செய்தி அறிக்கை

பெண்ணாடம் பேரூராட்சி தூய்மை பணியாளர் பாபு மரணமும், தூய்மை பணியாளர் தேசிய ஆணைய உறுப்பினர் மா.வெங்கடேசன் அவதூறும்!ஆணைய உறுப்பினர் தனது தவறான பதிவை அகற்ற சிபிஐ(எம்) கடலூர் மாவட்டக்குழு வலியுறுத்தல்

Su Ve

அண்மையில் தூய்மை பணியாளர் தேசிய ஆணைய உறுப்பினர் மா.வெங்கடேசன் அவர்கள் ட்விட்டர் பதிவு ஒன்றை செய்திருந்தார். பெண்ணாடம் பேரூராட்சி 12வது வார்டு சிபிஎம் கவுன்சிலர் விஸ்வநாதன் கட்டாயப்படுத்தியதால் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த (பாபு என்ற) தூய்மை பணியாளர், அரிப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக பின்னர் மரணம் அடைந்தார் என்றும், இக்குற்றத்துக்காக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் எஸ்பி ஆகியோருக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பதிவுடன் சேர்த்து பாபு சாக்கடைக்குள் இறங்கி பணி செய்யும் வீடியோ ஒன்றை இணைத்திருந்தார்.

பெண்ணாடம் பேரூராட்சி கடலூர் மாவட்டத்தில் உள்ளது. அதன் 12வது வார்டு சிபிஎம் கவுன்சிலர் விஸ்வநாதன்.

சமூக பொருளாதார ஏணி படியில் கடைக்கோடியில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஏழை தொழிலாளியின் உயிரிழப்பு பெரும் சோகம். அதேசமயம் உண்மைகளின் அடிப்படையில் வெங்கடேசன் அவர்களது பதிவு இருந்திருக்க வேண்டும் என குறிப்பிட விரும்புகிறோம்.

முதலில் வெங்கடேசன் அவர்கள் பதிவு செய்த வீடியோ, விஸ்வநாதன் வார்டு சம்பந்தப்பட்டதல்ல.

அடுத்து அவர் பதிவிட்டிருந்த செய்தியின் உண்மை தன்மைக்கு வருவோம். 13.05.23 அன்று விஸ்வநாதன் வார்டுக்கு பாபுவும், மேலும் இருவரும் திறந்த சாக்கடை ஒன்றை சுத்தம் செய்யும் பணி செய்துள்ளனர். அப்போதும் கூட பாபு சாக்கடையில் இறங்கவில்லை. எனவே கவுன்சிலர் கட்டாயப்படுத்தினார் என்கிற பிரச்சனைக்கு இடமில்லை. அதன் பிறகு 19.05.23 வரை 6 நாட்கள் வெவ்வேறு வார்டுகளில் பாபு சாக்கடை சுத்தம் செய்யும் பணி செய்துள்ளார். (இதற்கான ஆவணங்கள் உள்ளன).

19.05.23 மாலை பாபு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளூர் மருத்துவமனைக்கு சென்றார். அடுத்த நாள் மயங்கி விழுந்து, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை உள்ளிட்டு அடுத்தடுத்து சிகிச்சை எடுத்து இறுதியில் திருச்சி காவேரி மருத்துவமனையில் 24.05.23 அன்று காலமானார்.

காவேரி மருத்துவமனையின் death summary, மூளை வீக்கத்துக்காக அறுவை சிகிச்சை செய்தும் பலனின்றி பாபு மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்று குறிப்பிடுகிறது. அதாவது கவுன்சிலருக்கும் இந்த மரணத்துக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது.

மரணத்தின் காரணம் அதிகாரபூர்வமாக வெளிவராத அன்றைய சூழலில், அரசு சார்பில் மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் அவர்கள், பாபுவின் தாயாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து இழப்பீடாக ரூ 3 லட்சம் அளித்துள்ளார். கள்ளச்சாராய மரணத்திற்கு தமிழக அரசு அளித்தது போல் ரூ 10 லட்சம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி ஊழியர் சங்க சார்பில் கலெக்டருக்கு கடிதம் அளிக்க பட்டுள்ளது.

இதற்கிடையே பாபுவின் மனைவி தீபா அவர்கள், காவல்துறைக்கு அளித்த புகாரில், தேதி, சம்பவங்கள், இறப்பின் காரணம் உட்பட உண்மைக்கு புறம்பாக பல செய்திகளை எழுதியுள்ளது வருந்தத்தக்கது. கவுன்சிலரை குற்றவாளி ஆக்கும் நோக்கத்தோடு தவறான விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

கணவரை இழந்து வாடும் தீபா அவர்களின் துன்பத்தை பகிரும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. அதே சமயம், சிபிஎம் மீதான காழ்ப்புணர்ச்சியோடு, அவரது துயரத்தை பயன்படுத்தி, தூண்டிவிட்டு, தவறாக புகார் கொடுக்க வைத்ததில், உள்ளாட்சி தேர்தலில் விஸ்வநாதனுடன் போட்டியிட்டு தோற்ற பாஜக வேட்பாளருக்கு பங்கு இருப்பதாக சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. ஒரு ஏழையின் உயிரை வணிகப் பொருளாக்குவது பற்றியெல்லாம் பாஜகவுக்கு கவலையில்லை.

அடுத்து, எவ்வித ஆதாரமும் இல்லாமல், சிபிஎம் மீது ஆணைய‌ உறுப்பினர் அவசர அவசரமாக ஏன் குற்றம் சாட்ட வேண்டும்? மேலும் அவரது பதிவின் பின்னூட்டத்தில், மதுரை சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன் மீது வசைமாரி பொழிகிறார். எனவே ஆணைய உறுப்பினரின் நோக்கம் சு.வெங்கடேசனையும், சிபிஎம் கட்சியையும் அவதூறு செய்வதுதான், அதற்காக ஆணையத்தின் அந்தஸ்தை தவறாக பயன்படுத்துகிறார் என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியுள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது.

தூய்மை பணியாளர்களின் நிலைமை துயரமாகவே தொடர்கிறது. அதனை மேம்படுத்த சிபிஎம் விடாமல் போராடி வருகிறது. வரும் காலத்திலும் இப்பணி தொடரும். தமிழகம் முழுவதும், கடலூர் மாவட்டத்திலும் நடந்த மலக்குழி மரணங்களில் தலையிட்டு போராடி நீதி பெற்றுக் கொடுத்துள்ளது.

உண்மை இப்படியிருக்க, பாதிக்கப்பட்டவர் பட்டியலினத்தவர் என்பதால் சிபிஎம் எம்.பி. கண்ணையும் வாயையும் மூடி கொண்டிருக்கிறார் என ஆணைய உறுப்பினர் பதிவிடுவது பொய் என்பது மட்டுமல்ல, விஷமத்தனமானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது.
தீண்டாமை உள்ளிட்ட சமூக கொடுமைகளை சமரசம் இன்றி எதிர்த்து வரும் எங்கள் இயக்கத்திற்கு திட்டமிட்டு அவப்பெயர் ஏற்படுத்துவதையும், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, சிபிஎம் எம்.பி.யை அவதூறு செய்வதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஆணைய உறுப்பினர் தனது தவறான பதிவை அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட குழு சார்பில் வலியுறுத்துகிறோம்.
கோ.மாதவன்

கடலூர் மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்)