தமிழக அரசின் தொழில் மற்றும் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் கடந்த டிசம்பர் 14 ம் தேதி ஒரு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் மூலம் தமிழகத்தில் காப்புக் காடுகளின் அருகே எவ்வித சுரங்கப் பணிகளோ அல்லது அகழ்வு பணிகளோ நடைபெறக் கூடாது என விதிக்கப்பட்டிருந்த தடையென்பது முற்றிலுமாக தளர்த்தப்பட்டிருக்கிறது. அரசின் இத்தகைய முடிவு ஆபத்தானதாகும்.
தமிழகத்தில் மிக முக்கியமான சூழல் மண்டலமான மேற்கு தொடர்ச்சி மலையும், கிழக்கு தொடர்ச்சி மலையும் உள்ளன. இம்மலைகளில் பெருமளவு நிலப்பரப்பில் காப்புக்காடுகள் உள்ளன. இது தவிர பரவலாக சமதளப் பகுதிகளிலும் ஏராளமான காப்புக்காடுகள் உள்ளன. இத்தகைய காப்புக்காடுகளில் ஏராளமான வன விலங்குகளும், அரிய வகையிலான தாவரங்களும் உள்ளன. மேலும் காப்புக்காடுகளையொட்டிய பகுதிகளில் கணிசமான மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் காப்புக்காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்கனவே சுரங்கம் மற்றும் அகழ்வு பணிகள் நடைபெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பானது பல்வேறு பாதிப்புகளையும் எதிர் விளைவுகளையும் உருவாக்கும். குறிப்பாக காப்புக்காடுகளில் உள்ள வனவிலங்குகள் பயன்படுத்தி வரும் வலசைப் பகுதிகள் சிதைவதால் அவை மக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி இடம் பெயரும் நிலை உருவாகும். இதனால் மனிதர் மற்றும் வனவிலங்கு மோதல் அதிகரிக்கக்கூடும்.
மேலும் காப்புக்காடுகளை ஒட்டிய பகுதிகளில் சுரங்கப் பணிகளுக்கு அனுமதிக்கப்பட்டால் அங்கு ஏற்படும் மாசு மற்றும் புழுதிக்காற்றால் காப்புக்காடுகளின் பரப்பளவு குறைவதோடு சுற்றுச் சூழலுக்கும் பெருமளவிலான பாதிப்பும் உருவாகும். காப்புக்காடுகளின் பரப்பளவு குறைந்தால் தமிழகத்திற்கு கிடைக்கும் மழைப்பொழிவின் அளவும் கூட எதிர்காலத்தில் குறையும்.
எனவே, சுற்றுச்சூழலையும், மக்களையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பதற்கான முறையில் சுரங்கம் மற்றும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ள கூடாது என ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை தமிழக அரசு தொடர வேண்டும் என கேட்டுக் கொள்வதோடு, டிசம்பர் 14 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பை முழுமையாக திரும்பபெற வேண்டுமெனவும் தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது.