ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைசிறப்பு பதிவுகள்

ஸ்ரீமதி மரணம் குறித்து – மனிதம் அமைப்பின் உண்மை அறியும் குழுவின் அறிக்கை

1660714424101மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான உண்மை அறியும் குழு (மனிதம்) அறிக்கை வெளியீடு ...

சென்னையில் இன்று (17.8.2022) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனித உரிமை அமைப்பான “மனிதம் அமைப்பின் உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையை மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டார். (அறிக்கை கீழே உள்ளது) இந்நிகழ்வில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர். பத்ரி எஸ்.ஜி. ரமேஷ்பாபு, வழக்கறிஞர் திருமூர்த்தி, மனிதம் அமைப்பின் உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் வட்டம், கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் இண்டர்னேஷ்னல் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனித உரிமை அமைப்பான

மனிதம் அமைப்பின்
உண்மை அறியும் குழு அறிக்கை

—————————————————————————————————————-

            கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் வட்டம், கனியாமூரில் உள்ளது சக்தி மெட்ரிகுலேஷன் இண்டர்நேஷனல் தனியார்  பள்ளி. 1980 களின் துவக்கத்தில் தற்போதைய இப்பள்ளியின் தாளாளர் ரவிகுமாரின் தாயாரான பார்வதி அவர்களால் ஆரம்பப் பள்ளியாக  துவக்கப்பட்டது. இப்பள்ளியின் செயலாளராக ரவிக்குமாரின்  மனைவி சாந்தி உள்ளார்.

            2004 ஆண்டு 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் கழிவறையில் பிணமாக கிடந்த சம்பவமும், இதற்காக DYFI என்ற இளைஞர் அமைப்பு பொது மக்களை திரட்டி போராடிய சம்பவமும், 2005 ஆம் ஆண்டு பள்ளி வாகனம் மோதி LKG குழந்தை பிரதிக்ஷா இறந்ததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டமும் கவனிக்கதக்கவை. (துண்டு பிரசுர இணைப்பு: 1 மற்றும் 1 A)

            தொடர்ந்து பல சர்ச்சைகள் இப்பள்ளியை சுற்றி வந்துள்ள சூழலில், இப்பள்ளியில் பணிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த 13.07.2022ம் தேதி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பில் கூறப்பட்ட நிலையில், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் அமைதியான முறையில் ஜூலை 14, 15, 16 ஆகிய தேதிகளில் போராடினர். பிறகு ஜூலை 17ஆம் தேதி கலவரம் ஏற்பட்டு பள்ளி சேதப்படுத்தப்பட்டு தீ வைப்பு போன்ற சம்பவங்களும் நடைபெற்றன. கடந்த 01.08.22 வரை சுமார் 300க்கும் மேற்பட்டோர் வன்முறை குற்றம் என்ற பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

            இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனித உரிமைகள் அமைப்பான “மனிதம்” சார்பில், அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, திருவண்ணாமலையை சார்ந்த வழக்கறிஞர் அபிராமன், சேலம் குணசேகரன், கடலூரை சார்ந்த வழக்கறிஞர் லெனின் ஆகியோர் உண்மை அறியும் (fact finding) குழுவாக 26.07.2022 மற்றும் 01.08.202 ஆகிய தேதிகள் சென்று திரட்டிய தகவலகள் கீழே உள்ளன. மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியின் கள்ளகுறிச்சி மாவட்ட செயலாளர் டி.ஜெய்சங்கர் ஆகியோர் பல உதவிகளை செய்தனர். இதுமட்டுமல்லாது தொலைபேசியில், ஊடகங்களில் கிடைத்த தகவல்களையும் பரிசோதித்து பயன்படுத்தியுள்ளோம்.

            26.07.2022 மற்றும் 01.08.2022 ஆகிய தேதிகளில் ஸ்ரீமதியின் தாயார் செல்வி அவரது தந்தை, சித்தப்பா, மாமா மற்றும் அவரது உறவினர்களிடமும், கள்ளகுறிச்சி கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு புகழேந்தி கணேஷ் அவர்களிடமும், SIT படையில் உள்ள அதிகாரியான திரு லாமேக் அவர்களிடமும், சின்னசேலம் காந்திநகரை சேர்ந்த செல்வராஜ் – மல்லிகா தம்பதியினரிடமும், சின்னசேலம் காவல் நிலைய  உதவி ஆய்வாளர் ஜே.மாணிக்கம் அவர்களிடமும் உரையாடினோம். கனியமூர் பள்ளி வளாகத்திற்கு சென்ற போது அங்கிருந்த காவல்துறையினர் பத்திரிக்கையாளர் உட்பட யாருக்கும் அனுமதி இல்லை என்றனர்.

            எங்கள் உண்மை அறியும் குழுவின் கள ஆய்வை கீழ்கண்டவாறு முன்வைக்கிறோம்.

1.  மாணவியின் மரணம் குறித்து நாங்கள் கண்டறிந்தது.

2. மாணவியின் மரணத்தில் பள்ளியின் அணுகுமுறை.

3. போரட்டமும் அதை தொடர்ந்த கைதுகளும் காவல்துறையின் அணுகுமுறையும்.

4. உடற்கூறாய்வு அறிக்கையின் மீது எழும் சந்தேகங்கள்

5. பரிந்துரைகள்

6. இணைப்புகள்

1. மாணவியின் மரணம் குறித்து நாங்கள் கேட்டு அறிந்தது.

1.1 முதலில்ஸ்ரீமதியின் தாயாரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் நாங்கள் கேட்டு அறிந்துகொண்டதை முதலில் பதிவிடுகிறோம்.

            மேற்படி பள்ளியில் உயிரிழ்ந்த மாணவி ஸ்ரீமதியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், பெரிய நெசலூர் கிராமத்திற்கு கடந்த 26.07.2022 ம் தேதி காலை சென்றிருந்தோம். அப்பொழுது ஸ்ரீமதியின் தாய் செல்வி தந்தை ராமலிங்கம் தாய்மாமன் செல்வக்குமார் உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து மாணவி ஸ்ரீமதியின் இறப்பு சம்மந்தமாக கேட்டறிந்தோம்.

            மேற்படி ஸ்ரீமதி ஆறாம் வகுப்பு முதல் மேற்படி சக்தி மெட்ரிக்குலேஷன் இண்டர் நேஷனல் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் 11வது பொது தேர்வில் 492 மதிப்பெண் பெற்றார். ஆனாலும் 12 ஆம் வகுப்பு படிப்பை மேற்படி அதே பள்ளியில் தொடரவில்லை, காரணம் தன்னுடைய வீட்டில் இருந்து மெயின்ரோடு வந்து அங்கிருந்து பள்ளி வாகனத்தில் வந்து செல்வது சிரமமாக இருந்ததும், மேலும் அந்த பள்ளி வாகனம் வேப்பூர் பக்கம் வருவதை நிறுத்திவிட்டதும் தான் காரணம். அதனால் பக்கத்து ஊரில் உள்ள சத்திய சாய் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஸ்ரீமதியையும், அவரது தம்பியையும் ரூபாய் 54,000 கட்டி அட்மிஷன் போட்டுவிட்டார்கள்.

            தினமும் வீட்டிலிருந்து அருகில் உள்ள பள்ளிக்கு செல்ல சந்தோஷமாக காத்திருந்த ஸ்ரீமதியும் அவரது தம்பியும், தாய் செல்வியுடன் மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ் போன்றவற்றை வாங்க மேற்படி சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு சென்று செயலாளர் சாந்தியிடம் கேட்டபோது, செயலாளர் சாந்தி அவர்கள் ஸ்ரீமதியின் தாய் செல்வியிடம், இந்த பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு குழந்தைகளை மாற்ற வேண்டாம், ஸ்ரீமதி நன்றாக படிக்கின்ற பெண்  என்றும்,  அவளை வேறொரு பள்ளிக்கு மாற்ற வேண்டாம் எனவும்,  இன்னும் கொஞ்சம் பயிற்சி கொடுத்தால் முழு மதிப்பெண் எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் யோசித்து பாருங்கள் என்று வற்புறுத்தினார்.

            ஆனால் ஸ்ரீமதியின் தாய் செல்வி அதை ஏற்று கொள்ளாமல் நாங்கள் வேறு பள்ளியில் பணத்தை கட்டிவிட்டோம், மேலும் பள்ளி வாகனம் வராததால் வந்துசெல்ல மகளும், மகனும் கஷ்டப்படுகிறார்கள். எனது கணவருக்கும் விருப்பமில்லை என்று கூறினார்கள். ஆனாலும் தாளாளர் சாந்தி அவர்கள் நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள் நீங்கள் பணம் எதுவும் கட்ட வேண்டாம். அதையே நான் வரவு வைத்து  கொள்கிறேன் என்று சொல்லி இரண்டு நாட்கள் அவகாசம் எடுத்துகொள்ளுங்கள். மேலும் வெளிநாட்டில் உள்ள உங்கள் கணவரிடம் பேசுங்கள் என்றும் சொல்லி அனுப்பி வைத்துவிட்டார்.

            அடுத்த இரண்டு நாட்களில் 4 முறை செயலாளர் சாந்தி தொலைபேசியில் அழைத்து என்ன முடிவு செய்துள்ளீர்கள், சாய் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பணம் செலுத்திய ரசீதை எடுத்து வாருங்கள், மேற்கொண்டு இங்கு எந்த பணமும் கட்ட தேவையில்லை. மேலும் ஸ்ரீமதி பள்ளி வகுப்பறையின் மேலே உள்ள விடுதியிலேயே தங்கிகொள்ளட்டும் நன்றாக படிக்கவும், அதிக மார்க் எடுக்கவும், நாங்கள் பாதுகாப்பாக பார்த்து கொள்ளவும் வசதியாக இருக்கும் என்றார். இது சம்மந்தமாக என் கணவரிடம் கேட்டபோது அவருக்கு சக்திமெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கவைக்க விருப்பமில்லை, மேலும் பிள்ளைகளை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

            ஆனாலும் செயலாளர் சாந்தி இங்கேயே படிக்க வேண்டும் என தாய் செல்வியை வற்புறுத்தினார். மேலும் ஸ்ரீமதியின் 11 ஆம் வகுப்பில் பயின்ற ஸ்ரீமதியின் தோழிகள் சிலரும் அம்மா இங்கேயே படிக்க வைங்க, நாங்கள் அனைவரும் நன்றாக படிப்போம் என்றார்கள்.

            இதன் பிறகு ஸ்ரீமதியின் தாயர் செல்வி சொன்னதை கீழே அப்படியே கொடுத்துள்ளோம்.

            ”நானும் ஸ்ரீமதியிடம் பேசிவிட்டு ஜூன் மாத இறுதியில் மேற்படி சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு மகள் ஸ்ரீமதியையும், மகனையும் அழைத்து சென்றேன். அங்கே இந்த  பள்ளியில் சேருவது சம்மந்தமாகவும், அதனுடன் வேறு பள்ளியில் பணம் கட்டிய ரசீதுடன் இணைத்து கொடுங்கள் என்றார்கள். அனைத்தையும் முடித்துவிட்டு பள்ளிக்கு மேலே உள்ள விடுதிக்கு சென்று பார்த்தேன்.”

            ”அங்கு இரு தங்கும் அறைகள் இருந்தது. ஒவ்வொரு அறைக்கும் தலா 13 பேர் தங்குவார்கள் என்றும், அறைக்குள் இரட்டை கட்டில் மெத்தை இருந்ததை பார்த்துவிட்டு வீட்டிற்கு அழைத்து வந்தேன். பிறகு ஜீலை 2022 முதல் வாரத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவைத்தேன். மேலும் ஸ்ரீமதி பள்ளிவிடுதியிலேயே தங்கி படித்துவந்தாள்.”

            ”இந்நிலையில் கடந்த 12.07.2022-ம் தேதி இரவு 8.15 மணிக்கு ஸ்ரீமதியிடம் பேசினேன். அவள் சந்தோஷமாக பேசினாள். மறுநாள்  நாள் 13.07.2022ம் தேதி காலை சுமார் 6.30 மணிக்கு பள்ளியின் மாடியில் இருந்து ஸ்ரீமதி கீழே விழுந்து விட்டாள் என்று பள்ளியில் இருந்து போன் செய்தார்கள். அய்யோ என்று கத்தி கொண்டே என் புள்ளைக்கு என்ன ஆச்சி என்று கேட்டேன். பதில் ஏதும் சொல்லாமல் போனை வைத்துவிட்டார்கள். உடனே நான் என் சகோதரர்களை அழைத்து கொண்டு பள்ளிக்கு போகும் வரை அந்த தொலைபேசி எண்ணிற்கும், செயலாளர் சாந்தி எண்ணிற்கும் போன் செய்தேன். யாரும் எடுக்கவில்லை. பள்ளிக்கு சென்று எங்கே எனது மகள் ஸ்ரீமதி என்று அழுதுகொண்டே கேட்டேன். அங்கு இருந்த காவலர்களும், மற்றவர்களும் கள்ளக்குறிச்சி அரசு  மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளதாக கூறினார்கள். அதற்குள்ளாக பள்ளியின் “வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து” பள்ளியில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதனால் இன்று மட்டும் பள்ளிக்கு விடுமுறை என்று மெசேஜ் அனுப்பினார்கள்” (ஆவணம்-2)

     ”இந்நிலையில் ஸ்ரீமதி எப்படி விழுந்தாள், எங்கிருந்து விழுந்தாள், எந்த இடத்தில் விழுந்தால் என்று பள்ளியில் கேட்டோம். அதற்கு அவர்கள் விடுதி மாடியில் இருந்து வீழே குதித்து விட்டாள், இதோ இந்த இடம்தான் என்றார்கள். அந்த இடத்தில் எந்தவிதமான ரத்த கறையோ, விழுந்ததற்கான சுவடோ எதுவுமே இல்லை. (ஆவணம்-3). இதனால் பெரும் சந்தேகம் அடைந்த நாங்கள் வகுப்பறைக்கு மேலே உள்ள விடுதியை பார்க்கவேண்டும் என்றோம், ஆனால்  அனுமதிக்கவில்லை. படிக்கட்டு ஏறி செல்ல முயன்றோம். அப்போது படிக்கட்டில் ரத்தக்கறையும், கொஞ்சம் மேலே ரத்தத்தினால் ஆன ஐந்து விரல்கள் கொண்ட கை அச்சும் இருந்தது. (ஆவணம்-4), அச்சமடைந்த நாங்கள் அங்கிருந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தோம் அப்போது இரும்பினால் ஆன ஸ்டிர்ச்சர், படுக்கையில் படுக்க வைத்திருந்தனர். (ஆவணம்-5). பின் தலையில் அடிப்பட்டு இறந்ததாகவும், தற்போது உயிரோடு இல்லை என்றும் கூறினார்கள்.”

            ”என் மகள் ஸ்ரீமதியை பார்க்கும்போது அவள் போட்டிருந்த பள்ளி சீருடையின் மேல் ஆடை (Over Coat) கழற்றபட்டும், கீழ் ஆடை (Pant) யின் நாடா பின்பக்கம் இருக்க கட்டியும் இருந்தது. உள்ளாடைகளான ஜட்டி, மேலாடைகள் சரியாக போடாமலும்  இருந்தது நன்றாக தெரிந்தது. இதையெல்லாம் பார்க்கும்போதே   பெரும் சந்தேகம் ஏற்படவே என் மகளின் இறப்பில் உள்ள உண்மையை வெளியே வரவேண்டும் என்று கேட்டோம். அதன்பிறகு வந்த தகவல்கள் அதிர்ச்சியாக இருந்தது. 12.07.2022 அன்று  அந்த பள்ளியில் இருக்கும் ஒருவருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றதாகவும், அங்கு மது, விருந்து எல்லாம் நடைபெற்றதாகவும் சொன்னார்கள்.”

            ”சம்பவம் நடந்த மாலையில்தான் என் மகள் ஒரு கடிதம் எழுதி வைத்திருப்பதாக ஒரு கடிதத்தை  காட்டினர். ஆனால் அது எனது மகள் கையெழுத்தல்ல. என்று சொல்லி வீட்டிலிருந்த ஸ்ரீமதியின் பல நோட்டுகளை அவர் தாயார் எடுத்து காட்டினார். அதுமட்டுமல்ல ஸ்ரீமதி தமிழும் நன்றாக எழுதக்கூடியவர் என்பதையும் சொல்லி அழுதார். முழுக்க முழுக்க அந்த கடிதம் பள்ளி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறினார். (ஆவணம் 6)

        ”எனவே எனது மகள் ஸ்ரீமதியின் சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் இனி இதுபோல் எந்த பெண் குழந்தைக்கும் நடக்க கூடாது” என்று கதறி அழுது கூறினார்.

            ஆக ஸ்ரீமதியின் குடும்பத்தினர் கூற்று படி ஸ்ரீமதி மர்ம மரணத்திற்கு முன் இரவு வரை சாதாரணமாகதான் தன் தாயுடன் பேசி உள்ளார். அதன் பின்னர் நடந்த சம்பவங்களை  தொடர்ந்து கவனித்தால் மரணத்தில் மர்மம் இருப்பது தெரியவருகிறது. அதாவது

            ”12.07.2022 அன்று அந்த பள்ளியில் இருக்கும் ஒருவருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றதாகவும், அங்கு மது, விருந்து எல்லாம் நடைபெற்றதாகவும் சொன்னார்கள்” என ஸ்ரீ மதியின் தாயர் சொன்னது, இந்த வழக்கு சிபிசிஐடி -க்கு மாற்றப்படும்போது தற்கொலையைத் தூண்டுவது மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பான சட்டப் பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளதோடு ஒத்துப் போகிறது. எனவே இது ஏன் கொலையாக இருக்கக்கூடது என்ற சந்தேகம் புறம்தள்ளக்கூடியது இல்லை. இன்னும் சந்தேகங்கள் தொடர்கிறது.

            கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மரணம் தற்கொலையல்ல, திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை. அவரது மரணத்தை மறைப்பதற்கு மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக நிர்வாகம் நாடகம் ஆடுகிறது. காதல் கதையை ஜோடித்து மக்கள் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்கின்றனர். காவல்துறையும் அவர்களுக்கு ஒத்துழைக்கிறது. ஜூலை 17 ஆம் தேதி சாட்சிகளை மறைப்பதற்காக திட்டமிட்டு வன்முறை நடத்தப்பட்டுள்ளது.

விசாரணையில் சொல்லி வைத்தாற்போல ஒரே குரலில் காவல்துறையினரும் ஒரு சில யூ டியூப் சேனல்களும் வேறு கோணத்தில் ஒரு சந்தேகத்தை எழுப்புவதை  அறியமுடிந்தது. கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதிக்கு ஒரு காதலன் இருக்கிறார். அவர் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர். இதை பிடிக்காமல் 6 ஆம் வகுப்பு முதல் ஸ்ரீமதி படித்து வந்த பள்ளியை  மாற்றி அவரது பெற்றோர் அருகில் உள்ள பள்ளியில் சேர்த்ததாகவும். பின்பு சக்தி பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தி கேட்டதால் மீண்டும் மாணவி ஸ்ரீமதி சக்தி பள்ளியில் சேர்க்கபட்டார். தொலைபேசியில் காதலனுடம் பேச முடியாமல் இருந்த ஸ்ரீமதி விடுதியில் உள்ள கட்டுப்பாட்டின் காரணமாக மன உளைச்சலில் விடுதியில் உள்ள மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.

            இதை பொறுத்த வரை பல காவல்துறை அதிகாரிகள் சொல்லி வைத்தார்போல மாணவி ஸ்ரீமதிக்கு காதல் இருப்பதாக சொல்லப்படும் கதை எங்களது விசாரனையில் அது முழுக்க முழுக்க கட்டுக்கதையாக இருக்க வாய்ப்புள்ளதாகவே  அறிகிறோம். ஏனெனில் அப்படி அவர்கள் சொல்லும் கதை உண்மையாக இருந்தால் அந்த காதலன் எந்த ஊர் என்பதையும், அவன் அங்கு படித்தான் என்பதையும் யாரும் குறிப்பிடாதது ஏன்?  பல ஆண்டுகள் படித்த பள்ளியில் காதலன் இருப்பதால்தான் ஸ்ரீமதியை வேறு பள்ளியில் சேர்த்தார்கள் எனின் மீண்டும் பழைய பள்ளியிலேயே மீண்டும் சேர்த்தது ஏன்?

            ஆக திட்டமிட்டு இப்பிரச்சினையில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே இந்த கதை புனையப்பட்டு பரப்பப்படுவதாகவே நினைக்க வேண்டியுள்ளது.

2. மாணவியின் மரணத்தில் பள்ளியின் அணுகுமுறை.

            பள்ளி நிர்வாகத் தரப்பில் ஸ்ரீமதி, மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து கிடப்பதாக தனக்கு தகவல்  வந்ததாகவும், உடனே அங்குச் சென்று ஸ்ரீமதியைக் காப்பாற்றி விடலாம் என்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

            ஸ்ரீமதி கீழே விழுந்ததை யாரும்  பார்க்கவில்லை என்பதை நிர்வாகத்தின் வார்த்தைகள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. அப்படி என்றால் ஸ்ரீமதி தரையிலேயே தவறி  விழுந்தாரா? அல்லது மூன்று மாடியில்,  எந்த மாடியில் இருந்து விழுந்தது? என்று நிர்வாகத்திற்குத் தெரிய வாய்ப்பு இல்லை.

            இந்த நிலையில் கடந்த 2022 ஆகஸ்ட் 3ம் தேதி ஊடகங்களில் வெளியான சிசிடிவி படங்கள் ஜூலை 12 இரவு  9.28 மணிக்கு ஸ்டடி ரூமிலிருந்து நடந்து செல்லும் காட்சியையும் பின்னர் ஜூலை 13 ஆம் தேதி காலை 5.23 மணிக்கு தரையில் கிடக்கும் ஸ்ரீமதியின்  சடலத்தை ஹாஸ்டல் வார்டன் கீர்த்திகா உள்ளிட்டோர் தூக்கி செல்லும் காட்சி  தந்தி தொலைகட்சியில் கீழ்கானும் இணைப்பில் உள்ளது.

https://www.thanthitv.com/latest-news/new-cctv-footage-of-student-smt-srimathi-kallakurichi-129369

            ஜூலை 13 அதிகாலை 5.23 க்கு மாணவியின் உடல் கிடக்கும் சிசிடிவி ஆதாரம் 20 நாட்கள் கடந்து திடீரென வெளியானது எப்படி? அப்படியெனில் அந்த மாணவி எந்த நேரம் விழுந்தார்? எந்த மாடியிலிருந்து விழுந்தார் என கண்டறியலாம் தானே?

            இப்போதும் அந்த ஆதாரங்களை கையில் வைத்துக்கொண்டு துண்டு துண்டாக படங்களை வெளியிடுவது யார்? அதுமட்டுமல்ல அதிகாலை  5.23 க்கு சம்பவத்தை பார்த்த பள்ளி நிர்வாகம் 6.30 மணிக்கு  தாமதமாக அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தது ஏன்?

            தகவல் கிடைத்ததும் முதலில் ஆம்புலன்சுக்குத்தானே தகவல் தந்திருக்க வேண்டும்? மாறாக, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறுவது எப்படி சரியான அணுகு முறையாக இருக்க முடியும்?

            ஆம்புலன்ஸ், மருத்துவர், பெற்றோர், காவல்துறை என்று யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், பள்ளி  நிர்வாகி நேராக வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதற்கான காரணமே இது திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது.

            மருத்துவமனைக்கு குழந்தை இறந்தே அழைத்து வரப்பட்டது என்று மருத்துவர்கள் அறிவித்ததும், பெற்றோருக்குத் தகவல் தந்து, நடந்த சம்பவத்தை விளக்கி இருக்க வேண்டும். மாறாக, உடலை மருத்துவமனையில் ஒப்படைத்து விட்டுச் சென்றிருப்பது நியாயமான அணுகுமுறை இல்லை, இதுவே சந்தேகத்தை கிளப்பவில்லையா?

            காலையில்  பள்ளியில் பராமரிப்பு பணிகள் நடக்கும் காரணத்தால் இன்று பள்ளி விடுமுறை என மாணவர்களுக்கு அவர்கள் தொடர்பு எண்களில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அது ஸ்ரீமதி குடும்பத்திற்கும் வந்துள்ளது. ஒரு மாணவி இறந்துவிட்ட காரணத்தால் விடுமுறை என அவர்கள் செய்தி போடாமல் திட்டமிட்டு மறைத்தது ஏன்?  

            பெற்றோர் மற்றும் உறவினர்களை பள்ளியில் உள்ள மற்றவர்களையும், சக மாணவிகளையும் சந்திக்க அனுமதி மறுத்து விட்டனர். மாடியிலிருந்து குதித்ததாக கூறப்படும் சம்பந்தப்பட்ட இடத்தையும் காட்ட மறுத்துள்ளனர். நேர்மையாக இருக்கும் நிர்வாகம் இதை செய்யலாமா?

            அப்பள்ளியில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டும் அது  வேலை செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால்  இப்போது ஒவ்வொரு வீடியோவாக எப்படி ஒளிபரப்பப்படுகிறது?    

                        தமிழக குழந்தைகள் நல ஆணையர் இப்பள்ளியில் சென்று விசாரணை செய்த போது அங்கு விடுதி நடந்த அனுமதி பெறவில்லை என்ற உண்மை கண்டறியப்பட்டதாக 2022 ஜூலை 21ம் தேதி தந்தி தொலைகாட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

            அந்த செய்தி தொகுப்பில் குழந்தைகள் நல ஆணையர் திருமதி சரஸ்வதி அவர்கள் கொடுத்த பேட்டியும் வெளிவந்துள்ளது. ”மூன்று மாதங்களுக்கு முன்பே, மாவட்ட ஆட்சியர், விடுதி நடத்துபவர்கள் உடனடியாக முறையான அனுமதி பெற வேண்டும் என அறிவித்துள்ள சூழலில் இப்பள்ளி முறையான அனுமதி வாங்கவில்லை. அதற்கான முயற்சியைகூட செய்யவில்லை. அனுமதி பெற மனுவாவது போட்டுள்ளார்களா என D.R.O, D.C.P.O உள்ளிட்ட அதிகாரிகளை  கேட்டபோது அவர்கள் இல்லை என சொல்லி விட்டனர்” என்று கூறினார்.

            ”அனுமதி பெறாத விடுதியில் 24 பெண்களை தங்க வைத்தது தவறு என முதல் தகவல் அறிக்கை மாற்றப்படும் போது ஒரு முக்கிய தகவலாக சேர்க்கப்பட வேண்டும்” என அவருடன் வந்த இளம் அதிகாரி கூறினார்.

            இப்பள்ளியில் பத்துக்கும் மேற்பட்ட பசு மாடுகளும், ஆடு மற்றும் கோழிகளும் ஒரு பகுதியில் வைத்துள்ளனர். அதே பள்ளி வளாகத்தில் அந்த பள்ளியின்  தாளாளருக்கும் வீடு உள்ளது. மேலும் வகுப்பறைக்கு மேலேயே அனுமதி இல்லாமல் தங்கும் விடுதியும் அமைக்கப்பட்டுள்ளது. அதே பள்ளியில் RSS  அமைப்பின்  பயிற்சி வகுப்புகளும் அடிக்கடி நடைபெற்று வந்துள்ளது. இவை போன்ற தகவல்கள் அரசியல் செல்வாக்குடன் எதையும் செய்யும் குணத்துடன் இப்பள்ளி இயங்கி வந் ததாகவே தெரிகிறது.

            12.07.2022 அன்று அந்த பள்ளியில் இருக்கும் ஒருவருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றதாகவும், அங்கு மது, விருந்து எல்லாம் நடைபெற்றதாகவும் சொன்னார்கள் என ஸ்ரீ மதியின் தாயர் சொன்னது மிகவும் முக்கியதுவம் வாய்தது என கருதுகிறோம். பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் ஸ்ரீமதி மரணம், கொலை என்றே கருத வைக்கிறது. சிபிசிஐடி இவற்றை முழுமையாக விசாரிக்க வேண்டும்.

3. போரட்டமும் அதை தொடர்ந்த கைதுகளும் காவல்துறையின் அணுகுமுறையும்.

          01.08.202 அன்று கள்ளகுறிச்சி கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு புகழேந்தி கணேஷ் அவர்களை நேரில் சந்தித்து பேசியபோது அவர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி கைக்கு சென்று விட்டதால்  தன்னால் ஏதும் சொல்ல இயலாது என கூறினார். பள்ளி வளாகத்திற்கு செல்ல அனுமதி கேட்ட போது, அதுவும் தன்னால் இயலாது SIT அதிகாரிகளிடம் பேச வேண்டும் என சொன்னார்.

            SIT படையில் உள்ள அதிகாரியான திரு லாமேக் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி கைக்கு சென்று விட்டதால்  தன்னால் ஏதும் சொல்ல இயலாது என கூறினார்.

            கனியமூர் பள்ளி வளாகத்திற்கு சென்ற போது அங்கிருந்த காவல்துறையினர் பத்திரிக்கையாளர் உட்பட யாருக்கும் அனுமதி இல்லை என்றனர்.

            சின்னசேலம் காந்திநகரை சேந்த இரண்டு இளைஞர்கள் தவறாக கைது செய்யப்பட்டது குறித்து விசாரிக்க சின்னசேலம் காவல் நிலையம் சென்றோம் அங்கிருந்த உதவி ஆய்வாளர் ஜே.மாணிக்கம் அவர்கள் கைதிற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை. SIT படைதான் அதற்கு காரணம் என்றார்.   

            ஜூலை 14 அன்று தெளிவான பிரேத பரிசோதனை அறிக்கை (இணைப்பு 7: பிரேத பரிசோதனை அறிக்கை  ஆங்கிலம், தமிழாக்கம் இரண்டும்) கிடைக்கப்பெற்ற பின்னரும் கூட, காவல்துறையினர் உரிய கோணத்தில் தனது விசாரணையை தொடராமலும், பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட இதர  நிர்வாகத்தினரை 17 ஆம்  தேதி வரை கைது செய்யாமலும் இருந்தது மாணவியின் மரணத்திற்கான காரணத்தை மறைப்பதற்கும், குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது.

            ஜூலை 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் பெருந்திரளாக மக்கள் நடத்திய அமைதியான போராட்டங்களை பார்த்திருந்த காவல்துறைக்கு 17 ஆம் தேதி நடந்த போராட்டம் குறித்த எந்த தகவலும் தெரியாதது ஆச்சரியம்தான். தெரியாதா அல்லது உளவுத்துறைக்கு தெரிந்தும் இந்த கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற சந்தேகமும் எழுகிறது.  எனவே விசாரணையை நான்கு நாட்கள் தாமதப்படுத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியாளர் உள்ளிட்ட அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும்.

            மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் நான்கு நாட்கள் தாமதப்படுத்தியதன் விளைவாக பொது மக்கள் மத்தியில் ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் 17.7.2022 அன்று  பள்ளியில் வன்முறை சம்பவம்  நடந்துள்ளது குறித்த உண்மையான காரணத்தை முழுமையான புலன் விசாரணை மூலம் காவல்துறை உறுதி செய்ய வேண்டும். ஏற்பட்ட வன்முறை சம்பவமும் கூட  மாணவியின் மரணத்திற்கான தடயங்களை அழிக்கும் நோக்கோடு நடைபெற்றுள்ளதா என்பதையும் காவல்துறை விசாரித்து உறுதி செய்ய வேண்டும்.

            அடுத்து பள்ளி நிர்வாகத்தினர் ஸ்ரீமதியே எழுதியது போன்று ஒரு கடிதத்தை காண்பித்துள்ளனர். அது ஸ்ரீமதியின் கையெழுத்தே இல்லையென்று பெற்றோர்கள் மறுக்கிறார்கள். இதற்கும் பள்ளி நிர்வாகம் பதில் சொல்லவில்லை. சிபிசிஐடி இதனை முறையாக விசாரிக்க வேண்டும். போலி கடிதம் என்றும் உரிய குற்றப்பிரிவுகளை இணைக்க வேண்டும்.

            மேலும் அந்த பள்ளியில் விடுதி செல்லும்  படிக்கட்டில் ஏறும்போது உள்ள இரத்தக்கறையும்,  அருகில் உள்ள Grill Gate  க்கு அருகே உள்ள இரத்தத்தினால் ஆன கையச்சும் எப்படி வந்ததென்று நிர்வாகம் கூறவில்லை . இதுவும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.

            வன்முறையையும், கலவரத்தையும் நாம் ஆதரிக்கவில்லை எனினும் இந்த கலவரத்தை காரணம் காட்டி ஒட்டு மொத்தமாக வழக்கை திசை திருப்பிவிடக்கூடாது. அதேபோல இக்கலவரத்தின் போது இருந்த எல்லோரும் குற்றவாளிகள் கிடையாது என்பதையும் காவல்துறை உணரவேண்டும். இதில் ஈடுபடாத அப்பாவிகளும் கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஆகும். உதாரணத்திற்கு கள ஆய்வில் கிடைத்த இரண்டு சம்பவங்களை குறிப்பிடுகிறோம்.   

உதாரணம் – 1

            கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் நகரத்தை சேர்ந்தவர்கள்  செல்வராஜ் – மல்லிகா தம்பதியினர். இவர்களுக்கு கொடிவீரன் (26), வசந்த் (25) என்ற இரண்டு பிள்ளைகள். செல்வராஜ் தூய்மை காவலராக பணியாற்றி வருகிறார். இந்த இரண்டு பிள்ளைகளுக்கும் இந்த கலவரத்திற்கும் கொஞ்சம் கூட தொடர்பு கிடையாது.

            சம்பவம் நடந்த 17.07.2022 ஞாயிறு அன்று இரண்டு இளைஞர்களும் கள்ளகுறிச்சியில் உள்ள TAL IAS Academy யில் Group 4 Preparation Exam எழுதிவிட்டு தங்கள் ஊரான சின்ன சேலத்திற்கு திரும்பி வரும் வழியில் கனியமூரில் காவல்துறையால்  வழிமறிக்கபடுகின்றனர்.  தாங்கள் பயிற்சி வகுப்பு சென்று வரும் ஆதாரங்களை காட்டியும்  கைது செய்யப்படுகின்றனர்.

            ஆனால் காலை சரியாக 10.14 மணி அளவில் அவர்கள் மையத்திற்கு செல்லும் சிசிடிவி காட்சியும், பிற்பகல் 01.13 மணியளவில் தேர்வெழுதிவிட்டு வெளியே சிசிடிவி வரும் காட்சியும்,  பிற்பகல் 01.55 மணியளவில் தென்கீரனூர் போகும் சிசிடிவி காட்சியும், பிற்பகல்  02.08 மணிக்கு உலகங்காத்தான் பைபாஸ் வழியாக செல்லும் சிசிடிவி காட்சியும் ஆதாரங்களாக உள்ளது. (இணைப்பு – 8)

            26 வயதாகும் கொடிவீரன் M.Phill முடித்துள்ளார். வசந்த் B.E முடித்துள்ளார். இருவரும்தான் அவர்கள் பரம்பரையில் முதல் பட்டாதாரிகள். காவல்துறையினர் கைது செய்ததால் கடந்த 24.07.2022 அன்று நடந்த TNPSC  Group 4 தேர்வு அவர்களால் எழுத முடியவில்லை.

            நாங்கள் சின்னசேலத்தில் உள்ள அவர்கள் வீட்டிற்கு சென்றபோது அக்கம் பக்கத்தில் உள்ளோர் அந்த இளைஞர்கள் குறித்து நல்ல அபிப்ராயத்தையே தெரிவித்தனர். எப்போதும் படிப்பு, படிப்பு என இருந்த இளைஞர்கள் என்றனர். அந்த இளைஞர்களின் தாயார மல்லிகா நம்மிடம் ”எங்கள் வாழ்க்கை லட்சியமே எங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான், ஆனால் தேர்வுக்கு முன்பு இப்படி பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுளார்கள்” என்று கூறி அழுதார். தன் பிள்ளைகள் கலவரம் நடந்த ஜூலை 17 தேதி அன்று எங்கிருந்தனர் என்ற சிசிடிவிகளில் தொகுக்கப்பட்ட ஆதாரங்களை நம்மிடம் கொடுத்தார்.

            வேலைக்கு சென்றிருந்த அவரது கணவருடன் தொலைபேசியில் பேசினோம்.   அவரும் தங்கள் கனவு இப்படி பொய்வழக்கு மூலம் கெடும் என நினைக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

உதாரணம் – 2

            கள்ளகுறிச்சி மாவட்டம் செம்பராகுறிச்சி (கிராமம்), வெங்கட்டமாபேட்டை (அஞ்சல்) சங்கராபுரம் (வட்டம்) பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் திரு இல.ஜெயச்சந்திரன்  (தொலைபேசி எண்: 94427 47069) அவர்கள் வாதாடிய வழக்கு குறித்த விபரம்:

            18-07-2022-ல் கனியாமூர் கலவரத்தில் சம்பந்த படாத ஒரு 16 வயது சிறுவனை 19 வயது என அறிவித்து, சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு 10 நாட்களாக  கடலூர் மத்திய சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இளையவரின் வெளிப்படையான தோற்றம் இருந்தபோதிலும் பொய்யாக வயதை பதிவு செய்துள்ளார். உடல்நிலை சரியில்லாத தந்தைக்கு உதவுவதற்காக மருந்து மாத்திரை பொருட்களை வாங்க சென்றபோது போலிசாரால் தடுத்து கைது செய்யப்பட்டார்.

            கைது செய்ததை இளையவரின் தந்தையிடமோ அவரின் குடும்பத்தாரிடமோ தெரிவிக்கவில்லை. கைது செய்யபட்டதை பெற்றோர்கள் தாமதமாகதான் தெரிந்து கொண்டனர். உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டுதல்படி 8 முதல் 12 மணி நேரத்திற்குள் கைது செய்யபட்டவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் அதனையும் கைது செய்த போலிசார் பின்பற்றவில்லை.

            குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்கள் அவசர வழக்காக கருதி 26-07-2022 அன்றே உடனடியாக காவல் துனை கண்காணிப்பாளர் அவர்களை நேரில் ஆஜராக கூறினார். அவரும் நேரில் ஆஜரானார். புகார்தாரர் தரப்பிலிருந்து சிறார் என்தற்கான ஆதாரமாக அவரின் பிறப்பு சான்று, ஆதார் கார்டு, பள்ளி மாற்று சான்றிதழ், பள்ளி மதிப்பெண் பட்டியல் போன்றவற்றை ஆய்வு செய்து விசாரித்து புகாரின் படி சிறாராக அறிவிப்பு செய்தும் சிறாரை உடனடியாக சிறையிலிருந்து சிறார் நீதிக்குழுமத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார் 

            அதன்படி சின்னசேலம் காவல் நிலையத்தார் 28-07-2022-அன்று சிறையிலிருந்து சிறாரை அழைத்து வந்து கள்ளக்குறிச்சி- நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

            பிறகு 28-07-2022 அன்று மாலையே விழுப்புரம் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அவர்கள் சிறாரை அழைத்து அறிவுரை வழங்கினார். படிக்கவும் அறிவுறுத்தினார். இளையவரின் எதிர்காலத்தை கருதி பிணையில் விடுவித்தார்கள் .

            இந்த வழக்கில் 16 வயது உள்ளவரை 19 வயது என உண்மையை மறைத்து கைது செய்த சின்னசேலம் காவல் நிலையத்தார் மீது இ.த.சட்டம் 166&166 A-ன் படி நடவடிக்கை எடுக்கவும் வழக்கறிஞர் திரு இல.ஜெயச்சந்திரன் வாதிட்டது குறிப்பிடதக்கது. 

 4. உடற்கூறாய்வு அறிக்கையின் மீது எழும் சந்தேகங்கள்

முதலில் உடற்கூறாய்வு தமிழாக்கம் ( PM ரிப்போர்ட் இணைப்பு – 9)

அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி

தடயவியல் மருத்துவத்துறை

உடற்கூறு பரிசோதனை சான்றிதழ்

P.M.No.188/2022                                                                 அசல்

Date: 14.07.2022                                                                  நீதிமன்ற நகல்

சின்ன சேலம் காவல்நிலைய குற்ற எண்.235/2022, நாள்:13.07.2022 கு.வி.மு.ச பிரிவு.174(1) என்ற வழக்கில் சம்மந்தப்பட்ட ஸ்ரீமதி, வயது சுமார் 17 என்பவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் அவர்களிடமிருந்து  வேண்டுகோள் கடிதம் கிடைக்கப்பெற்றது  பிரேதம் பெண் காவலர் கிரேடு I 1389  கனிமொழி என்பவர் பொறுப்பில் இருந்தது.

 அங்க அடையாளம்:

1.         இடது கன்னத்தில் ஒரு கருப்பு மச்சம்.

2.         இடது கண் புருவத்தின் கீழ் ஒரு கருப்பு மச்சம். 

மேற்கண்ட பிரேதம் 14.07.2022 அன்று மாலை 3.30 மணிக்கு பிரேத பரிசோதனை செய்த மருத்துவரால் பெறப்பட்டது. அப்போது பிரேதத்தில் விரைப்புதன்மை நீங்கியிருந்தது.  14.07.2022 அன்று மாலை 3.30 மணிக்கு பிரேத பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டு மாலை 5.00 மணிக்கு முடிவுற்றது. 

ஆடைகள்:  1. உடலின் மீது இருந்த நீல நிற ஓவர்கோட்டில் ரத்த கறைகள் படிந்திருந்தன. 2. நீல கோடு போட்ட மேலாடையில் ரத்த கறை படிந்திருந்தது. 3. சிகப்பு நிற உள்ளாடையில் (shimmies)  ரத்த கறை படிந்திருந்தது.  4. கருநீலநிற பேண்டில் ரத்த கறை படிந்திருந்தது.  கருநீலநிற உள்ளாடையில் (inner wear) ரத்த கறை படிந்திருந்தது. பிரேத பரிசோதனை முடிந்தபின் ஆடைகள் அனைத்தும் ஒரு உறையில் இடப்பட்டு சம்மந்தப்பட்ட காவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையின் போது  உடலில் காணப்பட்ட வெளிப்புற காயங்கள் பின்வருமாறு :

பிரேதமானது நல்ல திடமான நிலையில் இருந்தது. பிரேதத்தின் மீது காணப்பட்ட காயங்கள் அனைத்தும் அவரது இறப்பிற்கு முன் ஏற்பட்ட காயங்கள் ஆகும். பிரேதத்தில் காணப்பட்ட காயங்கள் விபரம் பின்வருமாறு:-

  1. புருவத்தின் கீழ், மூக்கு ஆரம்பிக்கும் இடத்தில் அடிப்பகுதியில் 1 x 0.5cm அளவுள்ள ஒரு கருஞ்சிவப்பான சிராய்ப்பு காயம்.
  2. வலது தோள்பட்டையில் 2×0.5cm & 1.5×1.5cm  அளவுள்ள இரு சிராய்ப்பு காயங்கள்.
  3. வலது கையின் பின்பக்கத்தில் 22×1.5cm & 17x1cm அளவுள்ள இரு சிராய்ப்பு காயங்கள்.
  4. வலது கையின் கீழ்பகுதியின் வெளிப்புறத்தில் 3×0.5cm அளவுள்ள இரு சிராய்ப்பு காயங்கள்.
  5. வலது முழங்கையின் வெளிப்புறத்தில் 1×0.5cm அளவுள்ள 3 சிராய்ப்பு காயங்கள்
  6. வலது முன்கையின் மேல்பகுதியிலும்  நடுப்பகுதியிலும் உள்பக்கமாக 12x1cm சிராய்ப்பு காயம்.
  7.       **
  8. வலது உள்ளங்கையில் 1.5x1cm  உள்ள சிராய்ப்பு காயம்.
  9. வலது மார்பின்(Right Breast) முன்பகுதியிலும், கீழ் பகுதியிலும் 1.5×0.5cm அளவுள்ள 3 சிராய்ப்பு காயங்கள்
  10. வலது பக்க (Left Breast) மார்பகத்தின் பின்பகுதியில் 3.5×0.5cm அளவுள்ள  சிராய்ப்பு காயம்
  11. வலது அடி வயிற்றின் வெளி பக்க வெளிப்புறத்தில் 8×1.5cm அளவுள்ள  காயம்
  12.  வலது காலின் கீழ் பகுதியில் வெளிப்புறத்தில் 2.5x2cm அளவுள்ள  காயம்
  13. வலது கணுக்காலின் வெளிப்புறத்தில் 5×0.5cm அளவுள்ள  சிராய்ப்பு காயம்
  14. வலது கணுக்காலின் உட்புறத்தில் 0.5×0.5cm அளவுள்ள 3 சிராய்ப்பு காயங்கள்
  15. இடது மார்பக பின்பக்கத்தில் 1×0.5cm அளவுள்ள  சிராய்ப்பு காயம்

2.  இடது பின்பக்க மேல் மண்டை ஓடுவரை ஆழமுள்ள 3x1cm அளவுள்ள  கிழிந்த காயம்.

3. உடற்கூறு செய்தபின் :

மார்பக பகுதியில் 1000ml ரத்தம் திரவ நிலையில் இருந்தது.

விலா எலும்புகள்: வலது பக்க அனைத்து விலா எலும்புகளிலும் எலும்பு முறிவு காணப்பட்டு தண்டுவடத்தை சுற்றியுள்ள தசைகளில் ரத்தக்கசிவு இருந்தது. இடது பக்க விலா எலும்புகள் அனைத்தும் நல்ல நிலையில் இருந்தன.

இருதயம்:  எடை  150 gram இருந்தது.  அதை திறந்து பார்க்க உள்ளே ரத்தம் திரவ நிலையில் இருந்தது.  இருதயத்தின் அனைத்து தமனி, சிரை, வால்வுகள் சரியான நிலையில் இருந்தன. 

வலது நுரையீரல்: எடை 240 கிராம், வலது நுரையீரலின் அடிப்பக்க முனையில் 12x3x8cm அளவுள்ள கிழிந்த காயம் இருந்தது.

இடது நுரையீரல் : எடை 250 கிராம். திறந்து பார்க்க வெளிறி இருந்தது.

குரல்வளை &  மூச்சு குழல்: காலியாக இருந்தது.

குரல்வளை எலும்பு: சரியான நிலையில் இருந்தது.

அடிவயிறு :1500ml இரத்தம் திரவ நிலையில் உள்ளது.

வயிறு: பாதி செறித்த நிலையில் உணவு பொருட்கள் 500ml பச்சை நிறத்துடன் இருந்தது.  குறிப்பிடும்படியான  வாசனை ஏதுமில்லை.

சளி : வெளிறி இருந்தது.

கல்லீரல்: 950 gram எடை. ஈரலில் வலது பக்கத்தில் 12x3x7cm அளவுள்ள கிழிந்த காயம் இருந்தது. திறந்து பார்க்க வெளிறி இருந்தது.

மண்ணீரல்: எடை 100gram. திறந்து பார்க்க வெளிறி இருந்தது.

வலது சிறுநீரகம்: எடை 100gram திறந்து பார்க்க வெளிறி இருந்தது

இடது சிறுநீரகம்:  100 gram  எடை. திறந்து பார்க்க வெளிறி இருந்தது

வெளிப்புற பிறப்புறுப்பு: சாதாரண நிலையில் இருந்தது. காயம் எதுவும் காணப்படவில்லை.

மலவாய்:  சாதாரண நிலையில் இருந்தது. காயம் எதுவும் காணப்படவில்லை. மலத்திட்டு இருந்தது.

கர்ப்பபை: எடை 80கிராம் திறந்து பார்க்க காலியாக இருந்தது.

மண்டை ஓடு: இடது பின்பக்க மேல் மண்டையில் இரத்த குழாயில் பரவலாக இரத்த கசிவு இருந்தது.

மண்டை ஓடு சவ்வு:  சவ்வுகள் நல்ல நிலையில் இருந்தன.

மூளை: எடை1300gram  பின்பக்க மண்டை ஓட்டில் பெருமூளையில் 2.2cm அளவுள்ள காயமும் இரத்த கசிவும் இருந்தது.

இடுப்பு எலும்பு மற்றும் தண்டுவடம் சரியான நிலையில் இருந்தது.

(பிரேதம் வெளிப்புறமாக அறுத்து சோதனை செய்யப்பட்டது)

இரசாயன பகுப்பாய்வுக்காக உள்ளுறுப்புகள் (Visera) மாதிரிக்கு எடுக்கப்பட்டது. புலன் விசாரணை அதிகாரி கேட்டுக்கொண்டதின் பேரில் மொத்த பிரேத பகுப்பாய்வும் காணொளி காட்சி மூலம் பதிவு செய்யப்பட்டது.  பதிவு செய்யப்பட்ட SD Card புலன் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறிப்பு: 1. எல்லா சிராய்ப்பு காயங்களும் கருஞ்சிவப்பு நிறத்தில் இருந்தன.

1.         எல்லா காயங்களும் புதிய காயங்களாக இருந்தன. அவை இறப்பிற்கு முன்பு ஏற்பட்டவை.

2.         பிரேத பகுப்பாய்வு செய்வதற்கு முன் 36 – 48மணி நேரத்திற்குள் மரணம் சம்பவத்திருக்கலாம்.

கருத்துரு:  பெரும் இரத்த போக்கினாலும், அதிர்ச்சியினாலும், பல்வேறு காயங்களாலும் மரணம் சம்பவித்திருக்கலாம்.  இருந்தாலும் உள்ளுருப்புகளை இரசாயன பகுப்பாய்வு செய்த பின்னரே மரணத்திற்கான காரணத்தை தெளிவாக குறிப்பிட முடியும்.

இனி கூறாய்வு குறித்த கருத்துக்கள்: 

            கனியாமூர் சக்தி பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதியின் மரணம் “சந்தேக மரணம்” என 174 CPRC படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் தெரிவித்திருக்கும் நிகழ்விற்கும் போஸ்மார்ட்டம் ரிபோர்டில் உள்ள காயங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

போலீஸ் ஸ்டேண்டிங் ஆர்டர் படி (PRO) பிணக் கூராய்வுக்காக வேண்டுகோள் கடிதத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பபடும் பெண் பிணமாக இருக்கும்பட்சத்தில் புலண் விசாரணை அதிகாரி, மெடிக்கல் ஆபிசருக்கு அனுப்பும் வேண்டுகோள் கடிதத்துடன் தனக்கு ஏற்படும் சட்டப்பூர்வமான சந்தேகங்களை கேள்வியாக எழுதி அனுப்பியிருக்க வேண்டும்.அதில் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்ததால் பிரேதத்தின் உடலில் காணப்படும் காயங்களுடன் வேறு என்ன என்ன காயங்கள் ஏற்படும்?

அந்தரங்க உறுப்பின் (Vegina) Physical Appearance மற்றும் அந்தரங்க உறுப்பிலிருந்து Vaginal Swap  மற்றும் Vaginal Smear எடுத்து Preserve  செய்ய எடுக்க வேண்டும். இந்த நிகழ்வை போஸ்ட்மார்ட்ட சான்றிதழில் மருத்துவர் குறிப்பிட வேண்டும். ஆனால் PM வேண்டுகோள் கடிதத்தில் அதனை குறிப்பிடாமல் கள்ளக்குறிச்சி DSP கடமையிலிருந்து தவறிவிட்டார்.

DSP எழுதாத நிலையிலும், பிணக் கூராய்வு செய்யும் அரசு மருத்துவர்கள் அவ்வாறு Physical Appearance குறித்து குறிப்பு எழுதுவதும், பின்னர் Vaginal Swap  மற்றும் Vaginal Smear எடுத்து ஆய்வகத்திற்கு  அனுப்ப வேண்டியதும் பிணக் கூராய்வின் அடிப்படை அம்சங்கள்.

முதல் பிணக் கூராய்வில் இவைகள் செய்யாத Medical Collage RMO மற்றும் Tutor  உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும். இரண்டாவது PM லும் அதனை Collect  செய்து அதனை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பிட எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை, எனும் போது ஒரு குற்றத்தின் சான்று பெருள்களை அழிப்பதற்கு மேற்படி DSP, Medical  Collage RMO மற்றும் Tutor ஆகியோர் காரணம் ஆகும். POCSO Act படியும் இ.த.ச படியும் Indian Medical Council சட்ட படியும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

நடைப்பெற்றுள்ள அத்தனை சட்ட விரோதச் செயலையும் பார்க்கும் போது கண்டிப்பாக ஒரு பெரும் குற்றம் நிகழ்ந்து அதனை செய்தவர்கள் தப்பிக்க வைக்கப்பட்டதாக கருத இடமிருக்கிறது. எனவே ஸ்ரீமதியை வண்புணர்வு / கொலை செய்யப்பட்டிருக்க கூடிய வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது. மிகப்பெரும் துன்புறுத்தல் காரணமாக குழந்தை யின் உயிர் பிரிந்துள்ளது.  குழந்தை வன்முறைக்கு உள்ளாகி உள்ளதை உணர முடிகிறது.

5. பரிந்துரைகள்

1. இவ்வழக்கின் விசாரணை முடியும் வரை பள்ளியை நடத்தும் தனியார் நிர்வாகத்தை, இடைநீக்கம் செய்ய வேண்டும். அந்தப் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் கல்வி பாதிக்காமல் இருக்க வேறு பள்ளிகளில் சேர்க்கும் வாய்ப்பு இல்லை என்றால், சம்பந்தப்பட்ட பள்ளியை தற்காலிகமாக நிர்வகிக்க சிறப்பு அலுவலர் ஒருவரை நியமித்து நடத்த வேண்டும்.  

2. விசாரணை முடியும் வரை பள்ளி வளாகத்திற்குள் தனியார் நிர்வாகம் நுழையக் கூடாது. விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஆசிரியர்களுக்குப் பதிலாக வேறு ஆசிரியர்களை நியமித்துப் பாடத்தை நடத்த வேண்டும். .

3. அனுமதி பெறாமல் விடுதி நடத்தியற்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் தனியார் பள்ளி விடுதிகளை ஒழுங்கமைத்திட ஆவன செய்திட சட்டம் இயற்ற வேண்டும். பள்ளி வளாகத்தில் படுக்கையறை வசதியுடன் நிர்வாகம் தங்கும் அறை அல்லது தனி ஓய்வெடுக்கும் கட்டிடங்கள் இருந்தால் உடன் தடை செய்திட வேண்டும்.

4. தனியார் பள்ளி கட்டண வசூல் குறித்து தொடந்து கண்காணிக்க கல்வித்துறை – குடிமை சமூக அமைப்புகள் கொண்ட குழு உருவாக்கிட வேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய மரணங்கள் நிகழ்ந்தால் செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்து விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

5. பள்ளியில் நடந்த வன் முறை ஏற்புடையதல்ல. இதற்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட வேண்டும். ஆனால் அதே சமயம், இச்சம்பவத்தை காரணம் காட்டி அப்பாவிகளையும், சம்பந்தமில்லாத மாணவர்களையும் கைது செய்கிற நடவடிக்கைகளை காவல்துறை  மேற்கொள்ளக் கூடாது.   மேலும் கைது செய்யப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் எதிர் காலத்தை கணக்கில் கொண்டு அவர்களை விடுதலை செய்வதுடன், அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும்.

6. மாணவி ஸ்ரீமதியின் குடும்பத்திற்கு 50 லட்சம் நட்ட ஈடு வழங்க  வேண்டும்.

7. பொதுவாக சந்தேகத்திற்குரிய மரணங்களில், பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் (Victim) ஒரு மருத்துவர், பிரேத பரிசோதனைக்குழுவில் இடம் பெறுவதை அரசு உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

CPIM Tamilnadu
the authorCPIM Tamilnadu