிற பிரிவினருக்கும் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறது. பொதுவேலைநிறுத்தத்தின் வெற்றி, பாஜக தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகள்மீது அதிகரித்து வரும் அதிருப்தியைப் பிரதிபலிக்கிறது. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு சிபிஐ(எம்) தமது ஆதரவை தொடரும்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் இறக்குமதி வரி பயங்கரவாதம்: இந்தியாவின் மீது 50 சதவீத இறக்குமதி வரிகளை விதித்துள்ளது அமெரிக்கா. வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தத் தவறியதற்காக 25 சதவீதமும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய், எரிவாயு வாங்கியதற்காக 25 சதவீதமும் இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை இந்தியாவின் விவசாயம், மீன்வளம், சிறு / நடுத்தரத் தொழில்கள் – குறிப்பாக துணித் தொழிலை கடுமையாகப் பாதிக்கும். அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் நமது நாட்டை அழுத்தும் நிர்ப்பந்திக்கும் வகையில் இந்தியா வந்துள்ளனர். பாஜக அரசு அமெரிக்க நிர்ப்பந்தத்திற்கு ஆளாகக்கூடாது. நமது விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் நலன்களுக்கு அரசு ஆதரவாக நிற்க வேண்டும்.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள்/இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் (எஃப்டிஏ/பிடிஏ): சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்பதில் அரசு அவசரப்படுவதால், பால், விவசாயம், பாதுகாப்பு, மருந்து, நிதி உள்ளிட்ட முக்கியமான துறைகளில் தேச நலன்கள் பின்னுக்குத்தள்ளப்படுகின்றன. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்பதில் அரசு அவசரப்படுவதை விட்டுவிட்டு, பல்வேறு தரப்பினரைக் கலந்தாலோசித்து, மக்களுக்கு எவ்விதப் பலன்கள் கிட்டும் என்பதை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும்.
கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகள்: பொருளாதாரத்தை மீட்டெடுக்க முயற்சிக்கும் வகையில், வெறுமனே இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல சலுகைகளை ஒன்றிய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. பல்வேறு பெயர்களில் ரூ.1,50,000 கோடி மதிப்புள்ள ஊக்கத்தொகைகளை அரசு அறிவித்துள்ளது. தேசிய தொலைத்தொடர்புக் கொள்கை (என்டிபி) 2025-இன் வரைவு, தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்குவதற்கும், அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எதிர்காலத்தைக் கைவிடுவதையும் முன்மொழிகிறது. பாஜக தலைமையிலான அரசின் இந்தத் திட்டங்கள், பொதுச் சொத்துக்களை தனியார் நிறுவனங்கள் வசம் மாற்றுவதையும், இந்துத்துவ வகுப்புவாத- கார்ப்பரேட் கூட்டு வலுப்படுவதையும் மீண்டும் எடுத்துக் காட்டுகின்றன.
தொழிலாளர்களின் உரிமைகள் மீதான தாக்குதல்: தொழிலாளர் நலனை பாதிப்பதுடன், சூழல் பாதுகாப்புக்கு விரோதமான வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் பலவீனப்படுத்துவதன் மூலம், ஒன்றிய அரசு கார்ப்பரேட் கொள்ளையை எளிதாக்குகிறது. பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையைத் தொடர்ந்து, அவரின் மூர்க்கமான நவதாராளமய கொள்கைகளுக்கு வசதியாக, கட்டுப்பாடுகளை நீக்கவும், விதிமுறைகளை தளர்த்தவும் இரண்டு உயர்மட்ட குழுக்களை நிதி ஆயோக் அமைப்பதாக அறிவித்தது. இது தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளின் மீதான கடும் தாக்குதலாகும்.
ஜிஎஸ்டி திருத்தம்: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை அரசு கூட்டியது. சில பொருட்களின் மீதான ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைப்பதோடு, ஜிஎஸ்டி அடுக்குகளையும் மறுசீரமைப்பதாக அறிவித்தது. ஏழைகளும், சாதாரண மக்களும் பயன்படுத்தும் பொருட்களுக்கும், சேவைகளுக்கும் வரி குறைக்கப்பட்டுள்ள நடவடிக்கை வரவேற்கத்தகுந்ததாகும். இந்தக் குறைப்பின் பலன்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பதிலாக நுகர்வோருக்கு கிடைக்கும் வகையில் அரசு தலையிட்டு உறுதி செய்ய வேண்டும். கூடுதலாக, மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடுசெய்ய ஒன்றிய அரசு முன்வர வேண்டும். மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அரசியலமைப்பு நிறுவனங்கள் மீதான கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி ஜனநாயக உரிமைகளைக் குறைக்க பாஜக அரசு முயற்சிக்கிறது.
கெட்டிப்படும் எதேச்சதிகாரம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: தேர்தல் ஆணைய உத்தரவின்படி பீகாரில் நடந்துவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) முறைகேடுகள் நிறைந்ததாக உள்ளது. இதன் விளைவாக, குடிமக்களில் பலரும், அரசியலமைப்பின் படி உறுதி செய்யப்பட்ட வாக்குரிமையை இழக்க நேர்ந்துள்ளது. இந்த திட்டத்தை முழு நாடு முழுவதும் நீட்டிக்க தேர்தல் ஆணையம் முயல்கிறது. பாஜக தலைமையிலான அரசுக்கு சாதகமாக செயல்பட்டு வந்த தேர்தல் ஆணையம், இப்போது ஆர்.எஸ்.எஸ்/சங்கப் பரிவார் கூட்டின் நோக்கங்களை செயலாக்கும் கருவியாக மாறியுள்ளது.
வாக்காளர் பதிவிற்கு, செல்லத்தக்க ஆவணமாக ஆதார அட்டையை எடுத்துக்கொள்ள வேண்டுமென உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதையும், தகுதியுள்ள எந்த வாக்காளரும் வாக்குரிமை இழக்காமலிருப்பதையும் உறுதி செய்ய நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்க்கவும், மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கவும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. மற்ற எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து, குடிமக்களின் வாக்களிக்கும் உரிமையைச் பாதிக்கும் முயற்சிகளை எதிர்ப்பதில் சிபிஐ(எம்) செயல்படும். ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும்.
மராட்டிய பொது பாதுகாப்பு மசோதா: மராட்டியத்தில் பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட பொது பாதுகாப்பு மசோதா, மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு கடுமையான தாக்குதலாகும். ‘தீவிர இடது சாரிக் குழுக்கள்’ என்று கூறப்படும் குழுக்களை எதிர்த்து போராடும் பெயரில், மாற்றுக் கருத்துக்கள் முன்வைப்பதையே பொது பாதுகாப்புக்கும், தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக சித்தரிக்க இந்த மசோதா முயற்சிக்கிறது. ‘தீவிர இடது சாரிக் குழுக்கள்’ அல்லது அதுபோன்ற அமைப்புகளுக்கான வரையறை என்னவென்று தெளிவாக்கப்படவில்லை. வேண்டுமென்றே அவ்வாறு விடப்பட்டிருப்பது, அரசியல் எதிரிகளை குறிவைப்பதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. மாற்றுக் கருத்துக்களைக் கட்டுப்படுத்தவும், எதிர்ப்புகளை முடக்கவும் இந்த மசோதாவின் கடுமையான விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது.
ஜனநாயக விரோத மசோதாக்கள்: பிரதமர், முதலமைச்சர்கள், பிற அமைச்சர்கள் காவலில் எடுக்கப்பட்டு 30 நாட்களுக்குப் பிறகு பதவி நீக்கம் செய்ய அனுமதிக்கும் மூன்று மசோதாக்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இந்த விசயத்தில், ஏற்கனவே உள்ள சட்ட நடைமுறைகளைத் தவிர்க்கும் அரசின் ஜனநாயக விரோத போக்கை இந்த மசோதாக்கள் எடுத்துக்காட்டுகின்றன. நவபாசிதத் தன்மை கொண்ட மத்திய அரசாங்கம், எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் மாநில அரசுகளுக்கு எதிராக இத்தகைய விதிகள் ஆயுதமாகப் பயன்படுத்த நினைக்கிறது. எந்த ஜனநாயகத்திற்கும் அத்தியாவசியமான கட்டுப்பாடுகளை அழித்திட இந்த நடவடிக்கை வழிவகுக்கிறது.
ஜம்மு காஷ்மீர்: தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் செயல்பாட்டை துணைநிலை ஆளுநர் பலவீனமாக்குகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு முற்றிலும் ஒதுக்கப்பட்டு, அதன் கடமைகளைச் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஜம்மு காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுகின்றன. ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பரவலான அதிருப்தியும் கோபமும் நிலவுகின்றன. மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான ஒரே வழி, ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு மாநில அந்தஸ்தை உடனடியாக திரும்ப வழங்குவதே ஆகும்.
வங்காளிகளின் வெளியேற்றம்: ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைத் தொடர்ந்து, பாஜக ஆளும் பல மாநிலங்களில் வங்க மொழி பேசும் மக்கள், குறிப்பாக வங்க மொழிபேசும் முஸ்லிம்கள் மீது குறிவைத்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஆவணங்களை சரிபார்க்காமலும், உரிய நடைமுறையை பின்பற்றாமலும், வங்க மொழிபேசுவோரை இலக்கு வைத்து வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்களாக குறிப்பிடப்படுகிறார்கள். பலர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கும், வதைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். இந்திய குடிமக்கள் உட்பட பலர், நில எல்லை/ கடல் எல்லை வழியாக வங்காளதேசத்திற்கு பலவந்தமாக அனுப்பிவைக்கப்படுவதும் நடக்கிறது. மத்திய அரசின் உத்தரவின் பேரால் வங்க மொழிபேசும் மக்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். பல இடங்களில், வங்க மொழி பேசுவோர் மீதான குறிவைத்த தாக்குதல்களை எதிர்த்து சி.பி.ஐ(எம்) தலையீடு செய்துள்ளது, அது தொடரும்.
அசாமில் வெளியேற்றங்கள்: அசாம் மாநில அரசு ஏராளமான மக்களை அவர்களின் சட்ட உரிமையான நிலங்களில் இருந்து வெளியேற்றுகிறது. சமூகத்தை பிளவுபடுத்த இந்த வெளியேற்றங்களை முதலமைச்சர் பயன்படுத்துகிறார். அந்த நிலப்பரப்பில் உள்ள கனிம வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களை சுரண்ட அனுமதிப்பதில் அரசுக்குள்ள ஆர்வமும், இந்த வெளியேற்றங்களுக்கு பிறிதொரு முக்கிய காரணமாகும். இந்த சட்டவிரோத வெளியேற்றங்களை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ் தலைவரின் தீய கருத்துகள்: தில்லியில், தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் பங்கேற்று நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் பேசிய ஆர்.எஸ்.எஸ் சர்சங்கசலாக் மோகன் பாக்வத் – மதுரா மற்றும் காசி பிரச்சினைகளை மீண்டும் பற்றவைக்க முயன்றார். ‘சகோதரத்துவத்திற்கு’ முன்நிபந்தனையாக முஸ்லிம்கள் இந்த இரண்டு இடங்களிலும் உள்ள மசூதிகளை ‘விட்டுக்கொடுக்க’ வேண்டும் என்று கோரினார். இத்தகைய கோரிக்கைகள் சமூக பதட்டங்களைத் தூண்டுவதற்கும், சமூகத்தை மத அடிப்படையில் பிளவுபடுத்தவும் கட்டமைக்கப்பட்டவையாகும். இந்திய அரசியலமைப்பை ஆர்.எஸ்.எஸ் புறந்தள்ளுவதையும், நாட்டின் சட்டங்களை மீறுவதையுமே இந்த பேச்சு எடுத்துக் காட்டுகிறது. கூட்டாட்சி அரசை தாக்கி அழித்து, இந்து ராஷ்ட்டிரத்தை நிறுவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் எண்ணங்களை அவரின் பேச்சு எடுத்துக் காட்டுகிறது.
பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் மீதான தாக்குதல்கள்: நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில், பெண்கள், தலித்துகள் , பழங்குடியினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதை மத்திய குழு விவாதித்தது. வரும் நாட்களில் பெண்கள், தலித்துகள் , பழங்குடியினர் மீதான வன்முறைக்கு எதிரான போராட்டம் தீவிரப்படுத்தப்படும். மேற்கு வங்கத்தில் ஆர்.ஜி. கார் மற்றும் கொல்கத்தா சட்டக் கல்லூரி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நடைபெறும் போராட்டங்களுக்கும், கர்நாடகாவின் தர்மஸ்தலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மத்தியக்குழு தனது ஆதரவை தெரிவிக்கிறது.
நாடாளுமன்ற அமர்வு: நாடாளுமன்றத்தின் மழைக்கால அமர்வில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக போராடின. பீகாரில் நடந்துவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்து எந்த விவாதத்தையும் அரசு அனுமதிக்க மறுத்தது. கடும் எதிர்ப்புகளுக்கு இடையில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா மற்றும் மாநில அரசுகளின் உரிமைகளை மீறும் விளையாட்டு மசோதா உட்பட பல மசோதாக்களை ஒன்றிய அரசு நிறைவேற்ற முயற்சித்தது.
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தில் திருத்தம், நாட்டின் முக்கிய கனிம வளங்களை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் சுரண்ட அனுமதிக்கிறது. இது தேசிய நலன்களுக்கு மிகவும் பாதகமானது. ஆறாவது அட்டவணையின் கீழ் பாதுகாக்கப்படும் நூற்றுக்கணக்கான ஏக்கர் பழங்குடி நிலங்களும், தனியார் நிறுவனங்கள் சுரண்டுவதற்காக அனுமதிக்கப்படுகிறது. இதை நாம் எதிர்க்க வேண்டும்.
முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசு தொடர்ச்சியாக மறுப்பது அதன் எதேச்சதிகார போக்கின் வெளிப்பாடாகும். இதன் விளைவாக, மக்களை நேரடியாகப் பாதிக்கும் பல விஷயங்கள் நாடாளுமன்ற விவாதத்திற்கு ஒருபோதும் வராமல் போகின்றன. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும், மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதை உறுதி செய்வதில் பங்கு வகிக்க வேண்டும்.
குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தங்கர் திடீர் பதவி விலகலைத் தொடர்ந்து நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில், இந்தியா கூட்டமைப்பின் சார்பில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இத்தேர்தல் போட்டி, பாஜக/ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துத்துவ வகுப்புவாத சித்தாந்தத்திற்கும், ஜனநாயகம், மதசார்பின்மை மற்றும் சமத்துவம் போன்ற அரசியலமைப்பு கோட்பாடுகள் மீதான தாக்குதலுக்கும் எதிராக போராட்டத்தை வலுப்படுத்துவதாக அமைந்தது. இந்தியா கூட்டமைப்பின் கட்சிகள், துணைத் தலைவர் வேட்பாளருக்கு தங்களின் அனைத்து வாக்குகளும் பதிவாயினவா என்று பார்க்க வேண்டும்.
நேபாளத்தில் கலவரம்: நேபாளத்தை அதிர வைத்த பெரிய எதிர்ப்புப் போராட்டங்களில் (முக்கியமாக இளைஞர்கள் (Gen Z) தலைமையில்), காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் 70 இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு சிபிஐ(எம்) இரங்கல் தெரிவிக்கிறது. சமூக ஊடக தளங்களை தடை செய்ய அரசு எடுத்த முடிவு தற்காலிக தூண்டுதலாக இருந்தாலும், ஆழமான அதிருப்தி மக்களிடையே பல ஆண்டுகளாக உருவாகி வருகிறது தொடர்ச்சியாக அமைந்த அரசுகள் . நீண்டகால பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தோல்வியடைந்தது, பரவலான ஊழல், வேலைவாய்ப்பின்மை போன்றவை பொதுவான ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
வலதுசாரி சக்திகள், குறிப்பாக சாத்வீக ஆதரவாளர்கள், ராஜகுடும்பத்தினர், இந்துத்துவ சக்திகள் கைகோர்த்த குழுவினர் இந்த அதிருப்தியைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன. முடியாட்சிக்கு எதிரான நீண்ட மற்றும் கடினமான போராட்டத்தின் மூலம் அடையப்பட்ட வெற்றிகள், அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள ஜனநாயக, மதசார்பற்ற மதிப்பீடுகளை பாதுகாப்பதில் கவனம் தேவை.
இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டிப்போம்: காசாவிற்குள் இடைவிடாமல் குண்டுவீசி வரும் இஸ்ரேல், மேற்குக் கரையில் பாலஸ்தீனர்களைத் தாக்கவும், அவர்களின் நிலங்களைக் கைப்பற்றவும் இஸ்ரேலியக் குடியேறிகளுக்கு கட்டற்ற அனுமதி அளிக்கிறது. பட்டினி பரவலாகியுள்ள காசாவிற்குள் நுழையும் அனைத்து வகையான மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் தடுக்கிறது. குழந்தைகள் , வயதானவர்கள் பசியால் இறக்கும் செய்திகள் நாள்தோறும் வருகின்றன. களத்திலிருந்து செயல்படும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன, மேலும் மருத்துவமனைகள் மீதும் குண்டுகள் வீசப்படுகின்றன. முழு காசா நகரமும் இடிந்துபோய் சிதைந்த நிலையில் உள்ளது.
சர்வதேச சட்டங்களுக்கு, விதிகளுக்கும் மாறாக அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தும் கத்தார் நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இப்பகுதியில் அமைதிக்கு எதிரான ஒரு முரட்டு நாடாக இஸ்ரேல் செயல்படுவதையும், சமாதானத்திற்கான எந்த முன்மொழிவுகளையும் ஏற்க தயாராக இல்லை என்பதையும் இது மீண்டும் எடுத்துக் காட்டுகிறது. இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள சர்வதேச சமூகம் ஒன்றிணைக்க வேண்டிய நேரம் இது.
மத்திய குழு அறைகூவல்கள்
சி.பி.ஐ(எம்) மத்தியக்குழு பின்வருமாறு முடிவுகளை மேற்கொண்டுள்ளது
1. செப்டம்பர் கடைசி வாரத்தில், டிரம்பின் இறக்குமதி வரி பயங்கரவாதத்திற்கு எதிராகவும், அமெரிக்காவின் முன் சரணடையும் பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கத்தை அம்பலப்படுத்தியும் பரவலான பிரச்சாரம் மேற்கொள்வது.
2. நாடு முழுவதும் பரவலாக, பாலஸ்தீன ஒருமைப்பாட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது. அந்த வகையில் பாஜக அரசின் இஸ்ரேல் சார்பு கொள்கையை அம்பலப்படுத்தி, அனைத்து மாநில தலைநகரங்களிலும் வெவ்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், கலைஞர்கள் மற்றும் தனிநபர்களை ஈடுபடுத்தி பெரிய பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும்.
3. அனைத்து மாநிலக் குழுகளும் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக இயக்கங்களையும், போராட்டங்களையும் முன்னெடுக்கும்







