தீக்கதிர் திருச்சி பதிப்பின் பொது மேலாளர் தோழர் பன்னீர் செல்வம்(68) நுரையீரல் நோய் பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (10.7.2022) இரவு உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்த தோழர் பன்னீர்செல்வம் 1991ல் வாலிபர் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டார். பின்னர் ஒன்றிய தலைவரானார். அதன்பின் 1995ல் கட்சியின் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டக்குழு அலுவலக செயலாளராக தன்னுடை பணியை துவக்கியவர், 1998ல் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரானார். அலுவலகச் செயலாளராகவும், மாவட்டக்குழு உறுப்பினராகவும் தன்னுடைய பணியை திறம்பட செய்து வந்தார். அதற்குப் பிறகு 2011ம் ஆண்டிலிருந்து தீக்கதிர் திருச்சி பதிப்பின் பொதுமேலாளராக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வந்தார்.
சமீப காலமாக நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த தோழர் பன்னீர் செல்வம், தன் உடல் நலம்பற்றி கவலைப்படாமல் தனது இறுதி மூச்சு வரை தீக்கதிரின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் அரும்பாடுபட்டவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், தீக்கதிருக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவருக்கு கட்சியின் மாநில செயற்குழு புகழஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.
அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது மனைவி, மகள், மகன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் கட்சியின் மாநில செயற்குழு தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.