தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவியர் பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்விக்காக கல்லூரிகளில் சேர்ந்திட விண்ணப்பித்து வருகின்றனர். மத்திய பள்ளிக் கல்வித்துறை வாரியம் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 4 அல்லது 5 ஆம் தேதிகளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உயர்கல்வித்துறை அமைச்சர் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தபின்னர் 5 நாட்கள் கழித்தே அனைத்து கல்லூரிகளும் தங்கள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என கூறியதை கவனத்தில் கொள்ளாமல் சில கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை தொடர்வதும், சில கல்லூரிகள் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது என அறிவிப்பதும் ஏற்க தக்கதல்ல.
சிபிஎஸ்இ மாணவர்களும், அவர்தம் பெற்றோர்களும் மிகவும் பதட்டத்திலும், அச்சத்திலும் இருக்கிறார்கள். மேலும், தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டால், தங்களது எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் சிபிஎஸ்இ மாணவர்கள் உள்ளனர்.
எனவே, தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ மாணவர்கள், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வாரிய மாணவர்கள், மறு மதிப்பீடு செய்ய கோரும் மாணவர்கள், மறு தேர்வு எழுதி தேர்வு முடிவுகள் வரப்பெற்ற மாணவர்கள் ஆகியோரது விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் அல்லது விண்ணப்பப் படிவம் மூலம் வரப்பெற்ற பின்னரே, தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நடத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)- யின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.