தீர்மானங்கள்மத்தியக் குழு

மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக பிப். 22 – 28 நாடு தழுவிய கிளர்ச்சிப் பிரச்சாரம்; சிபிஐ(எம்) மத்தியக்குழு அறைகூவல்

D4qudzfuiaaqb8p

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் கொல்கத்தாவில் ஜனவரி  28-29 தேதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;

இந்தியப் பொருளாதாரம் உலகப் பொருளாதார மந்த நிலைமை தீவிர மடைந்திருப்பதன் காரணமாக இந்தியப் பொருளாதாரமும் தள்ளாடுவது தொடர்கிறது. பொருளாதாரத்தை மீட்டெடுத்துவிட்டோம் என்று என்னதான் அரசுத் தரப்பில் தம்பட்டம் அடிக்கப்பட்டாலும், இந்தியாவின் உற்பத்தித் திறன்களை அதிகரித்திடத் தேவையான முதலீடுகள் அதிகரிக்கப்படவில்லை. இதன் பொருள், வேலைவாய்ப்பு என்பது தேக்க நிலையில் இருக்கிறது. இது வீழ்ச்சியடையாவிட்டாலும், மிகப்பெரிய அளவிற்கு வறுமையையும், துன்பத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

தீவிரமடையும் சமத்துவமின்மை:

‘பணக்காரர்கள் தொடர்ந்து செழிப்படைதல்: இந்தியாவின் துணை’ என்னும் ஆக்ஸ்ஃபாம்  அறிக்கையானது, இந்தியாவின் செல்வத்தில்  40 விழுக்காட்டிற்கும் அதிகமாக, மொத்த மக்கள் தொகையில் 1 விழுக்காட்டினர் பெற்றுள்ளார்கள் என்றும், 10 மிகப்பெரும் பணக்காரர்களின் மொத்த செல்வ வளம் என்பது, 2021ல் இருந்ததை விட 32.8 விழுக்காடு உயர்ந்து, 2022ல் 27.52 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது என்றும் மக்கள் தொகையில் கீழ்நிலையில் உள்ள 50 விழுக்காட்டினர் வெறுமனே 3 விழுக்காடே பெற்றிருக்கின்றனர் என்றும் கூறுகிறது. இந்தியாவில் 2020ல் 102 பில்லியனர்களாக இருந்த எண்ணிக்கை, 2022ல் 160 ஆக அதிகரித்திருக்கிறது. அதே சமயத்தில் முற்றிலும் நேரெதிரான நிலையில், வறிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கையோ 23 கோடியாகும். இது உலகிலேயே வறுமை நிலையில் வாழ்வோரில் மிக அதிக எண்ணிக்கையாகும்.

இதேபோன்றே வரி விதிப்பு முறையும் மிகவும் பின்னடைந்த நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. அதாவது, நம் நாட்டு மக்களில் அடிமட்டத்தில் உள்ள 50 விழுக்காட்டினர் உயர் 10 விழுக்காட்டினருடன் ஒப்பிடும்போது பெறுகின்ற வருமானத்தில் 6 மடங்கு அதிகமாக மறைமுக வரி செலுத்துகிறார்கள். உணவு மற்றும் உணவு அல்லாத அத்தியாவசியப் பொருள்கள் மீது வசூலிக்கப்பட்டுள்ள மொத்த வரிகளில் 64.3 விழுக்காடு, அடிமட்டத்தில் உள்ள 50 விழுக்காட்டினரால் செலுத்தப்படுகிறது. மோடி அரசாங்கத்தால் உயர் பணக்காரர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் வரிச்சலுகைகள் ரத்து செய்யப்பட்டு, செல்வ வரி மற்றும் வாரிசு வரி முதலானவை அறிமுகப்படுத்தப்பட வேண்டும், அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் மீதும், குறிப்பாக உணவுப் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி ரத்து செய்யப்பட வேண்டும்.

மதவெறித் தீ கூர்மைப்படுத்தப்படுதல்

மதவெறித் தீயைக் கூர்மைப்படுத்தும் முயற்சிகள் பல வழிகளிலும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்தும், தங்கள் மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கின்றன. இத்துடன் இவை முஸ்லீம் தனிநபர் சட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பது குறித்தும் கடுமையான முறையில் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

பாஜக தலைமையிலான அனைத்து மாநில அரசாங்கங்களுமே முஸ்லீம் சிறுபான்மையினரைக் குறிவைத்து ‘லவ் ஜிகாத் தடுப்பு’ அல்லது ‘பசுப் பாதுகாப்பு’ என்ற பெயரில் ஏற்கனவே சட்டங்களை நிறைவேற்றியிருக்கின்றன. விரும்பி மதம் மாறி, இரு மதத்தினர் மதம் கடந்து திருமணம் செய்து கொள்வதைத் தடுத்திடும் விதத்தில் நிபந்தனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

கல்வி நிறுவனங்களில் முஸ்லீம் மாணவர்களுக்கு எதிராக வெறுப்பை விதைத்திடும் விஷமம் மிகவும் ஆபத்தான முறையில் அதிகரித்துக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உத்தரப்பிரதேச பாஜக மாநில அரசாங்கம், அடிப்படை அரசமைப்புச்சட்ட உத்தரவாதங்களைக் கூட முஸ்லீம் சிறுபான்மையினருக்கு மறுக்கும் விதத்தில் மிகவும் கொடூரமான முறையில் மதவெறித் தீயை விசிறிவிட்டுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் உத்தரப்பிரதேசம் ராப ரேலி மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளியின் முதல்வர், தன்னுடைய பள்ளியில் மாணவர்கள் மிகவும் புகழ் பெற்ற உருது பிரார்த்தனை பாடல் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்ததற்காக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கரில் வடக்கு பாஸ்டர் மாவட்டத்தில் கிறித்தவர்கள் மீது பெரிய அளவில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கிறித்தவர்கள், இந்துக்களை மதமாற்றம் செய்கிறார்கள் என்று கூறி இவ்வாறு தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இது உண்மையில்லை. இந்தக் காலகட்டத்தில் எவரொருவரும் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டதாக செய்திகள் எதுவும் வெளிவரவில்லை. தங்கள் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலைப் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் அரவணைப்புடன் பஜ்ரங் தளத்தால் ‘தாய்மதத்திற்குத் திரும்புகிறோம்’ என்பதை வலுக்கட்டாயமாக ஏற்க வேண்டும் என்கிற அடிப்படையில் இவ்வாறு கிறித்தவ மதத்தினர் மீது குறி வைத்துத் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இவர்களின் வன்முறை வெறியாட்டங்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மீது மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்று திரும்பி வந்துள்ள பெண் மல்யுத்த வீராங்கனைகள், தங்களைப் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்குவதாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்ற ஒருவர் மீது மிகவும் மோசமான குற்றச்சாட்டைச் சுமத்தி இருக்கிறார்கள்.  இந்த நபருக்கு எதிராக அரசாங்கமோ அல்லது ஆளும் கட்சியோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பில்கிஸ் பானு வழக்கில் சிறைத் தண்டனை  பெற்ற குற்றவாளிகளின் ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு விடுதலையாகி வெளியே வந்தபோதும், 2014ல் புனேயில் நடைபெற்ற மொய்தீன் ஷேக் என்பவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் விடுதலை செய்யப்பட்டு வெளியே வந்த 21 நபர்களும் இந்துத்துவா அமைப்பினரால் மிகப் பெரிய அளவில் வரவேற்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு இந்தப் பேர்வழிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக காவல்துறையோ நிர்வாகமோ இவற்றை எதிர்த்து, மேல் நீதிமன்றங்களில் மேல்முறையீடு எதுவும் இதுவரை செய்திடவில்லை.

நீதித்துறையின் சுதந்திரம் அரித்து வீழ்த்தப்படுதல்

அரசாங்கமானது, நீதித்துறையை முழுமையாகத் தங்களுக்குத் ‘தலையாட்டும்’ நீதித்துறையாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் கொலீஜியங்கள் பரிந்துரை செய்துள்ள பல்வேறு பெயர்களை ஏற்காமல் தாமதம் செய்வதன் மூலமோ அல்லது நிராகரிப்பதன் மூலமோ, உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களில் தலையிட்டுக் கொண்டிருக்கிறது.

மோடி அரசாங்கத்தின் குறிக்கோள், உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றம் தங்களுக்குக் கீழ்ப்பட்டே இருக்க வேண்டும் என்பதாகும். அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள நீதித்துறையின் சுதந்திரம் இவ்வாறு பறிக்கப்படுவதென்பது, எதேச்சதிகாரத்தின் முழுமையான ஆதிக்கத்தையே வெளிப்படுத்துகிறது. ஆளுநரின் பங்கு கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதலை மேலும் உக்கிரப்படுத்தும் விதத்தில், பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களும், துணை ஆளுநர்களும் பாஜகவின் அரசியல் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன், அரசமைப்புச்சட்ட நிலைப்பாடுகளை மீறி மிகவும் வெட்கக்கேடான முறையில் செயல்பட்டுக் கொண்டிருப்பது தொடர்கிறது.

கேரளம், தெலுங்கானா, மகாராஷ்ட்ரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநில ஆளுநர்களும், தில்லி, லட்சத்தீவு, அந்தமான் மற்றும் புதுச்சேரியில் உள்ள துணை ஆளுநர்களும் தங்களுடைய அரசமைப்புச்சட்ட நிலைபாடுகளை முற்றிலும் தவறான முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  தமிழ்நாடு ஆளுநர், சட்டமன்றப் பேரவையில் மாநில அரசாங்கத்தால் தயார் செய்து  தரப்பட்ட ஆளுநர் உரையை முழுமையாகப் படிக்க மறுத்துவிட்டார். கேரள ஆளுநர், மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பது தொடர்கிறது.

ஆளுநரின் அலுவலகங்கள்,  மாநில அரசாங்கங்களுக்கு, தாங்கள் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள பங்கினை ஆற்றாமல், கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான அணுகுமுறையைக் கடைப்பிடித்துக் கொண்டு, அதிகாரங்களை மையப்படுத்துவதில் நாட்டமுடன் இருந்து வருகின்றன.

திரிபுரா சட்டமன்றத் தேர்தல்கள்

ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் அரித்து வீழ்த்தி, வன்முறை வெறியாட்டங்களுடன் ஆட்சி புரிந்து வரும் திரிபுரா பாஜக அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றிட, அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒத்துழைப்பையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி இருக்கிறது. தற்போது அங்கே நடைபெற்று வரும் வன்முறை வெறியாட்டங்கள், மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஊட்டும் விதத்தில் உள்ளன. இது நிச்சயமாக நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடைபெறுவதைப் பாதித்திடும். தலைமைத் தேர்தல் ஆணையம் இதில் முன்கூட்டியே தலையிட்டு, நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடைபெறுவதை உத்தரவாதப்படுத்திட, உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டும். திரிபுராவில் ஜனநாயகமும் ஜனநாயக உரிமைகளும் முழுமையாக மீட்டெடுக்கப்பட வேண்டும். இதற்கு நியாயமான மற்றும் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவது அவசியமாகும்.

மத்தியக்குழுவின் அறைகூவல்

திரிபுராவில், நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடைபெற ஒரு முன்நிபந்தனையாக ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீட்டெடுக்கப்படுவதற்கு, போராடிக் கொண்டிருக்கும் திரிபுரா மக்களுக்கும், மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திரிபுராவிற்கு ஆதரவு தெரிவித்து, நாடு தழுவிய அளவில் இயக்கங்களுக்குத் திட்டமிடும்.

அதிகரித்து வரும் வேலையின்மை, வறுமை மற்றும் சமத்துவமின்மையுடன் மக்களின் வாழ்வாதாரங்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு எதிராக வரும் பிப்ரவரி 22 முதல் 28 வரையிலான நாடு தழுவிய அளவில் கிளர்ச்சிப் போராட்ட நடவடிக்கைகளுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது.  

இத்துடன், 2023-24 பட்ஜெட்டால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். இவற்றுடன் கீழ்க்கண்ட கோரிக்கைகள் தொடர்பாகவும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும்:

  • ஆட்சியாளர்கள் உள்கட்டமைப்பு வசதி களை உருவாக்குவதற்கான திட்டங் களை மேற்கொள்வதற்காக பொது முத லீடுகளை உயர்த்திட வேண்டும்.
  • 5 கிலோ உணவு தானியம் இலவசமாக  வழங்கப்படுவதுடன், மானிய விலையிலும் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட வேண்டும்.
  • மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் ஒதுக்கீடுகளை உயர்த்தி, ஊதியத்தையும் உயர்த்திட வேண்டும்.
  • செல்வ வரி மற்றும் வாரிசு வரி அமல்படுத்திட வேண்டும்.
  • பணக்காரர்களுக்கான வரிச்சலுகைகளை ரத்து செய்திட வேண்டும். பெரும் பணக்காரர்களுக்கு வரி விதித்திட வேண்டும்.
  • மருந்துகள் மற்றும் உணவு மற்றும் அத்தியாவசியப் பண்டங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிகளை ரத்து செய்திட வேண்டும்.

2023 ஏப்ரல் 5 அன்று நாடாளுமன்றம் நோக்கி தொழிலாளர்கள்-விவசாயிகள்  நடத்திடும் பேரணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் முழு ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறது. மார்ச் மாதம் முழுவதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கீழ்க்கண்ட பிரச்சனைகள் குறித்து பிரச்சாரம் மற்றும் நடவடிக்கைகளுக்குத் திட்டமிடும்.

  • தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களுக்கு எதிராக, குறிப்பாக பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களுக்கு எதிராக, ஒன்றிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு எதிராக, நாட்டிலுள்ள கூட்டாட்சி அமைப்பு முறையை ஒழித்துக்கட்டிவிட்டு, ஒற்றை ஆட்சி முறையைக் கொண்டுவருவதற்காக ஒன்றிய ஆட்சியாளர்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • நீதித்துறையின் சுதந்திரத்தை அரித்து வீழ்த்திட பாஜக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளைக் கண்டித்து, பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தை, தங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற முறையில் ஒன்றிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், நீதித்துறையின் அரசமைப்புச்சட்ட பங்கினைப் பாதுகாத்திடவும், அனைத்து ஜனநாயக சக்திகளும் அணிதிரட்டப்பட வேண்டும்.
  • நியாயமான மற்றும் நேர்மையான முறையில் தேர்தல்கள் நடைபெறுவதை உத்தரவாதப்படுத்திடக் கூடிய விதத்தில் தேர்தல் சீர்திருத்தங்களில் ஜனநாயகம் மற்றும் அனைவரும் சமமான முறையில் நடத்தப்பட வேண்டியது அவசியம். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது அகில இந்திய மாநாடு தன்னுடைய அரசியல் தீர்மானத்தில் கூறியுள்ளவை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும்.
  • வலதுசாரி இஸ்ரேலிய அரசாங்கத்தினால் பாலஸ்தீன மக்கள் மீது ஏவப்பட்டுள்ள ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக ஆதரவு பிரச்சாரங்களுக்குத் திட்டமிடப்படும்.

தமிழில்: ச.வீரமணி