இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் மாநில செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் (67). திண்டுக்கல் நகரத்தில் கட்சி கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு அஞ்சலி செலுத்துகிறது.
தோழர் என்.கே.நடராஜன், கல்லூரி காலத்திலேயே மார்க்சியத்தின்பால் ஈடுபாட்டுடன் இருந்தவர். சாருமஜூம்தார் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு தன்னை சிபிஐ(எம்-எல்) விடுதலை கட்சியில் இணைத்துக் கொண்டவர். 1980 களில் கட்சியின் முழுநேர ஊழியராக ஆன அவர், நீலகிரியில் உள்ள மலைவாழ் மக்களுக்காக போராடியவர். கோவை மாவட்ட ஆலைத் தொழிலாளர்களையும் மற்றும் குமாரப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்து சங்கமாக்கி பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்.
2019ல் கட்சியின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அவர், 2022ல் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டிலும் மீண்டும் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இடதுசாரி ஒற்றுமையை கட்டுவதில் முக்கிய பங்காற்றியவர். இடதுசாரி கட்சிகள் சார்பில் கூட்டு இயக்கங்கள் நடத்துகிறபொழுது, தவறாமல் அதற்கான கூட்டங்களில் கலந்து கொள்வதுடன், மாநிலம் முழுவதும் அவரது கட்சித் தோழர்களை கலந்து கொள்ளச் செய்வார். அவரது மறைவு இடதுசாரி இயக்கத்திற்கு பேரிழப்பாகும்.
அவரது இழப்பால் வாடும் அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர்களுக்கும், கட்சி தோழர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.