மதுரை ரயில் நிலையம் எதிரில் உள்ள எல்.ஐ.சி கிளை அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வந்த கல்யாணி நம்பி என்பவர் டிசம்பர் 18 அன்று அலுவலகத்தில் பரவிய நெருப்பில் சிக்கி உயிரிழந்தார். ஒரு மாத கால விசாரணைக்கு பின்னர் அது விபத்து அல்ல, அதே அலுவலகத்தில் உடன் பணிபுரியும் அதிகாரி ஒருவரால் நிகழ்த்தப்பட்ட கொலை என்று காவல்துறை வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர் ராம் என்பவரை கைது செய்து இருக்கிறது.
கல்யாணி நம்பி உயிரிழப்பு ஏற்பட்டவுடனேயே பிணவறை முன்பாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் காவல்துறையிடம் இது குறித்த விசாரணை தேவை, இதன் பின்புலத்தில் சதி ஏதும் உள்ளதா என்பது கண்டறியப்பட வேண்டுமென்று வலியுறுத்தினர். பின்னர் காவல்துறையிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களும், மதுரை மாநகர் மாவட்டக்குழு செயலாளர் கணேசன் அவர்களும் தொடர்பு கொண்டு விசாரணையை விரைவுபடுத்தக் கோரினர். இத்தகைய சூழலில் காவல்துறை கல்யாணி நம்பி எரித்து கொல்லப்பட்டுள்ளார் என்ற முடிவுக்கு வந்து கைது நடவடிக்கையையும் மேற்கொண்டு இருக்கிறது. காவல்துறையின் இந்நடவடிக்கை பாராட்டத்தக்கது.
சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பதும், எல்.ஐ.சி போன்ற மிகப்பெரும் பொதுத் துறை நிறுவனத்திலேயே இத்தகைய கொடூரம் நிகழ்ந்து இருப்பதும் அதிர்ச்சிக்கும், ஆழ்ந்த வருத்தத்திற்கும் உரியதாகும். அலுவலக நேரங்களுக்கு அப்பாற்பட்டு பெண்கள் பணிபுரியும் சூழல்களில் அவர்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட உரிய வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும். பெண்கள் இன்று எல்லாத் தளங்களிலும் பாலின பாரபட்சங்களை உடைத்து, கடந்து முன்னேறுவது ஊக்குவிக்கப்பட வேண்டும்.
எல்.ஐ.சி மேலாளர் கல்யாணி நம்பி அவர்களின் படுகொலைக்கு விரைவான நீதி வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
(பெ.சண்முகம்)
மாநில செயலாளர்







