ஒன்றிய பாஜக அரசு எதிர்க்கட்சி தலைவர்களை சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை பயன்படுத்தி பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்து சிறையில் அடைத்து வருவது நாடறிந்ததே. இதுவரை இந்த அமைப்புகளால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், 95 சதமான வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீது போடப்பட்ட வழக்குகளாகவே உள்ளன.
இதன் ஒரு பகுதியாக ஒன்றிய அமலாக்கத்துறையினர், தமிழ்நாடு அமைச்சர் திரு.செந்தில் பாலாஜியை உள்நோக்கத்தோடு நள்ளிரவில் கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களாக அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தியதோடு நேற்று காலை (13.06.2023) அவரது வீட்டிலும் சோதனை நடத்தியுள்ளனர். நேற்று மாலை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரது அலுவலகத்தில் துணை ராணுவப் படையினரை குவித்து சோதனை மேற்கொண்டுள்ளனர். இச்சோதனை குறித்து தலைமை செயலாளருக்கோ, முதலமைச்சருக்கோ குறைந்தபட்ச தகவல் கூட அளிக்கவில்லை. இதன் மூலம் மாநில அரசை புறக்கணித்தும், மதிக்காத வகையிலும் அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை மேற்கொள்ளும் விசாரணைக்கு, தான் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், கேட்கும் ஆவணங்களை ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்த பின்னரும் சுமார் 8 மணி நேரம் அவரது வீட்டில் அவரை தனி அறையில் அடைத்து வைத்து நெருக்கடி கொடுத்துள்ளதோடு, நள்ளிரவில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இத்தனை பதற்றத்தோடு அமலாக்கத்துறை செயல்படுவது எதிர்க்கட்சியாக உள்ள திமுகவை பழிவாங்குவதாக உள்ளதுடன், மிரட்டி பணிய வைக்கும் நோக்கத்திலும் மேற்கொள்ளப்பட்டதாக உள்ளது. இத்தகைய அச்சுறுத்தும் அணுகுமுறையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாக கண்டிக்கிறது. மிரட்டல்கள் மூலம் பாஜகவுக்கு எதிரான குரல்களை முடக்க நினைப்பது ஒருபோதும் ஏற்கத்தக்கதல்ல. மேலும், தமிழ்நாடு மக்களும் இதற்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் என்பது தெளிவு.
ஒருவர் மீது புகார், குற்றச்சாட்டுக்கள் எழுமானால் அவரை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு சட்ட ரீதியான விதிமுறைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி விசாரணை மேற்கொள்வதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாது. ஆனால், மோடி அரசு மேற்கொண்ட மூர்க்கத்தனமான சட்டத்திருத்தத்தை பயன்படுத்தி முறையான குற்றச்சாட்டுக்களையோ, செந்தில்பாலாஜி மீதான வழக்கு விபரங்களையோ விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென நோட்டீசோ வழங்காமல் அதிரடியாக கைது செய்திருப்பது ஜனநாயக கோட்பாடுகளுக்கு விரோதமானதாகும்.
இந்த கைது நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன் ஒன்றிய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையினை கண்டித்து வலுவான எதிர்ப்புக் குரல் எழுப்பிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறது.