இடதுசாரிகளின் ஆதரவுடன் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் 2006ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் சிறுபான்மை மாணவர்களுக்கான பள்ளிக்கல்வி (Pre Matric) உதவித் தொகை திட்டம்.
இத்திட்டத்தின் மூலம் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புவரை படித்து வந்த லட்சக்கணக்கான சிறுபான்மை மாணவர்கள் பயனடைந்து வந்தனர். இந்த ஆண்டு உதவித் தொகையை பெறுவதற்கு 1 முதல் 10 வகுப்பு வரை படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த உதவித் தொகை 9 மற்றும் 10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் 1ம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை இனிமேல் கிடைக்காது என்ற அநியாய தாக்குதலை ஒன்றிய அரசு தொடுத்துள்ளது.
அடுத்து 9 ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இதர கல்வி உதவிகளையும் ஒன்றிய மோடி அரசு படிப்படியாக ரத்து செய்து விடுவதற்கான முதல்படிதான் இந்த முயற்சியோ என்று அச்சப்பட தோன்றுகிறது.
வெறுப்பு அரசியலின் மூலம் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து வன்முறைத் தாக்குதல் நடத்தி வரும் ஒன்றிய மோடி அரசு, தற்போது சிறுபான்மை மாணவர்கள் கல்வி வாய்ப்பின் மீதும் கொடூரத் தாக்குதலை தொடுத்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாக கண்டிக்கிறது.
கல்வி உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்துள்ள 1முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து சிறுபான்மை மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை (Pre Matric) தொடர்ந்து வழங்கிட வேண்டுமென ஒன்றிய அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது.
தமிழக அரசு இதர மாநில அரசுகளுடன் இணைந்து மோடி அரசின் இந்த தாக்குதலை முறியடிக்க முன்வர வேண்டுமெனவும், அனைத்து ஜனநாயக இயக்கங்களும் மோடி அரசின் இந்நடவடிக்கையை கண்டித்து குரலெழுப்ப வேண்டுமெனவும் சிபிஐ (எம்) கேட்டுக் கொள்கிறது.