கட்சியின் மத்தியக்குழு அறைகூவலின் அடிப்படையில், விலைவாசி உயர்வை கண்டித்தும், வேலை வாய்ப்பை உருவாக்கிட கோரியும், ஒன்றிய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தும் மாநிலம் முழுவதும் செப்டம்பர் 1 – 6 ஆம் தேதி வரை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது என்றும், தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என்றும், செப்டம்பர் 7 ஆம் தேதி ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் இரயில் முன்பு மறியல் நடத்துவது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு முடிவெடுத்தது.
அதனடிப்படையில், கடந்த ஒரு வார காலமாக லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் பிரச்சாரம் நடைபெற்றது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாநிலம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட மையங்களில் மறியல் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதில் கணிசமான பெண்களும், இளைஞர்களும் பங்கேற்றனர். இந்த மறியல் இயக்கத்தில் மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் தலைமை ஏற்றனர்.
கொளுத்துகின்ற வெயிலில் ஆண்களும், பெண்களும் ஆயிரம் ஆயிரமாய் மோடி அரசுக்கு எதிராக உற்சாகமாக இந்த போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டது மோடி அரசு மீது மக்களுக்கு உள்ள வெறுப்பை காட்டுகிறது. மேலும், இந்த மறியல் போராட்டம் என்பது ஒன்றிய மோடி அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும்.
மறியலில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.