பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை மக்களவை தொகுதி உறுப்பினருமான தோழர் சு. வெங்கடேசன் குறித்து ஆதாரமில்லாத, அப்பட்டமான அவதூறை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு. வெங்கடேசனையும் களங்கப்படுத்தும் இழிவான முயற்சியாகும். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
மதுரை, பெண்ணாடம் பேரூராட்சியில் கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மைபணியாளர் இறந்துவிட்டார். இது குறித்து சு. வெங்கடேசன் எம் பி கள்ளமௌனம் சாதிக்கிறார் என்று எழுதியிருந்தார். தமிழ்நாட்டில் பெண்ணாடம் என்ற ஊர் எங்கே இருக்கிறது? என்ற குறைந்தபட்ச பூகோள அறிவு கூட இல்லாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், தோழர் சு. வெங்கடேசனையும் அவதூறு செய்யும் உள்நோக்கத்தில் சமூக ஊடகத்தில் எழுதியுள்ளார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் எம். கணேசன் மதுரை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு நேற்றிரவு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையை ஒன்றிய அமைச்சர்கள் துவங்கி, தமிழக பாஜக தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர். கருத்துச் சுதந்திரம் இல்லையா என்று கதறுகின்றனர். கருத்துச் சுதந்திரம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உறுதியான நிலைபாடு உண்டு. ஆனால், பாஜக மாநிலச் செயலாளர் செய்தது உண்மைக்கலப்பு சற்றும் இல்லாத அவதூறு. இவ்வாறு பொய்த் தகவல்களை பரப்புவதுதான் பாசிசத்தின் குணம்.
மலக்குழி மரணம் முற்றாக தடுக்கப்பட வேண்டுமென்றும், மலக்குழிக்குள் இறக்கப்படவே கூடாது, அதற்கு பதிலாக இயந்திரங்களையே பயன்படுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இந்த கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடி வருவது செங்கொடி இயக்கமே என்பதை நெஞ்சுறுதியுடன் சொல்ல விரும்புகிறோம். இத்தகைய மரணங்கள் நிகழுமானால் அதைக் கண்டித்து களத்தில் நிற்கும் முதல் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே ஆகும்.
ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடியை அள்ளித் தருகிறது. மாறாக, மலக்குழி மரணங்களை தடுக்க ஒன்றிய அரசு எடுத்த உருப்படியான நடவடிக்கை என்ன என்று கூற முடியுமா?.
பாஜக மாநில செயலாளர் அவதூறு பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கருத்துச் சுதந்திரம் குறித்து ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கவலைப்படுகிறார். ஆனால் உலக அளவில் பத்திரிகைச் சுதந்திரம் குறித்து ஆய்வு செய்த எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு, ஊடகச் சுதந்திரம் குறித்து 180 நாடுகளில் ஆய்வு செய்து இதில் 150வது இடத்திற்கு இந்தியா சரிந்துள்ளது என குறிப்பிட்டுள்ளதை அமைச்சர் அறிவாரா?.
டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்ஷே அண்மையில் அளித்த பேட்டியில் இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் குறித்த செய்திகளை பதிவிடும் டிவிட்டர் கணக்குகளை முடக்க வேண்டுமென ஒன்றிய அரசு மிரட்டியதாகவும் இவ்வாறு செய்யவில்லை என்றால் இந்தியாவில் டிவிட்டர் அலுவலகம் மூடப்படும் என்றும், ஊழியர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படும் என்றும் அச்சுறுத்தியதாக கூறியிருந்தார். இதுதான் பாஜக அரசு ஊடகச் சுதந்திரத்தை பாதுகாக்கும் லட்சணமா?.
குஜராத் கலவரம் குறித்து ஆவணப் படங்கள் வெளியிட்ட பிபிசி நிறுவனத்தின் மீது வருமான வரித்துறையை ஏவிவிட்டதும், ஊடகச் சுதந்திரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையா?.
சமூக ஊடங்களை அவதூறுகளையும், பொய் புனைச்சுருட்டுக்களையும் பரப்பும் இடமாகவே பாஜகவினர் பயன்படுத்துகின்றனர். ஒரு புகாரின் பேரில் தமிழக காவல்துறை எடுத்த சரியான சட்டப்பூர்வ கைது நடவடிக்கைக்காக இவ்வளவு தூரம் பாஜக தலைவர்கள் துடிக்கிறார்கள். அதே சமயம் ஒன்றிய பாஜக அரசு அமலாக்கத்துறையை ஏவிவிட்டு தமிழ்நாட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஊடகச் சுதந்திரம் குறித்து பாடம் நடத்தும் பாஜகவினர் கண்ணியமாக உண்மையான கருத்துக்களை வெளியிடுவது எப்படி என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும். அவதூறுகளையும், பொய்புனைச் சுருட்டுக்களையும் பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்