நேர்மையான விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தல்!
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மலம் கலந்த கொடுமையை எதிர்த்து தமிழகமே வெகுண்டெழுந்து கண்டனக்குரலை எழுப்பியது. இச்சம்பவம் அறிந்தவுடனேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களத்தில் இறங்கி போராடியது. மற்ற அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கண்டனக் குரலெழுப்பின. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இச்சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாகியும் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் எழுப்பிய போது, உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வாக்குறுதியளித்தார்.
இந்நிலையில் காவல்துறை மேற்கொண்ட விசாரணை பல கேள்விகளையும், அதிர்ச்சியையும் எழுப்பியுள்ளது. இத்தகைய இழிசெயல்களில் ஈடுபட்டவர்களை பாரபட்சமின்றி விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கையினை காவல்துறை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், இதற்கு மாறாக ஒட்டுமொத்த சம்பவத்தையும் திசை திருப்பும் நோக்கில் புலன் விசாரணை மேற்கொள்வதாக பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. விசாரணை அதிகாரிகளின் இத்தகைய போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
காவல்துறை விசாரணையின் மீது சந்தேகக் கறைகள் படிந்துள்ள சூழ்நிலையில் இவ்விசாரணையை மாற்றி அமைக்க வேண்டுமென சிபிஐ (எம்) உள்பட பல அரசியல் கட்சிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இதனை ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு அரசு இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளது வரவேற்கத்தக்கது.
சிபிசிஐடி விசாரணையை நேர்மையான முறையில் நடத்தி உண்மையான குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்பட வேண்டுமென சிபிஐ (எம்) மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.