காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டின் சார்பில் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கும் மேலான சட்டப்போராட்டம் நடத்தி உச்சநீதிமன்ற இறுதித்தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நீர் பங்கீடு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன அடிப்படையில் இத்தீர்ப்பினை ஏற்று செயல்படுத்துவதே சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசியல் கடமையாகும்.நடப்பாண்டில் காவிரி நீரை நம்பி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கருக்கும் மேல் மேற்கொள்ளப்பட்ட குறுவை சாகுபடி போதிய தண்ணீர் கிடைக்காததால் கருகி அழியும் நிலையில் உள்ளது. பல ஆயிரம் ரூபாய் செலவழித்து சாகுபடி செய்த விவசாயிகள் வேதனையில் மூழ்கியுள்ளனர். இதே நிலைமை நீடிக்குமானால் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி விடுமோ என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். காவிரியில் தமிழ்நாட்டிற்கான பங்கு நீரை பெறுவதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்தை தொடர்ந்து அணுகி வற்புறுத்தியது, ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து முறையிட்டது, இறுதியாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது போன்றவைகள் மூலம் தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் செப்டம்பர் மாதம் வரை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 108.4 டி.எம்.சி. அளவில் இதுவரை 39.8 டி.எம்.சி. அளவு மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள தண்ணீரை வழங்கி குறுவை சாகுபடியை காப்பாற்ற வேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் முழுமையாக பரிசீலிக்காமல் இழுத்தடித்து வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து கர்நாடக அரசு தொடுத்த வழக்கினை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் தண்ணீர் திறந்து விட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் திறப்பதை கர்நாடகத்தில் உள்ள பாஜகவினரும், அதன் ஆதரவு அமைப்புகளும் எதிர்த்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் இப்போராட்டத்திற்கு பாஜக தலைமை தாங்குவது தமிழ்நாட்டிற்கு இழைக்கும் துரோகமாகும். மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்பது, கேள்விக்குள்ளாக்குவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானதாகும். அரசியல் ஆதாயம் கருதி கர்நாடகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு செவிமடுத்து தண்ணீரை திறந்து விட மாட்டோம் என மீண்டும், மீண்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அணுகி தமிழ்நாட்டின் உரிமையை கர்நாடக அரசு மறுப்பதும் தேவையற்ற சட்ட போராட்டங்களுக்கும், நீதிமன்ற அவமதிப்புக்கும் உள்ளாவதோடு தமிழ்நாடு, கர்நாடக மக்களின் சகோதர உணர்வுக்கு விரோதமாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துள்ள மழையின் அளவு அடிப்படையில் தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீடு தண்ணீரை வழங்காமல் தங்களது நீர்த்தேவை பூர்த்தி அடைந்த பின்னரே தண்ணீர் அளிக்க முடியும் என்ற கர்நாடக அரசின் அணுகுமுறை உலக அளவிலான நீர் பங்கீட்டு விதிமுறைகளுக்கு முரணானது என்பதை சுட்டிக்காட்டுவதோடு, கிடைத்துள்ள நீரில் பற்றாக்குறை சதவிகித அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் அளித்திட வேண்டுமென சிபிஐ (எம்) மாநில செயற்குழு சார்பில் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம். |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > செய்தி அறிக்கை > அரசியல் ஆதாயம் கருதி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்ப்பதா? சிபிஐ(எம்) கண்டனம்
அரசியல் ஆதாயம் கருதி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்ப்பதா? சிபிஐ(எம்) கண்டனம்
25 September 2023190 views
posted on