ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு நீண்ட கால தாமதத்திற்கு பிறகு ஒப்புதல் அளித்துள்ளார். இதுவரையிலும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் அவரை தடுத்தது எது என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்.
சட்டமன்றத்தை அவமதித்து தமிழக மக்களின் உணர்வுகளை காலில்போட்டு மிதித்து பல்வேறு உயிர்கள் பலியான பிறகு, பல குடும்பங்கள் ஓட்டாண்டி ஆன பிறகு வேறு வழியில்லாமல் ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ஒப்புதல் அவரின் மனம் உவந்த ஒப்புதல் அல்ல. போராட்டங்கள் மற்றும் சட்டத்தின்படி வேறு வழியில்லாத நிலை ஆகிய காரணங்களால் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இப்போதும் கூட அவர் சார்ந்துள்ள சங் பரிவார் இதை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று குழப்பத்தை விளைவிக்கலாமா என்று முயற்சிக்கக் கூடும். தமிழக மக்கள் அதையும் முறியடிப்பார்கள்.
ஆளுநர் ரவியை பகடை காயாக்கி தமிழக மக்களின் நலன்களை பணயப் பொருளாக்கி ஒன்றிய அரசும், பாஜகவும் விளையாடும் விளையாட்டு இது என்பதை தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள். இனியேனும் தன்னிடம் நிலுவையில் உள்ள மசோதாக்களை அவருக்கு இருக்கும் கடமைகளின்படி ஒப்புதல் அளிக்க ஆளுநர் முன்வர வேண்டும்.
இந்த மசோதா சட்ட வடிவம் பெறுவதற்காக தமிழ்நாடு அரசு, போராடிய கட்சிகள், இயக்கங்கள், தமிழ்நாட்டு மக்கள், ஊடகங்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது