செய்தி அறிக்கை

பணி நிரந்தரம் கோரி போராடிய செவிலியர்கள் கைது சரியல்ல! பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும்! சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

செவிலியர்கள் கைது சரியல்ல! Copy

மருத்துவ தேர்வு ஆணைய தேர்வில் தேர்ச்சி பெற்ற செவிலியர்கள், கடந்த அதிமுக ஆட்சியின் போதே தங்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்து போராடி வந்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டம் அறிவித்து அதற்காக கூடியபோது அவர்களை தடுத்து நிறுத்தி காவலர்கள் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாக செவிலியர்களோடு பேசுவதுடன் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த நிலையில் பணிக்கு எடுக்கப்பட்ட செவிலியர்களுக்கு முதலில் பணி நீட்டிப்பு மறுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியின் இந்த மோசமான முடிவிற்கு எதிராக செவிலியர்கள் போராட்டத்திற்கு தள்ளப்பட்டனர். அதற்கு பின்னரும், கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் செவிலியர்கள் கடும் பணியாற்றினர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுகவின் தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் எம்.ஆர்.பி செவிலியர்கள் நிரந்தர பணி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில், இரண்டாம் கட்ட செவிலியர் பணி நியமனத்தை விரைவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியே இன்றைய போராட்டம் அறிவிக்கப்பட்டது.

ஆனால், அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்ட ஆண் காவலர்கள், போராட்டத்தின்போது கடும் அத்துமீறலில் ஈடுபட்டு செவிலியர்களை கைது செய்துள்ளனர். இந்த போக்கு பிரச்சனையை தீர்ப்பதற்கு எந்த விதத்திலும் உதவாது. பெருமளவு பெண்கள் பங்கேற்கும் போராட்டத்தை கையாள ஆண் காவலர்களை அனுப்பிய உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணி நீட்டிப்பு, கூடுதல் சம்பளம் மற்றும் பணி நிரந்தரம் ஆகிய வாக்குறுதிகளை நிறைவேற்றிட பேச்சுவார்த்தையை தொடங்கிட வேண்டுமெனவும், கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

(கே.பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்

CPIM Tamilnadu
the authorCPIM Tamilnadu