அரசியல் தமைமைக்குழுசெய்தி அறிக்கை

நீதிபதி பி.ஆர். கவாய் மீது நடந்த தாக்குதலுக்கு – சிபிஐ(எம்) கடும் கண்டனம்

Ps copy 2

இந்தியாவின் முதன்மை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி எறிந்த சம்பவத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக் குழு கடுமையாகக் கண்டிக்கிறது. இச்சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட, உச்ச நீதிமன்ற பார் கவுன்சிலில் பதிவுபெற்ற வழக்கறிஞர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சி.பி.ஐ(எம்) வலியுறுத்துகிறது.

நீதிமன்றத்திற்குள் சென்று ‘சனாதன தர்மத்தை’ பாதுகாப்பதாக முழங்கியபடியே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி எறிந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதும்,  கண்டிக்கத்தக்கதும் ஆகும். சாதிவாத, மனுவாத, மதவாத கருத்துக்களை பரப்பிவரும் பாஜக முதல்வர்கள், அமைச்சர்கள், முன்னணி தலைவர்களின் சமீபத்திய பேச்சுக்களே இத்தகு செயல்களுக்கு துண்டுகோலாக அமைந்துள்ளன. இந்த சம்பவம், இந்துத்துவ வகுப்புவாதிகளால்  சமுதாயத்தில் பரப்பப்படும் மனுவாத, மதவாத விஷத்தின் மற்றொரு வெளிப்பாடாகும். மேலும், தங்களின் சித்தாந்தத்திற்கு எதிரான எந்த கருத்தையும் ஏற்க மறுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பரப்பிவரும் சகிப்பின்மையையும் இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

ஒன்றிய அரசு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு போதிய பாதுகாப்பை வழங்கவேண்டுமென சி.பி.ஐ(எம்) கோருகிறது. கருத்து சுதந்திரத்தையும், எதிர் கருத்துக்களை முன்வைக்கும் உரிமைகளையும் காக்கும் விதத்தில் – சகிப்பற்ற தன்மையை முன்னெடுக்கும் நபர்கள், அமைப்புகளின் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பது அரசின் கடமையாகும்.