ஜனவரி 16 – 18, 2026 தேதிகளில் திருவனந்தபுரத்தில், ஈ.எம்.எஸ். அகாடமியில் நடைபெற்ற சிபிஐ(எம்) மத்தியக்குழு கூட்டத்தின் முடிவுகள் பின்வருமாறு:
கேரள மாநிலத்தில் தீவிர வறுமையை ஒழித்தமைக்காக, இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) அரசாங்கத்தை மத்திய குழு பாராட்டுகிறது. இந்த வெற்றியானது கேரள வளர்ச்சி முன்மாதிரியின் செயல்திறனில் வெளிப்படும் முற்போக்கான அரசியலுக்கும், நிர்வாக பரவலாக்கத்திற்கும், உரிமை சார்ந்த அணுகுமுறைக்கும் சான்றாகும்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு தொடர்ந்து நடத்திய நிதி தாக்குதலுக்கு மத்தியிலும் கேரளம் இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. இது, எத்தனை தடைகள் வந்தாலும், மக்கள் நலனை பாதுகாத்து நிற்பதில் இடதுசாரி அரசாங்கத்தின் அரசியல் விருப்பத்தையும் உறுதிப்பாட்டையும் எடுத்துக் காட்டுவதால், இந்தச் சாதனை இன்னும் முக்கியமானதாகும்.
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை கேரளத்தில் அறிவிப்புச் செய்ய மாட்டோம் எனத் தெளிவாகக் கூறியுள்ள எல்டிஎஃப் அரசாங்கத்தை, தனது தொழிலாளர் வர்க்கச் சார்பு நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை எடுத்துக் காட்டியமைக்காக மத்திய குழு பாராட்டுகிறது.
சட்டமன்றத் தேர்தல்கள்: சில மாதங்களில், கேரளம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தல்களுக்கான கட்சியின் தயாரிப்புகளை மத்திய குழு விவாதித்தது.
கேரளத்தில், கட்சி எல்டிஎஃப் அரசின் சாதனைகளை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்து, மீண்டும் எல்டிஎஃப் அரசாங்கத்தை கொண்டுவர பாடுபடும். பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, கேரளத்திற்கான நிதிப் பங்கீட்டு உரிமையை மறுப்பது, நிதிக் கட்டுப்பாடுகள் விதிப்பது, கூட்டாட்சியை தாக்கிச் சிதைக்கும் போக்காகும். இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் திறம்பட செயல்படத் தவறியதையும், குறிப்பாக கேரளத்தில், ஆர்எஸ்எஸ்-பாஜக வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் பலவீனத்தை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக எல்டிஎஃப் ஆட்சிக்கு வருவதற்காக மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையை மத்திய குழு தெரிவிக்கிறது.
மேற்கு வங்கத்தில், சமூகத்தை மத அடிப்படையில் பிளவுபடுத்த முயலும் திரிணாமுல் காங்கிரஸ் , பாஜக ஆகிய இரண்டையும் தோற்கடிக்க கட்சி பாடுபடும். அவர்களுக்கு எதிராக செயல்படத் தயாராக உள்ள அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்க முயற்சிப்போம்.
தமிழ்நாட்டில், பாஜகவினையும், அதன் கூட்டணியையும் தோற்கடிக்க திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவோம்.
அசாமில், பாஜக எதிர்ப்புக் கட்சிகள் மற்றும் சக்திகளை ஒன்றிணைத்து, வகுப்புவாத வெறியும், பிளவுபடுத்தலும் கொண பாஜக அரசைத் தோற்கடிக்க கட்சி பாடுபடும்.
புதுச்சேரியில், பாஜக கூட்டணி அரசைத் தோற்கடிக்க கட்சி பாடுபடும்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான தாக்குதலும் மக்கள் விரோதக் கொள்கைகளும்:
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, மக்களின் நலன்களுக்கு பாதகமான பல முக்கிய சட்டமுன்மொழிவுகளை சரியான விவாதத்திற்கு உட்படுத்தாமல் நிறைவேற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரைப் பயன்படுத்தியது. நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் அறிவிக்கப்பட்டன; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் மாற்றப்பட்டு ‘ஜி ராம்-ஜி’ எனும் சட்டம் கொண்டுவரப்பட்டது; விதை சட்டமுன்மொழிவு மற்றும் மின்சாரத் திருத்தச் சட்டமுன்மொழிவு ஆகியவை வரவுள்ளன.
காப்பீட்டுத் துறையில் 100 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீட்டையும், அணுமின் நிலையங்களில் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் நுழைவையும் அனுமதிக்கும் சட்டமுன்மொழிவை ஒன்றிய அரசு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றியுள்ளது. அணுசக்தி போன்ற முக்கியமான துறையைத் தனியார் நிறுவனங்களுக்குத் திறப்பது பேரழிவை ஏற்படுத்தும்.
பாஜக வேண்டுமென்றே நாடாளுமன்ற செயல்பாட்டை பலவீனப்படுத்துகிறது. தனஹ்து ஆட்சி நிர்வாகத்தை மக்கள் மன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்த மறுக்கிறது. இந்தச் செயல்கள் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பைத் தகர்க்கின்றன, எதேச்சதிகாரப் போக்கை கெட்டிப்படுத்துகின்றன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்): சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) என்பது பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணியால் தயாரிக்கப்பட்ட அரசியல் கணக்கோடு கூடிய திட்டமாகும். இந்த திட்டத்தை செயல்படுத்த தேர்தல் ஆணையம் ஒத்துழைப்பு நல்குகிறது. குடியுரிமையைத் தீர்மானிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் கைப்பற்ற முயற்சிப்பதை எதிர்த்து கட்சி விரிவான பிரச்சாரம் நடத்தும், அதே நேரத்தில் தகுதியான எந்த வாக்காளரும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும். இதேபோல், பாஜகவானது, தேர்தல் ஆணைய நிர்வாகத்தை உடந்தையாக்கி போலி வாக்காளர்களை, பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பதையும் விழிப்புடன் இருந்து உறுதி செய்திடுவோம்.
இந்திய பொருளாதார நிலைமை: பாஜக அரசின் அதிகாரப்பூர்வ பொருளாதாரத் தரவுகள் குறித்து ஐஎம்எஃப் அதிருப்தியை வெளிப்படுத்தியது, பலவீனங்களையும், எண்கள் நம்பத்தகாமல் இருப்பதையும் குறிப்பிட்டது. இது, உண்மையான பொருளாதாரம் நெருக்கடியில் இருக்கும் போது, வளர்ச்சியின் மாயத் தோற்றத்தை உருவாக்குவதற்காக பாஜக அரசு எண்களை திரித்து பயன்படுத்தும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ) அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தியாவுக்குள் நுழையும் தொகையை விட அதிக பணம் வெளியேறியதால், நிகர வெளிநாட்டு நேரடி முதலீடு (எஃப்டிஐ) குறைந்துள்ளது தெரிகிறது. கடந்த ஆண்டு முழுவதும் ரூபாய் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து, ஒரு டாலர் ரூ.90 தாண்டி புதிய தாழ்வு நிலையை எட்டியுள்ளது, இதனால் ரூபாய் மிகவும் பலவீனமான ஆசிய நாணயமாக உள்ளது. அரசின் குறைபாடான பொருளாதாரக் கொள்கைகளும் முன்னுரிமைகளும், நிச்சயமற்ற வர்த்தக நிலைமைகளும் ரூபாய் மதிப்பு குறைவதற்குக் காரணமாகும். இதன் விளைவாக, தொழிலாளி வர்க்கம், விவசாயிகள் , சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் உரிமையாளர்கள் வாழ்க்கைச் செலவு உயர்வதோடு, ஏற்றதாழ்வுகள் அதிகரித்து அதனால் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
பெண்கள், தலித்துகள் பழங்குடியினர்மீதான தாக்குதல்கள்: பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் மீதான தாக்குதல்கள் குறிப்பாக பாஜக ஆட்சியிலுள்ள மாநிலங்களில் தணியாமல் தொடர்கின்றன. (ஒன்றிய/மாநில) பாஜக அரசுகளின் ஆதரவாலும், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்புவதுடன், குற்றவாளிகள் மேலும் ஊக்கம் பெற்று அதனால் இத்தகைய தாக்குதல்கள் அதிகரிக்கின்றன.
சிறுபான்மையினர்மீதான தாக்குதல்கள்: இந்துத்துவா வகுப்புவாத அமைப்புகள், பஜ்ரங் தளம் போன்ற அவற்றின் இணை அமைப்புகள், பல இடங்களில் கிறிஸ்தவர்கள் மீது மோசமான தாக்குதல்களை நடத்தி, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை சீர்குலைத்துள்ளன. இடம்பெயர்ந்து உழைக்கும் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பது மற்றுமொரு ஆபத்தான போக்காகும். குறிப்பாக வங்கத்தில் இருந்தும், வடகிழக்கு இந்தியாவிலிருந்தும் வருவோர் மீதான தாக்குதல்களை தடுப்பதில் அரசு செயலற்றிருப்பது அத்தகைய தாக்குதல்களை கூடுதலாக்குகிறது.
தமிழ்நாட்டில் வகுப்புவாத பதட்டங்களைத் தூண்டுவதற்கான முயற்சிகள்: அரசியல் லாப நோக்கோடு, பாஜகவும் பிற இந்துத்துவ வகுப்புவாத சக்திகளும், மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி சர்ச்சையை ஏற்படுத்தி வகுப்புவாத பதட்டங்களைத் தூண்ட முயற்சிக்கின்றன. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுகள், கெடுவாய்ப்பாய வகுப்புவாத சக்திகளை வலுப்படுத்துகின்றன. அதிமுக போன்ற கட்சிகள் இத்தகைய பிளவுபடுத்தும் சக்திகளை ஆதரிக்கின்றன.
வகுப்புவாத வெறுப்புக்கு எதிராக ஒற்றுமையாக நின்று, மாநிலத்தின் பன்முக மரபினை பாதுகாத்த மதுரை மக்களும், தமிழ்நாட்டு மக்களும் பாராட்டுக்குரியவர்கள். வகுப்புவாத நல்லிணக்கத்தைப் பேணிய திமுக அரசின் பணியை மத்திய குழு பாராட்டுகிறது. மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு இந்துத்துவா குழுக்கள் விடுத்த மரண அச்சுறுத்தல்களை மத்திய குழு கண்டிக்கிறது.
மேற்குறிப்பிட்ட தாக்குதல்கள் அனைத்தும், இந்திய மரபினை சீர்குலைத்து, இந்துத்துவ ராஷ்டிரத்தை நிறுவும் ஆர்எஸ்எஸ்-பாஜகவின் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
அமெரிக்க ஆக்கிரமிப்பு: வெனிசுலாவுக்கு எதிராக, முன்னெப்போதும் காணாத ஆக்கிரமிப்புச் செயலில் அமெரிக்கா ஈடுபட்டது. பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தொடர்ந்து வருகிறது. இவற்றை சி.பி.ஐ(எம்) மத்திய குழு கண்டிக்கிறது. அமெரிக்கா ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறது, அதன் மீது இராணுவத் தாக்குதலை நடத்த முடிவு செய்துள்ளது. என்ன விலை கொடுத்தாலும் கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க விரும்புகிறது. இவை அனைத்தும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு அதிகரிப்பதால் முழு உலகிற்கும் எழுகின்ற அச்சுறுத்தலையும் காட்டுகின்றன. ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கும், அச்சுறுத்தல்களுக்கும் எதிராகப் போராடும் வெனிசுலா மற்றும் பாலஸ்தீன மக்களுடன் மத்திய குழு இணைந்து நிற்கிறது. பொருளாதார தாக்குதல்களுக்கும், ஏகாதிபத்திய தலையீட்டுக்கும் எதிராக நிற்கும் ஈரான் மக்களுடன் மத்திய குழு தனது ஆதரவை வெளிப்படுத்துகிறது.
அமெரிக்கா / ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தங்களை கொண்டுவர இந்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை மத்திய குழு எதிர்க்கிறது. இந்த ஒப்பந்தங்கள் நமது விவசாயத்தையும், தொழில்துறையையும் அழித்து, நமது மக்கள் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்தும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உடனடியாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால், இந்தியாவை 500 சதவீத வரிகளால் தாக்கவிருப்பதாக அவர் அச்சுறுத்தியுள்ளார். அமெரிக்க அழுத்தத்திற்கு எதிராக உறுதியாக நிற்காமல், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு அதற்கு வளைந்துகொடுக்க முயல்கிறது.
வெனிசுலா, பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டில் நின்று அமெரிக்காவையும், அதன் கொள்கைகளையும் கண்டிக்காத இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை ஒரு அவமானமாகும். அமெரிக்காவின் ஏகாதிபத்திய போக்குகளுக்கு பாஜகவின் கொள்கைகள் எவ்வாறு உடன்பட்டுப் போகின்றன என்பதை இது காட்டுகிறது, இதனால் இந்தியாவின் மிக முக்கியமான சுயேட்சைத்தன்மை சமரசம் செய்யப்படுகிறது.
உலகப் பொருளாதார நிலை: உலகப் பொருளாதாரம் தொடர்ந்து நெருக்கடி நிலையிலேயே உள்ளது. நீடித்த வர்த்தக பதட்டங்கள் உலக பொருளாதாரத்தின் மீது நிழலிட்டுள்ளன, வர்த்தக கொள்கைகளின் நிச்சயமற்ற நிலைமை அதிகரித்து வருகிறது. வரிகளால் ஏற்படும் சுமைகளை, நிறுவனங்கள் நுகர்வோரின் தலையில் தள்ளிவிடும்போது, இந்த பதட்டங்கள் தீவிரமடையக்கூடும். அமெரிக்காவில் பணவீக்கம் உயர்ந்திருப்பது தொழிலாளி வர்க்கத்தையும் சாதாரண குடிமக்களையும் கடுமையாகத் தாக்குகிறது. வேலை வாய்ப்பு உருவாக்கம் தேங்கி நின்று, வேலையின்மை அதிகரித்துள்ளது.
அதிகரித்து வரும் கடன் நிலைமை, அதிகரித்து வரும் பாதுகாப்புச் செலவுகள், உயரும் வேலையின்மை மற்றும் ஏற்றத்தாழ்வுகள் உலகெங்கிலும் மனக்கசப்பைத் தூண்டுகின்றன. இந்த நிலையற்ற சமூக-பொருளாதார சூழல் தீவிர வலதுசாரி சக்திகளின் வளர்ச்சிக்கு வளமான வாய்ப்பை வழங்குகிறது.
வங்கதேச வன்முறை: வங்கதேசத்தில் பரவும் வகுப்புவாத வன்முறையும், மதச் சிறுபான்மையினர்மீதான தாக்குதல்களையும் மத்திய குழு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. இந்த தாக்குதல்களில் குறைந்தது நான்கு இந்து இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலைமைகள் வங்கதேசத்தில் மட்டுமல்லாமல், பிராந்தியம் முழுவதுமே மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எல்லையின் இருபுறமும் உள்ள வகுப்புவாத சக்திகள், ஒருவருக்கொருவர் உதவி செய்து வெறுப்பை மேலும் தூண்டுவதற்காக இந்த நிலைமையைப் பயன்படுத்த முயற்சிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாடு, பெலெம்: பிரேசில் நாட்டில் பெலெமில் நடைபெற்ற காப்30 உச்சிமாநாடு தோல்வியில் முடிந்தது. நிதி, வர்த்தக நடவடிக்கைகள், வெப்ப தணிப்பு வழிமுறைகள், பிற பிரச்சினைகள் குறித்த ஆழமான கருத்து வேறுபாடுகளால் முக்கியமான முடிவுகளின் முன்னேற்றத்தில் தடை ஏற்பட்டது.
இக்காலகட்டத்தில் பல நாடுகளும் புயல், சூறாவளி, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இலங்கை தீவில் சூறாவளி தாக்கம் மோசமான சேதத்தை ஏற்படுத்தியது. இந்த பேரழிவுகளின் தீவிர நிலைமை, காலநிலை மாற்ற பிரச்சனை புயல் வடிவங்களையும், மோசமான வானிலை நிகழ்வுகளையும் எவ்வாறு தீவிரப்படுத்துகிறது என்பதற்கான தெளிவான உதாரணமாகும். முதலாளித்துவ பேராசையால் கட்டுப்பாடற்ற முறையில் இயற்கை சுரண்டப்படுவதும், பெரிய அளவிலான காட்டு பறப்பு அழிக்கப்படவும் வழிவகுத்தது. மோசமான நில மேலாண்மை, இது பல மலைப்பகுதிகளில் நிலச்சரிவுக்கு பங்களித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய மாசுபடுத்தி நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, 66 சர்வதேச ஒப்பந்தங்களில் இருந்தும், அமைப்புகளில் இருந்தும் விலகியது, அவற்றில் பெரும்பாலானவை காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பானவை. அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம், பல தீவிர வலதுசாரி அரசுகளுடன் சேர்ந்து, காலநிலை மாற்ற பிரச்சனை பற்றி சந்தேகம் கிளப்பியதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை தீர்வு நடவடிக்கைகளில் குறைந்த அளவே உறுதிப்பாட்டைக் காட்டியுள்ளது.
மத்திய குழு அரைகூவல்கள்
ஊரக வேலை உறுதிச் சட்டத்தை நீக்குதல், தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை அறிவித்தல், மின்சார சீர்திருத்தச் சட்டமுன்மொழிவு ஆகியவற்றுக்கு எதிரான பிரச்சாரத்தை, தொழிலாளர், விவசாயி, விவசாய தொழிலாளர், ஊரக ஏழைகளின் அனைத்து பிரிவினரிடையே நடத்த வேண்டுமென மத்தியக் குழு, கட்சி அணிகளுக்கு அரைகூவல் விடுக்கிறது.
பிப்ரவரி 12 பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு: மத்தியத் தொழிற்சங்கங்கள் விடுத்த பொது வேலை நிறுத்த அழைப்பை கட்சி தீவிரமாக ஆதரிக்கிறது. வேலை நிறுத்த நாளன்று, தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவாக கட்சி கட்சி ஊழியர்கள் முன்னிற்பார்கள்.
அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான கண்டனம்: வெனிசுலா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக கட்சி விரிவான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் , அனைத்து பெரிய நகரங்களிலும், குறிப்பாக மாநில தலைநகர்களிலும் பெரிய அளவிலான கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் பங்கேற்கும்படி அனைத்து பாஜக அல்லாத கட்சிகளையும் அணுகுவோம்.
ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை நீக்குவதற்கு எதிராக: ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை நீக்குவதற்கு எதிராக கட்சி தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ளும். அனைத்து நிலைகளிலும் கட்சித் தலைவர்கள், அனைத்து வர்க்க, வெகுஜன அமைப்புகளின் பணியாளர்கள் உட்பட, இந்தப் பிரச்சாரத்தில் பங்கேற்பார்கள். மகாத்மா காந்தியின் நினைவுநாளான ஜனவரி 30 அன்று இப்பிரச்சாரத்தை தொடங்கி ஒரு வார காலம் (பிப் 5) வரை நடத்துவோம்.
பாஜக மற்றும் இந்துத்துவா வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான தனது உறுதியான போராட்டத்தைத் தொடர்வதுடன், கட்சியின் பலத்தை அதிகரிக்க பாடுபடுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்திய குழு உறுதியேற்கிறது.







