சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேரும், மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் நாட்டுவெடி தயாரிக்கும்போது 4 பேரும், அரியலூர் மாவட்டம் விரகளூர் கிராமத்தில் நாட்டுவெடி தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட விபத்தில் 11 பேரும் உடல் சிதறி பலியான சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. விபத்தில் பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு தெரிவித்துக் கொள்கிறது. மேலும், விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவருவோர் விரைவில் குணமடைய விழைகிறோம்.
விபத்தில் உயிரிழந்தோருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் நிவாரணத் தொகையினை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், இத்தொகை இறந்தவர்களின் குடும்பத்தினரின் எதிர்கால வாழ்விற்கு போதுமானதாக இருக்காது. எனவே,தமிழக அரசு நிவாரணத் தொகையினை தலா ரூபாய் 10 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். இதேபோன்று ஒன்றிய அரசு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்சம் வழங்கிடவும் வலியுறுத்துகிறோம்.
இத்தகைய பட்டாசு விபத்துகள் தொடர்ந்து நடைபெறும் சூழலில் அரசு விதிகளை முறையாக கடைபிடிப்பதற்கும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு பட்டாசு தொழில் நடைபெறுவதையும் அரசு உறுதிப்படுத்திட வேண்டும். மேலும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்துவதோடு இதற்கான பிரிமீயம் தொகையினை சம்பந்தப்பட்ட பட்டாசு நிறுவனங்கள் செலுத்திட வழிவகை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு தொழிலாளர் நல வாரியத்தை செயல்படுத்துவதுடன் நலவாரியத்தின் மூலம் இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
(கே.பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்