செய்தி அறிக்கை

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு; பாரபட்சமற்ற விசாரணையும், நடவடிக்கையும் மேற்கொண்டு கோவை மக்களின் அச்சத்தை போக்கிட, பாதுகாப்பினை பலப்படுத்திட தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

887541

கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் காரின் சிலிண்டர் வெடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் இருந்த ஜமேசா முபீன் என்பவர் உயிரிழந்த நிலையில், காவல்துறை உடனடியாக 6 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகிறது. சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. மேலும், காவல்துறை மேற்கொண்டுள்ள முதல்கட்ட விசாரணையில் சதி திட்டங்கள் இருக்கக் கூடுமோ என்ற ஐயம் எழுந்துள்ளது.

அண்மைக் காலமாக பெட்ரோல் குண்டு வெடிப்புக்கள் கோவையில் நடந்துள்ளன. தொடர்ச்சியாக மத மோதலை உருவாக்கும் வகையில் கோவையில் பாஜக-இந்து முன்னணியினர் வெறுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று நாடு முழுவதும் மத மோதலை உருவாக்கும் வகையில் பாஜக-இந்து முன்னணியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சக்திகளுக்கு தீனி போடும் வகையில் இஸ்லாமிய, தனிநபர், தீவிரவாத சக்திகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது கவலையளிப்பதாகும். இத்தகைய மதவெறி போட்டி நடவடிக்கைகளினால் கோவையில் தொடர்ந்து பதற்றமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

கார் சிலிண்டர் வெடிப்புக்கு பின்னணியில் தீவிரவாத நடவடிக்கை திட்டமிடபட்டிருக்கிறதா என்பதை காவல்துறை விரைவாக விசாரித்து உண்மைகளை கண்டறிய வேண்டும். சிலர் தீவிரவாத, வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசும், காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும்.

மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில், குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போல மதவெறி சக்திகள் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்திற்கு மதச்சாயம் பூசி அரசியலாக்குவதும், மக்களிடையே மத அடிப்படையில் வெறியை தூண்டுவதும் கோயம்புத்தூர் மக்களுக்கும், தமிழக நலனுக்கும் உகந்ததல்ல என்பதை சுட்டி காட்ட விரும்புகிறோம்.

மதவெறி சக்திகளின் வெறுப்பு அரசியலுக்கு இரையாகாமல் அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் இருக்க வேண்டுமென அனைத்து பகுதி மக்களையும் சிபிஐ(எம்) கேட்டுக் கொள்கிறது.