ஆளுநர் ஆர்.என்.ரவி குடிமைத் தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் இன்று பேசியபோது, நாவடக்கம் இல்லாமல் வாழ்வுரிமைக்காக போராடிய தூத்துக்குடி மக்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
மேலும், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு இதுவரை ஒப்புதல் கொடுக்கவில்லை என்பதிலிருந்து அந்த சட்டம் நிறைவேற்றப்பட கூடாது என்பதே அர்த்தம் என தெரிவித்துள்ளார். ஆளுநரின் இக்கருத்துக்கள் அரசியல் சாசன வரம்புகளை மீறிய அடாவடித்தனமானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவையின் கூட்டு ஆலோசனை அடிப்படையில் செயல்பட வேண்டுமென அரசியல் சாசனம் வகுத்தளித்துள்ளது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் 60க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலையில் மாண்டு போயுள்ளனர்.
மேலும், பல்லாயிரம் குடும்பங்கள் சொத்துக்களை இழந்து நடுத்தெருவில் நிற்கின்றன. ஆன்லைன் தடை மசோதாவை தமிழக சட்டப்பேரவை இரண்டாவது முறை நிறைவேற்றிய பின்னரும் ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்திருப்பது அரசியல் சாசனத்திற்கு முழுவதும் விரோதமானதாகும்.
தூத்துக்குடியில் இயங்கிய ஸ்டெர்லைட் ஆலையினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மக்களுடைய உயிருக்கும், உடலுக்கும் பேராபத்து ஏற்பட்ட நிலையில், அந்த ஆலையை மூட வேண்டுமென அமைதியாக போராடிய மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
தற்போது, அம்மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்து விட்டதாகவும், இப்போராட்டத்திற்கு வெளிநாட்டு சக்திகளின் கை இருப்பதாகவும் ஆளுநர் கூறியிருப்பது அமைதியாக போராடிய மக்களை கொச்சைப்படுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். சென்னை உயர்நீதிமன்றமும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் ஆலையை மூட உத்தரவிட்டிருந்ததை ஆளுநர் அறியாதவர் போல் பேசியிருக்கிறார்.
தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகித்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் தொடர்ந்து எதிரான கருத்துக்களையும், அரசியல் சாசனத்திற்கு விரோதமாக தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் ஆர்.என்.ரவி அவர்கள் ஆளுநராக நீடிப்பதற்கான அருகதை அற்றவர்.
அவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென தமிழகம் முழுவதும் கண்டனக் குரல் எழுப்ப வேண்டுமென அனைத்து ஜனநாயக சக்திகளையும் சிபிஐ(எம்) மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.