உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
உழவையும், உழைப்பையும் கொண்டாடும் பொங்கல் திருநாள், தமிழ் பேசும் மக்களின் தனிச் சிறப்பான பண்பாட்டு வெளிப்பாடாக உள்ளது. மதங்கள், சாதிகள் என அனைத்து வேற்றுமைகளையும் கடந்து, இயற்கையைப் போற்றி, உழைப்பின் உன்னதத்தை உயர்த்திக் காட்டும் இந்த நாளின் சிறப்பை மென்மேலும் வளர்த்தெடுப்போம், மக்கள் ஒற்றுமைத் திருவிழாவாக, தமிழ் வெளியெங்கும் கொண்டாடி மகிழ்ந்திருப்போம்.
தமிழ்நாடு என்ற பெயரைக் கூட ஏற்க மறுக்கும் சக்திகள் ஒன்றிய ஆட்சியில் இருக்கிறார்கள். அவர்கள் ஒற்றை மதம் என்ற பெயரில் சிறுபான்மை மக்களை அச்சுறுத்துகிறார்கள். ஒற்றை கலாச்சாரத்தை வற்புறுத்தி பன்முக பண்பாட்டை அழிக்க நினைக்கிறார்கள். ஒற்றை மொழி என்ற பெயரில் ஆதிக்க போக்கை முன்னெடுக்கிறார்கள். சனாதன மேலாதிக்கத்தையும் தொடர்ந்து புனைவுகளின் பேரால் திணிக்கிறார்கள். இவற்றையெல்லாம் செய்துகொண்டே இந்தியாவின் உழவர்களையும், உழைப்பாளர்களையும் நசிக்கும் நாசகரப் பொருளாதாரக் கொள்கைகளை வேகப்படுத்துகிறார்கள்.
அதற்கெல்லாம் எதிராக சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, வளமான வரலாற்று அடித்தளத்தைக் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் முற்போக்கு பண்பாட்டு அடையாளமாகவும், உழவையும் உழைப்பையும் கொண்டாடி இயற்கையைப் போற்றும் விழாவாகவும் பொங்கல் அமைந்துள்ளது.
மிச்சமுள்ள பிற்போக்கு சிந்தனைகளையும், ஆணாதிக்கத்தையும், சாதி அழுக்குகளையும் போகியில் பொசுக்கி, நல்லதொரு முன்னேற்றமான எதிர்காலத்தை எதிர்நோக்கி நம்பிக்கையோடு முன்செல்வோம் என்று சி.பி.ஐ(எம்) மாநிலக்குழு சார்பில் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.