இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நேற்று (05.01.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
நாடு முழுவதும் இருக்கிற கோடிக் கணக்கான விவசாய தொழிலாளர்கள் பெரும் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர். ஒன்றிய, மாநில அரசுகள் அவ்வப்போது கிராமப்புற மக்களுக்கு வழங்கும் கடன் தள்ளுபடி, வட்டி தள்ளுபடி, வரிச்சலுகை உள்ளிட்ட எந்த சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. வேலை வாய்ப்புகளை இழந்து நகர்ப்புறங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் புலம் பெயர்ந்து வாழும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நெருக்கடியின் காரணமாக விவசாய தொழிலாளிகளின் தற்கொலைகள் அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இவர்களை பாதுகாக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை சரிபாதியாக குறைத்து கிராமப்புற தொழிலாளர்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் பறித்துள்ள மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் ஆதார் இணைப்புடன் கூடிய ஊதிய பரிவர்த்தனை செய்யும் வகையில் வேலை அட்டைகளை மாற்றிட அறிவிப்பு வெளியிட்டு அதற்கான தரவு தளத்தையும் செயல்படுத்தியது. வேலை அட்டைகள் வைத்திருக்கும் அனைத்து மக்களையும் இணைக்கும் வகையில் இதை முழுமையாக நிறைவேற்றிட போதிய உதவிகளை மேற்கொள்ளாமல் டிசம்பர் 31ந் தேதியுடன் தரவு தளத்தை கால நீட்டிப்பு செய்யாமல் மூடியுள்ளது.
இதனால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தில் நாடு முழுவதும் 25.5 கோடி தொழிலாளர்கள் பதிவு செய்து வேலை அட்டை வைத்துள்ளனர். இவர்களில் 14.35 கோடி பேர் மட்டுமே தொடர்ச்சியாக வேலைக்கு செல்பவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 11 கோடி பேர் செயல்படாத வேலை அட்டை வைத்திருப்பதாக கருதப்பட்டுள்ளனர். இது தவிர ஆதார் அட்டை இல்லாத 1.80 கோடி பேருக்கு இனி வேலையில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் இந்த அறிவிப்பால் சில லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இத்திட்டத்தில் பணியாற்றும் 90 சதமான கிராமப்புற பெண்கள் மற்றும் ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் நோக்கோடு செயல்படும் ஒன்றிய பாஜக அரசின் இந்நடவடிக்கை வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
எனவே, ஆதார் அட்டையுடன் இணைத்து ஊதியம் வழங்கும் முறையுடன் இச்சட்டத்தை இணைத்திடும் உத்தரவை ரத்து செய்திட வேண்டுமெனவும், 100 நாள் வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து விவசாய தொழிலாளர்கள் வலுமிக்க போராட்டங்களை நடத்திட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்