செய்தி அறிக்கை

தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்ட சட்டம் நிறைவேற்றம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) வரவேற்பு! தமிழக முதல்வருக்கு பாராட்டு!!

Cpim 1 Copy

50 ஆண்டுகளாக இந்திய நாட்டில் ஒன்றிய அளவிலும், மாநிலங்களிலும் செயலாக்கப்பட்டு வரும் பட்டியல் சாதி, பழங்குடியினர் துணைத் திட்டங்கள் எழுத்திலும் எண்ணத்திலும் முறையாக அமலாக்கப்பட அதற்கு சட்ட வடிவம் தர வேண்டுமென நீண்ட காலமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தி வந்துள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக பாடுபடும் பல்வேறு அமைப்புகளும் இதற்கான குரலை எழுப்பி வந்துள்ளன. இப் பின்புலத்தில் இந்த சட்டம் தமிழ்நாட்டில் நிறைவேற்றி இருப்பது, பட்டியல் சாதி, பழங்குடி மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுவதோடு உரிய ஒதுக்கீடு, நிதி பயன்பாடு, வளர்ச்சி இடைவெளிகளை சமன் செய்தல், கண்காணிப்புக்கான நிர்வாக கட்டமைப்பு ஆகியனவற்றை முறைப்படுத்த பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமேதுமில்லை.

ஒன்றிய மோடி அரசு பட்டியல் சாதி, பழங்குடி துணைத் திட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத் திட்டங்களின் நெறிகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு இச் சட்டத்தை நிறைவேற்றி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்த நகர்வு ஆகும். இந்தியா முழுமையும் சமூக நீதிக்கான பயணத்தை இம்முடிவு வலுப்பெற செய்யும் என கருதுகிறோம்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்ட சட்டத்தை நிறைவேற்றியுள்ள தமிழக முதல்வருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாராட்டுக்களையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தெரிவித்துக் கொள்கிறது.

(கே.பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்