செய்தி அறிக்கை

ஊழல் – முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தாமதமின்றி அனுமதி வழங்க வேண்டும்! தமிழக அரசுக்கு – சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!

Briberry 850x460 Acf Cropped

முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் – முறைகேடுகள் குற்றச்சாட்டுக்களில் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட அரசு உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை 2021ம் ஆண்டு நவம்பர் மாதமே அனுமதி கேட்டிருப்பதாகவும், தமிழக அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் மிக கடுமையான ஊழல் மற்றும் முறைகேடுகள் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர் எஸ்.பி. வேலுமணி. அவரது வீட்டில் நடந்த வருமான வரி சோதனைகளுக்கு பின்பு அவர் மீதான வழக்கில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. அதேபோன்று எந்தவொரு ஊழல் மற்றும் முறைகேடுகளை அமைச்சர் மட்டுமே செய்து விட முடியாது. அதிகாரிகள் அதற்கு துணைபோவதும், பங்குதாரர்களாக இருப்பதும் பல நேர்வுகளில் வழக்கமாக உள்ளது. திட்ட மதிப்பீடுகளின் போது வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக, உத்தேச மதிப்பீடுகளை தாறுமாறாக நிர்ணயித்து அதன் மூலம் பல அதிகாரிகள் ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் துணை போனதாக ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு 2021 நவம்பர் மாதமே அனுமதி கேட்டதாகவும், ஆறு மாதங்கள் கடந்துவிட்ட பிறகும் தமிழக அரசு அதற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
மக்களின் வரிப்பணம் விரயமாவதற்கும், ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் துணைபோன அதிகாரிகள் மீது கடந்த பல வருடங்களாகவே குற்றச்சாட்டுக்கள் வந்தபோதும் அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை என்கிற நிலையே நீடிக்கிறது. அரசு அதிகாரிகள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களே தவிர அமைச்சர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு துணைபோக வேண்டியவர்கள் அல்ல. இது கடுமையான குற்றமாகும். இத்தகைய முறைகேடுகளில் அதிகாரிகள் தண்டிக்கப்படாமல் விடப்படுவது தொடர்ந்து தவறுகள் செய்து வருபவர்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாக ஆகி விடும். முறைகேடுகள் செய்த அமைச்சர்கள் மீது ஆரம்பத்தில் விசாரணை வேகமாக நடப்பதும், பின்னர் அதைப்பற்றி சம்பந்தப்பட்ட துறைகள் மெத்தனமாக நடந்து கொள்வதும் வழக்கமாக உள்ளது.
எனவே, தமிழக அரசு உடனடியாக ஊழல் – முறைகேடுகளில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதியளிப்பதற்கும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கை விரைவுபடுத்துவதற்கும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழக அரசை வலியுறுத்துகிறது.
கே. பாலகிருஷ்ணன் மாநில செயலாளர்