அரசியல் தமைமைக்குழுசெய்தி அறிக்கை

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் முழுமையான விவரங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும்!

PS copy

வெளிச்சத்திற்கு வராத  ஒப்பந்த விவரங்கள் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒரு வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக கார்ப்பரேட் ஊடகங்கள் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஒப்பந்தத்தின் விவரங்கள் இன்னும் வெளிச்சத்திற்கு வராத நிலையில் இந்த ஆரவாரம் முற்றிலும் பொருத்தமற்றதாகும். வர்த்தக ஒப்பந்தத்தின் முழுமையான நோக்கம் மற்றும் விவரங்கள் கிடைத்த பின்னரே ஒரு சரியான மதிப்பீட்டைச் செய்ய முடியும். எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியப் பொருட்களின் இறக்கு மதிக்கு 18 சதவிகித வரி விதிக்கப்படும். அதே  சமயத்தில் இந்தியா அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளையும் வரியல்லாத தடைகளையும் பூஜ்ஜியமாகக் குறைத்திடும் என்று தெரிய வருகிறது.

அமெரிக்கப் பொருட்கள்  இந்தியாவை நிறைக்கும் இவ்வாறு வரிகளை நீக்குவது, நாட்டை அமெரிக்கப் பொருட்களால் நிரம்பி வழியச் செய்யும். இது நம் நாட்டின் தொழில்களையும், தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களையும் கடுமையாகப் பாதிக்கும்.  வரியல்லாத தடைகளை நீக்குவது என்பதன் பொருள், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் மானியங்கள் மற்றும் பிற நடவடிக்கைகளை நீக்குவதாகும்.  மேலும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டிருப்பதாகவும், 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாயப் பொருட்களை வாங்குவதற்கு இந்தியா உறுதியளித்திருப்பதாகவும் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இது உண்மையாக இருப்பின், இந்தியா தனது இறையாண்மையைக் காவு கொடுத்து அடிபணிந்த நிலையில், மேற் கொள்ளப்பட்டுள்ள இந்த வர்த்தக ஒப்பந்தம் மிகவும் சமநிலையற்ற தன்மையைக் கொண்டிருப்பதையே காட்டுகிறது.

ஒப்பந்தம் பொதுவெளியில் முன்வைக்கப்பட வேண்டும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் முழுமையான விவரங்களை அரசாங்கம் நாடாளுமன்றத்திலும், பொது வெளியிலும் வெளியிட வேண்டும். அப்போதுதான் அது குறித்து ஒரு முழுமையான விவாதம் நடத்த முடியும். இந்தியத் தொழில், விவசாயம் மற்றும் உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாக்க தீங்கு விளைக்கும் விதிகள் இருப்பின் அவை ரத்து செய்யப்பட வேண்டும்.