மாநிலக் குழு

தீர்மானம் – 2 போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு! சுமூகத் தீர்வு காண சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!

2

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நேற்று (05.01.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

            அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் தங்களது நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9, 2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளன. ஊதியம் குறித்த பேச்சுவார்த்தையைத் துவக்குவது, ஓய்வுபெற்றோருக்கு 90 மாதங்களாக வழங்காத பஞ்சப்படி உயர்வை வழங்குவது, காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகள் பிரதான கோரிக்கைகளாக உள்ளன. இப்பிரச்சனையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு சிவசங்கர் தொழிற்சங்கங்களுடன் 05.01.2024 அன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மீண்டும் 07.01.2024 அன்று பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்துள்ளார்.

            இந்தப் பின்னணியில் போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது. போக்குவரத்துத் துறை அமைச்சர் முதல்வரிடம் கலந்தாலோசித்து வருவதாக கூறியிருப்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக, போக்குவரத்து தொழிலாளர்களின் ஒட்டுமொத்த கோரிக்கைகளையும் ஏற்காமல் வஞ்சித்தது. கடந்த 2015 முதல் ஓய்வுபெற்ற ஊழியர்களின் பஞ்சப்படி உயர்வு தொகையை வழங்காமல் பாக்கி வைத்து இத்தொழிலாளர்களை பழிவாங்கியது.

            இந்நிலையில், நீடித்து வந்த ஊதிய உயர்வு பிரச்சனையை 2021ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு முடிவுக்கு கொண்டு வந்தது. அதேபோல், ஒய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஒருபகுதி பணப் பயன்களை அளித்தது பாராட்டுக்குரியதாகும். எனினும், போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் பஞ்சப்படி உயர்வு தொகை கிடைக்காமல் அன்றாட வாழ்வுக்கே அவதிப்பட்டு வருகின்றனர். இவைகளை கணக்கில் கொண்டு தமிழக அரசு தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்