ஆவணங்கள்சிறப்பு பதிவுகள்சிறப்பு மாநாடுதீர்மானங்கள்

பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் குடும்ப வன்முறைக்கு எதிராக சிறப்பு மாநாடு – தீர்மானங்கள்

Dsc04442

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
தமிழ்நாடு மாநிலக்குழு
பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் குடும்ப வன்முறைக்கு எதிராக சிறப்பு மாநாடு
2022 ஜூலை 19, ராஜா அண்ணாமலை மன்றம் – சென்னை

உறுதிமொழியேற்பு

சமூகத்திலும் குடும்பத்திலும் சமத்துவ சூழலை உருவாக்க பாடுபடுவேன்.

தற்போது சமூகத்தில் நிலவும்  பாலின பாகுபாடு  குடும்பத்துக்குள்ளும்  ஊடுருவி  செயல்படும்  நியாயமற்ற நிலை நீடித்து வருகிறது. இதை சீரமைத்து வன்முறையற்றதாக, சமத்துவமிக்கதாக என் குடும்பம் அமைய பங்களிப்பு செய்வேன்.

குடும்ப கட்டமைப்பை ஜனநாயகப்படுத்தும் வகையில் செயல்படுவேன்.

குடும்ப வன்முறை உள்ளிட்ட அனைத்து வன்முறைகளையும், ஒடுக்குமுறைகளையும் தகர்க்கும் போராட்டத்தில் என்னை இணைத்து கொள்வேன் என உறுதி ஏற்கிறேன்.

அனைத்து நிலைகளிலும் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தவும், பெண்கள், குழந்தைகள் மீதான வன்செயல்களை எதிர்த்தும் நடைபெறும் போராட்டங்களில் முழுமையாக இணைந்து நிற்பேன் எனவும் உறுதியேற்கிறேன்.

தீர்மானம் – 1

குடும்ப வன்முறை என்னும் கொடுமையின் மீது போர் தொடுக்க அரசு, சமூகம், சட்டம், ஊடகம் போன்ற அனைத்து துறைகள் மூலமும் பன்முக நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

கீழ்க்கண்ட ஆலோசனைகளை குடும்ப வன்முறை தடுப்பு மாநாட்டின் சார்பில் முன் வைக்கிறோம்:

·         பாலின சமத்துவத்துக்கான சட்டங்கள்  குறித்த விழிப்புணர்வை, காவல்துறை உள்ளிட்டு அனைத்து மட்டங்களிலும் உருவாக்க வேண்டும்.

·         குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் மட்டுமே பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளனர். இந்த ஏற்பாட்டை தாலுகா அளவிலும், இன்னும் கீழ் மட்டம் வரையும் கொண்டு செல்ல வேண்டும்

·         பாடத் திட்டத்தில், பாட நூல்களில் பெண் சமத்துவ கருத்துக்களும், இத்தகைய சட்டங்களின் சாராம்சமும் இடம்பெற வேண்டும்.

·         ஊடகத்துறையினரோடு அரசு அவ்வப்போது கலந்துரையாடல் நடத்தி பாலின சமத்துவம் பற்றிய  ஊடக சித்தரிப்பு முறையாக வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

·         கதையின் போக்குக்காக குடும்ப வன்முறை காட்சிகள் தேவைப்பட்டால், அது சட்டப்படி குற்றம் என்கிற எச்சரிக்கையை எழுத்துக்களில் பதிவு செய்ய வேண்டும். (Statutory warning)  

·         சமத்துவம் குறித்தும், சட்டங்கள் குறித்தும், வீட்டு வேலைகள் பகிர்வு குறித்தும் சமூக செய்தி அடங்கிய விளம்பரங்கள் ஊடகங்களில் வருவதற்கான முயற்சிகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

·         சட்டமன்ற சிறப்பு அமர்வினை நடத்தி பெண்கள் மீதான வன்முறைக்கு முடிவு கட்டுவது குறித்து விவாதிக்க வேண்டும்.

·         சமூக சீர்திருத்தத் துறையின் மூலம் பட்டி தொட்டி எங்கும் சமத்துவ கருத்துக்களை பரப்ப வேண்டும்.

·         குடி போதை வன்முறைக்கு ஒரு முக்கிய காரணியாக அமைவதால் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடிட வேண்டும்.

·         உள்ளாட்சி மன்ற பெண் பிரதிநிதிகள் சுயேச்சையாக செயல்பட உகந்த சூழலை உருவாக்க வேண்டும். ஆண் உறவினர்கள் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும்.

·         சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட வேண்டும்.

·         பண்பாட்டுத்தளத்தில் மாற்றங்கள் வருவதற்கான விவாதங்களைத் தொடர்ச்சியாக எழுப்ப  வேண்டும். சிறு பிரசுரங்கள், பாடல்கள், கலை நிகழ்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும்

·         மனுவாதத்தை முன்வைக்கும் சங்பரிவாரங்களின் நடவடிக்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட வேண்டும்.

·         உயர் கல்வி, கண்ணியமான வேலை வாய்ப்பு, முறையான ஊதியம் போன்றவை உறுதி செய்யப்பட வேண்டும். குழந்தை காப்பகம் போன்ற அரசாங்கத்தின் ஆதரவு நடவடிக்கைகள் பலப்பட வேண்டும்.

·         சிசு கொலை, கருக்கொலையைத் தடுத்திட கறாரான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கரு முட்டை வணிகம் குறித்த பிரச்சனைக்கு தீர்வு காண பரந்த விவாதம் நடத்திட வேண்டும்.

குடும்பத்தில் வன்முறை தடுப்போம் சமத்துவம் படைப்போம் என்கிற முழக்கத்தோடு 2022 ஆகஸ்ட் 1 முதல் 5 தேதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுக்கள் மக்கள் சந்திப்பு இயக்கத்தின் மூலம், துண்டு பிரசுர விநியோகம் செய்து கலந்துரையாடல் நடத்திட வேண்டும்.

குடும்ப வன்முறை குறித்து மக்கள் மத்தியில் ஆய்வு நடத்தி மாவட்ட வாரியாக அரசு நிர்வாகத்தை அணுகுவதோடு ஊடகங்களிலும் ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும்.

பலரும் பொதுவெளியில்  பேசத் தயங்குகிற இந்தப் பிரச்சனையை முன்வைத்து சமூகத்தின் கவனத்தை ஈர்த்து சமத்துவமும் நேசமும் நிறைந்த ஆரோக்கியமான குடும்பங்கள் உருவாக வேண்டும் என்கிற அறைகூவலை இந்த சிறப்பு மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கிறது.

தீர்மானம் – 2

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவியின் சந்தேக மரணம்  தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறி பள்ளி நிர்வாகம் முழுமையான உண்மைகளை வெளியே சொல்லாமல் மறைக்க முயற்சித்தது. தனியார் பள்ளி நிர்வாகத்தின் இந்தப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மேலும், இதே பள்ளியில் ஏற்கனவே சில மாணவிகள் மர்மமான முறையில் இறந்துள்ளதாகவும் அதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் செய்திகள் உள்ளன.

இதுமட்டுமின்றி, சம்பவம் நடைபெற்று நான்கு நாள் வரை மரணத்திற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மாவட்ட நிர்வாகம் தாமதப்படுத்தியதும் நிலைமையை மோசமாக்கிட உதவியுள்ளது.  இப்பள்ளியின் முக்கிய நிர்வாகிகள் ஆர்.எஸ்.எஸ், பாஜக தலைவர்களோடு நெருங்கியவர்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்வதில் தாமதம் கடைப்பிடிக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்தும் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளஅடிப்படையில் இச்சம்பவத்தில் நடந்துள்ள உண்மை நிகழ்வுகள் குறித்து சி.பி.சி.ஐ.டி. முறையான விசாரணை நடத்தி அனைத்து விபரங்களையும் வெளிக்கொணர வேண்டும். இதில் தவறு இழைத்தவர்கள் அனைவரையும் தண்டிக்க வேண்டும்.  மேலும் மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும்.

மாணவியின் இறப்பிற்கு நீதி கோரி நடந்துள்ள போராட்டங்கள் முழுவதும் இயல்பானது. எனினும், போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை கண்டிக்கத்தக்கது. வன்முறையை காரணம் காட்டி அப்பாவி மாணவர்களையும், பொது மக்களையும் கைது செய்யும் நடவடிக்கையினை காவல்துறை மேற்கொள்ளக்கூடாது என்பதையும் இம்மாநாடு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தொடர்ந்து சிறுமிகள், பெண் குழந்தைகளிடம் மனிதத் தன்மையற்ற வகையில் பாலியல் துன்புறுத்தல்கள் கல்வி நிலையங்களில் அதிகரித்து வருவது கவலைக்குரியது. அரசாங்கம் உரிய வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு சிறுமிகள், பெண் குழந்தைகளை பாதுகாத்திட வேண்டுமென மாநாடு கோருகிறது.

தமிழக அரசு மேலும் இதுபோன்று மாணவிகள், சிறுமிகளுக்கும் அநீதி இழைக்கப்படுவதை தடுத்திடவும், பாலியல் வன்முறை கொடுமைகள் நடக்காதிருக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகிறது.