சிறப்பு பதிவுகள்

ஜி-20 தலைமைப் பொறுப்பு பெருமை கொள்ள என்ன இருக்கிறது?

Fjhnmmeakaekbxa

ஜி 20 நாடுகளின் தலைமைப் பொறுப்பு இந்திய ஒன்றிய அரசாங்கத்திற்கு வந்திருப்பதையொட்டி அது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு, ஒன்றிய அரசு ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

இந்தக் கூட்டமானது, ஜி 20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்பது தொடர்பாகவும், இது தொடர்பான கூட்டங்களை 200 இடங்களில் நடத்த இருப்பது தொடர்பாகவும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை கூறுவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பு என்பது சுழற்சி முறையில் ஒவ்வொரு உறுப்பு நாட்டுக்கும் வந்து கொண்டிருக்கிறது. ஜி 20 இல் அங்கம் பெற்றுள்ள அனைத்து நாடுகளுக்கும் சுழற்சி முறையில் இந்த வாய்ப்பு கிடைத்திடும்.

1999ல் தெற்கு ஆசிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில் ஜி 20 அமைப்பு உதயமானது. பணக்கார நாடுகள், நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தக் கொள்கையினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் சுமைகளைப் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் ஆரம்பத்தில் ஜி 7 நாடுகளாக இருந்தது, பின்னர் ஜி 20 நாடுகளாக விரிவடைந்தது. ஆரம்பத்தில் இது அமைச்சர்களின் கலந்தாலோசனை என்ற மட்டத்தில்தான் நடந்தது. பின்னர் 2008ல் பொருளாதார மந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அது அரசாங்கங்களின் உச்சி மாநாடுகளாக மாற்றப்பட்டது. அதன் பின்னர், சுழற்சி முறையில் தலைமைப் பொறுப்பு உறுப்பு நாடுகளுக்கு அளிக்கப்பட்டது. இதற்கும் அந்தந்த நாடுகளில் உள்ள உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கோ அல்லது சமூக அரசியல் நிலைமைக்கோ எந்தச் சம்பந்தமும் கிடையாது.

பிரதமர் அவர்கள், ‘ஒரே உலகம்-ஒரே குடும்பம்-ஒரே எதிர்காலம்’ என்னும் ஆய்வுப் பொருளைச் (theme) சுற்றி, தன்னுடைய உள்நாட்டு அரசியல் பிரச்சாரத்தை அறிவித்து, ஜி 20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமை “யாதும் ஊரே யாவரும் கேளிர்” (universal sense of one-ness) என்பதை மேம்படுத்தும் விதத்தில் இருக்கும் என்று அறிவித்திருக்கிறது.

ஒன்றிய அரசாங்கம் அறிவித்திருக்கும் ‘அனைவரும் ஒரே குடும்பம்’ (‘வாசுதைவ குடும்பகம்’) என்னும் கருத்தாக்கமானது ஒற்றை தன்மையை திணிப்பதற்கான முயற்சியாக இருக்கக் கூடாது. மாறாக உலகக் குடும்பம் என்பது சமத்துவம் மற்றும் கண்ணியத்தின் அடிப்படையில் அனைத்து வேற்றுமைப் பண்புகளையும் சமமான முறையில் கருதக்கூடிய சமூகப் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதை அங்கீகரித்திட வேண்டும். அத்தகைய உலகக் குடும்பம்தான் ஒவ்வொரு நாட்டிலும் நிறுவப்பட்டிருக்கிறது.

பிரதமரால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆய்வுப்பொருளின் நம்பகத்தன்மையானது, நம்முடைய அரசமைப்புச் சட்டம் பிரகடனம் செய்திருப்பதைப் போன்று எந்த சாதியினராக இருந்தாலும், எந்த இனத்தினராக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அனைவரும் சமம் என்கிற அடிப்படையில் அமைந்த ஒரு சமுதாயம் மற்றும் ஓர் அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதையே முக்கியமாக சார்ந்திருக்கிறது.

நம் அரசமைப்புச் சட்டம் அனைவருக்கும் சமூக நீதி, அரசியல் நீதி மற்றும் பொருளாதார நீதி வழங்க வேண்டும் என்பதைத் தன் முகப்புரையில் பொறித்துள்ளது. ஆனால் நாட்டில் தற்போது மதவெறி அடிப்படையில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை உமிழும் பிரச்சாரங்களும் வன்முறை வெறியாட்டங்களும் பிரதமர் அறிவித்துள்ள பிரகடனத்தின் அடித்தளங்களையே அழித்துக் கொண்டிருக்கின்றன.

நம் நாட்டில் பொருளாதார மந்தம், வேலையில்லாத் திண்டாட்டத்தையும், வறுமையையும் மிகவும் மோசமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு எதிரான சமூக அநீதிகள் பல்கிப் பெருகியிருக்கின்றன. தங்கள் ஆட்சிக்கு எதிராகக் கருத்துக் கூறும் அனைவரையும் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்துவதன் மூலம் அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள் கடுமையாக தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் ஆய்வுப் பொருள் உண்மையாகிட வேண்டுமானால், நாட்டில் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் மேலே கூறிய தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும். நம் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுக்காக வரையறுக்கப்பட்டிருக்கின்ற சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ள அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளங்கள் உறுதியாகப் பின்பற்றப்பட வேண்டும்.

ஜி 20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றிருப்பதை உலகம் அங்கீகரிக்க வேண்டுமானால், இந்திய அரசாங்கம் ஜி 20 நாடுகளின் அறிவிக்கப்பட்டுள்ள குறிக்கோள்களை நிறைவேற்றும் விதத்தில் செயல்பட வேண்டும்.